ஒரு திரைப்படம் ஏன் உருவாக்கப்படுகிறது? இந்த கேள்விக்குப் பல பதில்கள் கிடைக்கும். அதில் ஒன்று, சம்பந்தப்பட்ட இயக்குனரோ அல்லது கதாசிரியரோ அல்லது இதர கலைஞர்களுடன் ஒன்று சேர்ந்தோ உருவாக்கும் ஒரு உலகம்.
அது பார்ப்பவர்களுக்குப் பிடிக்கிறதா இல்லையா என்பதைப் பொறுத்து, அதன் வெற்றி அமையும்.
புதுமுக இயக்குனர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் விமல், பாண்டியராஜன், அனிதா சம்பத், ஆடுகளம் நரேன், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘தெய்வ மச்சான்’ படம் பார்த்தபோது, இது யாருக்குப் பிடித்தமான படைப்பாக இருந்திருக்கும் என்ற கேள்வி எழுந்தது.
சாதாரண மச்சான் இல்ல..!
திண்டுக்கல் அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் ’தெய்வ மச்சான்’ கதை நிகழ்கிறது. அந்த ஊரில் மின் சாதனக் கடை வைத்திருப்பவர் கார்த்தி (விமல்).
சிறுவயதிலேயே அவரது தாய் இறந்துவிட, தந்தை மற்றும் சகோதரர், சகோதரியோடு வாழ்ந்து வருகிறார்.
கார்த்தியின் சகோதரருக்கு ஒரு மகனும் மகளும் உண்டு. தங்கை தேன்மொழிக்கு (அனிதா சம்பத்) மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர். ஒவ்வொரு வரனும் ஏதேனும் ஒரு தடங்கலால் தட்டிப் போகிறது.
இந்தச் சூழலில், ஒரு ஜமீன்தார் குடும்பம் தேன்மொழியைப் பெண் பார்க்க வருகிறது. அந்த மாப்பிள்ளைக்கு வயது அதிகம்; அதனைக் கேள்விப்பட்டதும், கார்த்தியின் குடும்பம் அவர்களை விரட்டியடிக்கிறது.
அதனால் அந்த ஜமீன்தாரும் அவரது சகோதரரும் கோபமுறுகின்றனர்; தேன்மொழியை எவரும் திருமணம் செய்துவிடாதபடி சதிகள் செய்கின்றனர்.
அதையும் மீறி, ஒரு மாப்பிள்ளையுடன் தேன்மொழிக்குத் திருமணம் நிச்சயமாகிறது. அதில் புகுந்து கலாட்டா செய்ய, சிலரை ஏவி விடுகிறார் ஜமீன்தார்.
எதுவும் பலன் தரவில்லை. இறுதியாக, கார்த்தியைத் தாக்கி மயக்கமுறச் செய்து திருமணத்தை நிறுத்த முயற்சிக்கின்றனர்.
மயக்கம் தெளிந்து எழும் கார்த்தியோ, ‘தங்கையின் திருமணம் நின்று போயிருக்க வேண்டும்’ என்று எண்ணுகிறார். ஆசை ஆசையாய் வளர்த்த தங்கையின் திருமணம் நிற்க வேண்டுமென்று அவர் நினைப்பது ஏன்?
அதற்கு ஒரு கனவே காரணம். அந்த கனவில் வரும் சாட்டைக்காரர் (வேல.ராமமூர்த்தி) சொன்னதெல்லாம் இதுவரை உண்மையாயிருக்கிறது. இந்த முறை ‘உன் தங்கச்சி புருஷன் மச்சான் ரெண்டு நாள்ல செத்துடுவான்’ என்பதே அவர் உதிர்த்த வார்த்தைகள்.
அது பூதாகரமாகி, தங்கையின் கணவர் மாண்டுவிடக்கூடாது எனும் எண்ணத்தில், ‘முன்னெச்சரிக்கை முத்தண்ணா’வாக மாறுகிறார் கார்த்தி. அதாகப்பட்டது, ‘நான் சாதாரண மச்சான் இல்ல.. தெய்வ மச்சான்’ என்று அவர் உருமாறுவது தான் படத்தின் கதை.
