தமிழ்நாடு அரசு விளக்கம்
கடந்தாண்டு அக்டோபர் 2-ம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நீதிமன்றத்தை நாடிய நிலையில் 6 இடங்களைத் தவிர 44 இடங்களில் பாதுகாப்போடு உள்ளரங்கு கூட்டமாக நடத்துவதற்கு உயர்நீதிமன்ற தனி நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இந்தக் கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த விசாரணையின் போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான ஜோசப் அரிஸ்டாட்டில், ”உளவுத்துறை தகவல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களின் அடிப்படையில்தான் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும்.
பேரணியை அனுமதிப்பது தொடர்பாக முடிவெடுக்கக் கூடிய முழு அதிகாரமும் மாநில அரசுக்கு உள்ளது.
அதோடு, பேரணிக்கு முழுமையாக தடை விதிக்கவில்லை. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்றால் எவ்வித அனுமதியும் வழங்க முடியாது.
இதுபோன்ற வழக்குகளில் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
ஆர்எஸ்எஸ் கேட்பது போன்று 50 இடங்களில் அனுமதி வழங்க முடியாது. முதற்கட்டமாக 5 இடங்களில் அனுமதி வழங்கப்படும். அதன்பின் ஏற்படும் சூழலுக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கப்படும்” என வாதிட்டது.
தொடர்ந்து ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், அதனை காப்பது மாநில அரசின் கடமை. எங்களுக்கான அனுமதியை மறுப்பதில் எந்த நியாயமும் இல்லை” என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.