ரஜினி, விஜய் படத்திற்கு மட்டும் தனி நீதியா?

 – ‘இராமானுஜர்’ பட தயாரிப்பாளர் ஆவேசம்

ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்து காலகட்டத்திலேயே ஆன்மீகத்தில் சமூக புரட்சி செய்த ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் தயாரிப்பாளர் T. கிருஷ்ணனே இராமானுஜராக நடித்துள்ளார். மேலும் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் முதல் பாடல் மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்துகொண்டு நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசியபோது, “இது புராண படம் இல்லை. சரித்திர படம்.

1000 வருடங்களுக்கு முன் வாழ்ந்து சாதனை புரிந்த மகானைப் பற்றிய படம். எல்லோரும் கடவுள் முன் சமம் என்று 1000 வருடங்களுக்கு முன்பே புரட்சி செய்தவர்.

இந்த கால இளைஞர்களுக்கு இந்தப் படத்தை கொண்டுபோய் சேர்க்கவேண்டிய பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு இருக்கிறது.

இந்தப் படத்தை எல்லோரும் பார்க்கும் விதமாக அரசும் உதவி செய்யவேண்டும் என்று முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்” என்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் 24ஆம் பட்டம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோபர் இராமானுஜர் சுவாமிகள் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “இன்றைய தினம் நாம் எல்லோரும் ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும்.

நாம் இராமானுஜர் காலத்தில் இல்லையென்றாலும் இந்தப்படம் மூலம் நம்மை ராமானுஜர் காலத்துக்கு கொண்டுபோயிருக்கார் தயாரிப்பாளர் கிருஷ்ணன். இந்தப் படம் வெற்றிப்படமாக அமையும்” என்று வாழ்த்தினார்.

நடிகர் ராதாரவி, “இங்கு ஆத்திகம், நாத்திகம் என்று வெவ்வேறு கருத்துகள் பேசப்படுகிறது. அப்படியெல்லாம் பேசக்கூடாது.

ஏனென்றால் ஆத்திகம் இல்லாமல் நாத்திகம் கிடையாது; நாத்திகம் இல்லாமல் ஆத்திகம் கிடையாது.

அந்த காலத்திலேயே சீர்த்திருத்த கருத்துக்களை பேசி எல்லோரையும் சமமாக நினைத்தவர்தான் இராமானுஜர்.

இந்தப் படத்தில் இராமனுஜராகவே வாழ்ந்திருக்கும் கிருஷ்ணனுக்கு நிச்சயம் விருது கிடைக்கும்” என்றார்.

படத்தின் தயாரிப்பாளரும் இராமானுஜர் வேடத்தில் நடித்திருப்பவருமான தி.கிருஷ்ணன் பேசியதாவது, “இது ஒரு பீரியட் படம். படத்தின் டீசர் வெளியானபோது. ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்தனர்.

இளையராஜா சார் என்னை அழைத்து அதுப்பற்றி விசாரித்தார். 2018ஆம் ஆண்டிலேயே வெளியாகியிருக்க வேண்டிய படம். பல்லேறு சூழல்களால் தாமதமாகிவிட்டது.

இராமானுஜர் மீதும் என் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கு. இந்தப் படத்தை தயாரித்ததை நான் பாக்கியமாக நினைக்கிறேன்.

இப்படத்திற்கு இதில் நடித்த நடிகர்கள் தவிர வேறு யாருமே சப்போர்ட் பண்ணவில்லை.

சில பிரச்சினைகள் வந்தபோது தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டுகொள்ளவே இல்லை.

முறைப்படி பதிவு செய்திருந்தபோதும் மற்ற படங்களுக்கும் இதே தலைப்பை வைக்க அனுமதி கொடுப்பது என்ன நியாயம்? பிரச்சனைகளை தீர்க்கதானே தயாரிப்பாளர்கள் சங்கம் இருக்கு?

ஆயிரம் வருடங்களுக்கு முன் இராமானுஜர் சமூக நீதிக்காக என்னவெல்லாம் செய்தார் என்று இந்தப் படம் பார்க்கும்போது புரியும். இந்தப் படத்திற்கு மீடியா பெரிய அளவில் ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

You might also like