கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்!

– அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதுகாப்பு ஒத்திகையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

அதன்பிறகு கொரோனா தொற்று பரவல் குறித்து விளக்கமளித்த அவர், “நாடு முழுவதும் கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருவதால் இந்த முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி இன்றும், நாளையும் நடக்கிறது.

அரசின் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த ஒத்திகை நடைபெறும்.

தமிழகத்தில் பாதிப்புக் குறைவாகவே உள்ளது. 329 பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களும் மருத்துதவர்களின் ஆலோசனைப்படி வீடுகளிலேயே சிகிச்சை பெறுகிறார்கள்.

தற்போது பரவி வரும் வைரசின் வீரியம் குறைவு தான். எனவே, பாதிப்பு இருக்காது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

தமிழகம் முழுவதும் 64 ஆயிரத்து 281 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 33 ஆயிரத்து 664 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை ஆகும். ஆக்சிஜனை பொறுத்தவரை 2 ஆயிரத்து 67 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சேமிக்கும் வசதி உள்ளது.

2-வது அலையின் போது 500 மெட்ரிக் டன் சேமிக்கும் வசதி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யும் வசதி அரசில் 78 இடங்களிலும் தனியாரிடம் 264 இடங்களிலும் உள்ளன.

தற்போது கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு மட்டுமே ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்படுகிறது. தினசரி சுமார் 4 ஆயிரத்து 500 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இனி 11 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்” எனக் கூறினார். 

You might also like