ஒரு கமர்ஷியல் படம் ரசிகர்களை ஈர்க்க, இதுவரை நாம் பார்த்திராத கதையோ, காட்சிகளோ இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.
வழக்கமான கதை, காட்சிகள் என்றபோதும், புதிதென்று எண்ணும் வகையில் வடிவமைத்திருந்தாலே போதும்; திரையில் அது பெரும் வரவேற்பைப் பெறும்.
கன்னடத்தில் வெளியான ‘முஃப்தி’ திரைப்படம் அதனை மெய்ப்பித்தது. அதனைத் தழுவி, ‘பத்து தல’ தந்திருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா.
சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், அனு சித்தாரா, கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
யார் ஹீரோ?
விலையில்லா தடுப்பூசி எனும் திட்டத்தை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தும் முதலமைச்சர் (சந்தோஷ் பிரதாப்), நள்ளிரவில் தன் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி வெளியே செல்லும்போது மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார்.
அவரது மனைவியோ, அந்த சம்பவத்தில் துணை முதலமைச்சர் நாஞ்சிலாருக்கு (கவுதம் மேனன்) சம்பந்தமிருப்பதாகப் புகார் தெரிவிக்கிறார். அதன்பிறகு, வேறொரு அமைச்சர் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்.
சம்பந்தப்பட்ட கட்சியினர் அந்த வழக்கை மறந்துபோனாலும், புலனாய்வு அதிகாரிகள் அதனை விடுவதாக இல்லை.
கடத்தப்பட்ட முதலமைச்சர் என்னவானார் என்பதை அறியும் முயற்சி தொடர்கிறது.
அந்தக் கடத்தலில் சம்பந்தமிருப்பதாக, விசாகப்பட்டினத்தில் அமீர் (கலையரசன்) எனும் நபரைச் சுற்றி வளைக்கின்றனர். தப்பியோடும் முயற்சியில் ஈடுபடும்போது, அவர் உயிரிழக்கிறார்.
இறந்துபோன அமீர், நாகர்கோவில் வட்டாரத்தில் இருந்துகொண்டு தமிழ்நாட்டு அரசியலைத் தீர்மானிக்கும் ஏ.ஜி.ராவணனின் (சிம்பு) ஆள் என்பது தெரிய வருகிறது.
அதேநேரத்தில், அந்த வழக்கு தொடர்பான உண்மைகளை அறிவதற்காகச் சக்திவேல் (கவுதம் கார்த்திக்) எனும் இளம் அதிகாரி ஏ.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரியவர்களிடம் அடியாளாகச் சேர்கிறார்.
அமீரின் மரணத்திற்குப் பிறகு, நாகர்கோவிலில் ஏ.ஜி.ஆரைச் சந்திக்கும் வாய்ப்பு சக்திக்குக் கிடைக்கிறது.
அதன்பிறகு, முன்னாள் முதலமைச்சர் காணாமல் போனதில் ஏ.ஜி.ஆருக்கு இருக்கும் பங்கு தொடர்பான ஆதாரங்களைத் திரட்ட முயல்கிறார் சக்தி.
இன்னொறு புறம், ஏ.ஜி.ஆரின் செல்வாக்கை வீழ்த்த துணை முதலமைச்சரும் தன்னால் இயன்ற அனைத்தையும் மேற்கொள்கிறார்.
முன்னாள் முதலமைச்சர் கதி என்னவானது? ஏ.ஜி.ஆரை நெருங்கும் முயற்சியில் சக்திக்கு வெற்றி கிடைத்தா இல்லையா என்பதைச் சொல்கிறது ‘பத்து தல’.
இந்த கதையில் சக்தி, ஏ.ஜி.ஆர் என்ற இரண்டு முதன்மை பாத்திரங்கள் இருந்தாலும், இரண்டுமே திரையில் எதிர்மறையாகத்தான் காட்டப்படுகின்றன.
