– அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகம் (டாம்ப்கால்) தயாரித்துள்ள 6 அழகுசாதனப் பொருட்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகப்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவல் குறித்து விளக்கமளித்தார்.
அப்போது “தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்த வகை கொரோனா தொற்று மருத்துவமனைகளில் மட்டும்தான் வேகமாக பரவும் தன்மை உடையதாக இருக்கின்றது. எனவே அங்கு முகக்கவசம் கட்டாயம் என்று அறிவுறுத்தியிருக்கிறோம்.
ஆனால், பாதுகாப்பு அவசியம் கருதி முகக்கவசங்களை எப்போதும் அணிந்திருப்பது தவறில்லை.
நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதற்கு முகக்கவசங்கள் அவசியம் என்பதை மக்கள் உணர்ந்து அதிகம் கூட்டம் கூடும் இடங்களில் முகக்கவசங்கள் அணிவது மிகவும் நல்லது.
தற்போதைய கொரோனா தொற்று குறித்து நாம் பெரிய அளவில் பதற்றம், அச்சப்பட வேண்டியதில்லை.
இந்த பாதிப்பு வந்தால் 5 நாட்கள் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக்கொள்ளவும், மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று மருந்துகள் எடுத்துக் கொள்ளவும் வேண்டும்” என்று கூறினார்.