ட்ரெய்லரில் அப்பட்டமாகத் தெரிந்த கதை தான். ’ஆஹா, காமெடிக்கு உத்தரவாதம்’ என்ற நம்பிக்கையில் தியேட்டருக்குள் நுழைந்தால், சுவற்றில் அடித்த பந்தாகத் திரும்பி வரும் அளவுக்கே இருக்கிறது நிலைமை.
நல்ல வாய்ப்பு!
தங்கைக்குச் சரியான மாப்பிள்ளை கிடைக்காத வருத்தம், தடைகளை மீறி தங்கையின் திருமணம் நடக்க வேண்டும் என்று பதைபதைப்பு, கனவில் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு ஏற்படும் குழப்பம் என்று பல்வேறு விஷயங்கள் நாயகன் ஏற்ற பாத்திரத்தின் முதுகில் ஏற்றப்பட்டிருக்கின்றன.
ஆனால், ’அப்படியா தெரியுது’ என்பது போலவே படம் முழுக்க வந்து போயிருக்கிறார் நாயகன் விமல்.
அவரது தந்தையாக நடித்த பாண்டியராஜனோ, வயது முதிர்ச்சியில் உடலளவிலும் குரலளவிலும் தடுமாறுகிறார்.
அனிதா சம்பத், திரையில் இளமையாகத் தோன்றியிருக்கிறார். ஆனால், நடிப்பில் தனித்துவத்தை நிரூபிக்க வாய்ப்பு தரப்படவில்லை.
அவரது கணவராக வரும் வத்சன் வீரமணி, ‘நான் நல்லா நடிப்பேங்க’ என்றவாறே ஒவ்வொரு பிரேமிலும் தோன்றியிருக்கிறார். அதற்கும் பலன் இல்லை.
இப்படத்தில் பலருக்கும் இதே நிலைமைதான்.
நாயகி நேகா ஜா, அவ்வப்போது அதீத மேக்கப்பில் கேமிராவை பார்த்து சிரிக்கிறார். அதற்கு மேல் இடம் தரப்படவில்லை.
ஆடுகளம் நரேன், தீபா சங்கர், அவரது கணவராக வரும் கிச்சா ரவி உட்படப் பலர் திரையில் சிரிப்பூட்ட முயற்சித்திருக்கின்றனர். அவர்களை எல்லாம் மீறி, பால சரவணன் மட்டுமே அவ்வப்போது தன் மதுரை வட்டார மொழியில் நம்மை கிச்சுகிச்சு மூட்டுகிறார்.
கேமில் ஜே.அலெக்ஸின் ஒளிப்பதிவில், கதை நிகழும் களம் விரிவாகக் காட்டப்படவில்லை. எல்லா காட்சிகளிலும் இது தொடரும்போது, படம் முழுக்க ‘க்ளோஸ் அப்’ மற்றும் ‘மிட்’ ஷாட் மட்டும்தானா என்ற சந்தேகம் எழுகிறது.
படத்தொகுப்பாளர் எஸ்.இளையராஜா, தன் மேஜையில் நிரப்பப்பட்டிருந்த காட்சிகளை மொத்தமாகக் கோர்த்திருக்கிறார். ஒரு ரசிகராக இந்த படத்தை ஒருமுறை கூட பார்க்கவில்லை என்பது தெளிவாயிருக்கிறது.
இசையமைப்பாளர் அஜீஸ் தன் கிராமிய இசையால் பின்னணி அமைத்தபோதும், காட்சிகள் ஏதும் மனதில் ஒட்டவில்லை. காட்வின் கோடானின் பாடல்கள் அதையும் செய்யவில்லை.
இந்த கதையை வைத்துக்கொண்டு, வாய் விட்டுச் சிரிக்க வைத்து வயிற்று வலியோடு ரசிகர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கலாம்.
