கலாஷேத்ரா விவகாரம்: உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

கலாஷேத்ரா கல்லூரியில் நடந்த பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்றமே விசாரணைக் குழுவை நியமிப்பது குறித்து விளக்கமளிக்குமாறு கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக விசாரணை நடத்த, முன்னாள் நீதிபதி கே.கண்ணன் தலைமையில் தனி விசாரணை குழுவை கலாஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் அமைத்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஏழு மாணவிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர கலாஷேத்ரா நிர்வாகம் தவறி விட்டதாக கூறப்பட்டது.

மாணவிகள் மற்றும் பெற்றோர் இடம்பெறும் வகையில் விசாரணைக் குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், குழுவில் கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் இடம்பெறக் கூடாது என்றும் முறையிடப்பட்டது.

ஏற்கனவே மாணவிகள் புகார் அளித்திருந்த நிலையில், கலாஷேத்ரா நிர்வாகம் தாமாக முன் வந்து குழு அமைத்தது சட்ட விரோதம் என்றும் மாணவிகள் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கல்லூரி வளாகத்திற்குள் வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாக கலாஷேத்ரா தரப்பில் வாதிடப்பட்டது. 

வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, இந்த வழக்கு குறித்து விசாரணை செய்த தமிழ்நாடு மகளிர் ஆணையம் அளித்துள்ள அறிக்கையை நீதிமன்றத்தில் சீல் செய்யப்பட்ட கவரில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

அதோடு பாலியல் புகாரை விசாரிப்பதற்கான குழுவை நீதிமன்றமே அமைக்கலாமா என்பது குறித்தும் கலாஷேத்ரா நிர்வாகமும், மத்திய அரசும் பதில் தர உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 24ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

You might also like