அதையும் தாண்டி, ஏ.ஜி.ராவணன் என்ற ஏ.ஜி.ஆர் நல்லவரா, கெட்டவரா என்பதுதான் ‘பத்து தல’ கதையின் மையம். தொடர்ந்தாற்போல தமிழ் படங்கள் பார்த்துவரும் ரசிகர் ஒருவர், இதற்கு எளிதாகப் பதில் சொல்லிவிடுவார்.
காரணம், எண்பதுகளில் வெளியான ஒரு ஆக்ஷன் படத்திற்கு இன்றைய பாணியில் திரைக்கதை அமைத்தது போலவே உள்ளது இப்படம்.
வித்தியாசமான கோணங்கள்!
ஒரு கதையில் வில்லன் பாத்திரம் வலுவானதாக இருந்தால், நாயகனின் ஹீரோயிசம் பெரியளவில் கொண்டாடப்படும். ‘பத்து தல’யை பொறுத்தவரை சந்தோஷ் பிரதாப், கவுதம் மேனன் என்ற இரண்டு பேரைத் தொடக்கத்திலேயே காட்டிவிடுகிறார் இயக்குனர்.
அதன்பிறகு, சுமார் பத்து நிமிடங்கள் கழித்து கவுதம் கார்த்திக்கின் அறிமுகம் திரையில் நிகழ்கிறது. சிம்புவோ இடைவேளைக்கு அருகில்தான் தன் முகம் காட்டுகிறார்.
இதற்கு நடுவே தாசில்தாராக வரும் பிரியா பவானிசங்கர், சமூக ஆர்வலராக மனுஷ்யபுத்திரன், ஏ.ஜி.ஆரின் தங்கையாக அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாச்சலம், ரெடின் கிங்ஸ்லி, சென்றாயன், கண்ணன் பொன்னையா உட்படப் பலரது முகம் நம் மனதில் பதியும் விதமாகக் காட்சிகள் நகர்கின்றன.
அனைவருமே ஒரு கமர்ஷியல் படத்திற்கு என்ன தேவையோ, அதனைத் திரையில் தந்திருக்கின்றனர்.
திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு அக்கா, அண்ணி பாத்திரங்களில் நடிக்கும் பெண்களுக்கு நடுவே, இந்த படத்தில் ஒரு குத்து பாடலுக்கு சாயிஷா நடனமாடியிருப்பது ரசிகர்களைப் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.
நடன அசைவுகளில் ‘வனமகன்’ அனுபவத்தைப் பிரதிபலித்தாலும், முகச்சுருக்கங்களில் அவர் கவனம் செலுத்துவது நல்லது.
பரூக் ஜே.பாஷாவின் ஒளிப்பதிவு, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு, மிலன் கலை வடிவமைப்பு ஒன்றிணைந்து, ஒரு நேர்த்தியான கேங்க்ஸ்டர் படம் பார்க்கும் உணர்வை அதிகப்படுத்துகின்றன.
அது போதாதென்று, சிம்பு வரும் காட்சிகளில் பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
அது கேட்க எளிமையாகத் தோன்றுவது இன்னொரு ஆச்சர்யம்.
ஆனால், பாடல்கள் தான் தியேட்டரில் ரசிகர்கள் ஆரவாரிக்கும் அளவுக்கு இல்லை.
‘நன்றிய எதிர்பார்க்குறவன் இல்ல, ஆனா நன்றி மறந்தவங்களை விட்டு வைக்குறவன் இல்ல’, ‘இங்க நல்லது பண்றதுக்கு கூட கெட்ட முகம் வேண்டியிருக்கு’ என்பது போன்ற வசனங்களைத் தாண்டி நாகர்கோவில் வட்டாரத்தில் கதை நிகழ்வதைச் சொல்லும் விதமாகச் சில பாத்திரங்கள் பேசுவது கூர்ந்து கவனிக்கச் செய்கிறது.
துணை பாத்திரங்கள் மட்டுமல்லாமல் சிம்பு, பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் போன்றவர்களை அப்படிப் பேசச் செய்திருப்பது தான் ‘பத்து தல’யின் சிறப்பம்சம்.