ஒரு நல்ல வாய்ப்பினை நழுவ விட்டிருக்கிறார் இயக்குனர் மார்ட்டின் நிர்மல் குமார்.
இத்தனைக்கும், இந்த கதை குறும்படமாக வெளியாகி வரவேற்பைப் பெற்றதாகத் தகவல்.
தெனாலி ரெபரென்ஸ்!
‘தெய்வ மச்சான்’ என்ற வார்த்தையைப் பிரபலமாக்கியது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ‘தெனாலி’. அந்த படத்தில் மாமன் – மச்சான் ஆக மாறும் கமல் – ஜெயராம் இடையே ஒரு ‘டாம் & ஜெர்ரி’ ரக மோதல் இருக்கும்.
உண்மையில், ஜெயராம் பாத்திரம் தான் களேபரங்களுக்குக் காரணமாக இருக்கும். சந்தர்ப்பவசத்தால் அதனை நன்மைகளாக எடுத்துக்கொள்ளும் கமலின் பாத்திரம். அப்போது அவர் உச்சரிக்கிற வசனங்களில் ஒன்று, ‘நீங்க சாதாரண மச்சான் இல்ல தெய்வ மச்சான்’ என்பது.
அதுவே, இந்த ‘தெய்வ மச்சான்’ படம் மீது கவனம் குவியக் காரணம். ஆனால், இந்த படத்தில் துளி கூட தெனாலி ரெபரென்ஸ் ஏதும் இல்லை. சரி, அதேபோன்று சிரிக்க வைக்கிறதா என்றால் அதுவுமில்லை.
பல காட்சிகள் முழுமையாக எழுதப்படவில்லை. அது, சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகளால் கவனிக்கப்பட்டதா என்று கூடத் தெரியவில்லை.
தாயின் புகைப்படம் முன்பாக நின்றுகொண்டு, தங்கைக்கு இந்த மாப்பிள்ளையாவது அமைய வேண்டுமென்று விமல் வேண்டுவார். அப்போது, அவரது அண்ணன் மகன் கால் இடறிக் கீழே விழுவார். படத்தில் இது நான்கு முறை வரும்.
தாயின் ஆன்மாவுக்கு, அந்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்பதே இதனால் நாம் அறிய வரும் சேதி. திரைக்கதையில் அது தெளிவுற விளக்கப்படவில்லை.
குதிரையில் வரும் ராமமூர்த்தி சொல்வதெல்லாம் ஏன் உண்மையாகிறது என்பதற்கும் பதில் இல்லை. அது யார் என்ற கேள்விக்கும் கூட பதில் இல்லை.
திருமணத்தை நடத்த வில்லன் கும்பல் மேற்கொள்ளும் முயற்சிகளோ, மச்சானைக் காக்க ஹீரோ மேற்கொள்ளும் நடவடிக்கைகளோ கூட திரைக்கதையில் விரிவாக இல்லை. அவற்றைத் தவிர, மற்றனைத்தையும் விலாவாரியாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.
கதாபாத்திரங்கள், காட்சிகள், பாடல் மற்றும் சண்டைக்காட்சிகளுக்கு முன்பான பில்டப் என்று எதுவுமே தெளிவுற வடிவமைக்கப்படவில்லை.
இதையும் மீறி டப்பிங்கில், ரீரிக்கார்டிங்கில் படத்திற்கு உயிர் தர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெளிவாகிறது. அப்படியிருந்தும், சோதனை தீர்ந்தபாடில்லை.
நாளிதழ்களில் கையில் துப்பாக்கியோடு நுழைந்த ஒரு மர்ம நபர் கண்ணில் படும் மனிதர்களை எல்லாம் சுட்டுத் தள்ளினார் என்று நாளிதழ்களில் அவ்வப்போது சில செய்திகள் வருமே. அதேபோல, கொலவெறி கொண்டவனாக ரசிகர்களைப் பதம் பார்த்திருக்கிறார் இந்த ‘தெய்வ மச்சான்’!
– உதய் பாடகலிங்கம்