அதற்காகவே, வசனகர்த்தா ஆர்.எஸ்.ராமகிருஷ்ணனைப் பாராட்ட வேண்டும்.
ஒரு நிகழ்வின் பாதியில் இருந்து தொடங்குவது அல்லது பாதியிலேயே முடிந்துபோவதாகக் காட்சிப்படுத்தும் உத்தியைப் பயன்படுத்தியிருப்பது, திரைக்கதையில் நிறைய காட்சிகள் உள்ளது போன்ற தோற்றத்தை உண்டாக்குகிறது; பல அடுக்குகள் கொண்ட ஒரு கதையைப் பார்க்கும் பிரமிப்பைத் தருகிறது.
அது மட்டுமல்லாமல், வழக்கத்திற்கு மாறான கேமிரா கோணங்களும் ‘ப்ரெஷ்’ உணர்வைத் தருகின்றன.
மிக முக்கியமாக, தொடக்கத்திலும் கிளைமேக்ஸிலும் சிம்பு இருக்கும் வீட்டைக் காட்டும் ஷாட்டில் ‘ட்ரோன்’ பயன்படுத்தப்பட்டுள்ளது;
ஒரு தேனீ அல்லது வண்டு பறப்பது போல அந்த ஷாட் அமைக்கப்பட்டிருப்பது, திரையில் நிறைந்திருக்கும் வன்முறையை மறக்கச் செய்யும் அளவுக்கு நேர்த்தியாக உள்ளது.
நேர்த்தியான உருவாக்கம்!
‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் தயாரான படம் ஒன்று வெளியாகவே இல்லை.
அதன்பிறகு, நெடுஞ்சாலை படத்தைத் தந்தார். உண்மைக்கு நெருக்கமான ஒரு புனைவாக அது இருந்தது. ஆனாலும், அவரது படைப்பாக்கத்துக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.
அதே வேட்கையுடன், ‘பத்து தல’யை ஒரு நேர்த்தியான கமர்ஷியல் படமாக உருவாக்கியிருக்கிறார்.
ரீமேக் என்றபோதும், இப்படத்தில் கிருஷ்ணாவின் கேமிரா பார்வை நிச்சயமாக இன்றைய முன்னணி நாயகர்களை ஈர்க்கும்.
கன்னடத்தில் வெளியாகி ஆறு ஆண்டுகள் கழித்து தமிழில் வெளியாவதால், நிறைய ரசிகர்கள் ஒரிஜினலை பார்த்திருக்கும் வாய்ப்பு உண்டு. அப்படிப் பார்க்காதவர்களை நிச்சயம் ‘பத்து தல’ ஈர்க்கும்.
அந்த படத்தைப் பார்த்தவர்கள், அதன் நாயகன் ஸ்ரீமுரளி போல இதில் கவுதம் கார்த்திக் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பானதாக இல்லை கூறலாம்; இன்னொரு நாயகனாக வந்த சிவராஜ்குமாருக்கு ஈடாக சிம்புவின் இருப்பு பொருந்தவில்லை என்று சொல்லலாம்.
இவர்கள் இருவரையும் விட, ஸ்ரீமுரளியும் சிவராஜ்குமாரும் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள் என்பதை நினைவில் கொண்டால் அந்த வித்தியாசம் மங்கிப் போகும்.
வெறுமனே கமர்ஷியல் படமாக நோக்கினால், ‘பத்து தல’யில் இருக்கும் லாஜிக் மீறல்கள் நம் கண்ணில் படாது.
ஆனால், முதல் அரைமணி நேரத்தில் நம் மண்டையில் நிரம்பிய மிரட்சி படம் பார்த்து முடிந்தபிறகு அறவே காணாமல் போயிருக்கும்.
அது மட்டுமே ‘பத்து தல’யின் மைனஸ். அது ஒரு பொருட்டில்லை என்பவர்கள், தாராளமாக ‘பத்து தல’ பார்க்கலாம்!
– உதய் பாடகலிங்கம்