திருட்டா, தீவிரவாதச் சதியா?

– விறுவிறுப்பூட்டும் ‘சோர் நிகால் கே பாகா’

திரைப்படங்களில் ‘க்ளிஷே’ என்ற வார்த்தை ரொம்பவும் பிரபலம். ஏற்கனவே பல படங்களில் பார்த்த விஷயங்களை அச்சுப்பிசகாமல் அப்படியே தரும்போது, ‘இதைத்தானப்பா எல்லா படத்துலயும் பார்க்குறோம்’ என்று ரசிகர்கள் கொந்தளித்து விடுவார்கள்.

அதேநேரத்தில், வழக்கத்தைப் புரட்டிப் போடுகிறேன் பேர்வழி என்று புத்தம்புதிதாகச் சொன்னாலும் அப்படைப்பு கவனிப்பாரற்றுப் போகும் சாத்தியமுண்டு.

அப்படியானால், ‘புதிய குடுவை பழைய பானம்’ என்ற பார்முலாவில் பழையனவற்றையே புதிதென்று எண்ணத்தக்க வகையில் கொடுப்பதே புத்திசாலித்தனம் என்று தோன்றலாம்.

அதுவே காலம்காலமாக ரசிகர்களை ஈர்த்து வருகிறது; அந்த கலவை என்ன விகிதத்தில் இருக்க வேண்டுமென்பதில்தான் வெற்றிக்கான ரகசியம் ஒளிந்திருக்கிறது.

தினேஷ் விஜன், அமர் கவுசிக் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘சோர் நிகால் கே பாகா’வும் அந்த வகையறாவில் சேர முனைந்திருக்கிறது.

தயாரிப்பாளர்களைக் குறிப்பிடும் அளவுக்கு, அவர்கள் அப்படியென்ன சாதித்துவிட்டார்கள் என்று கேட்பது புரிகிறது.

இந்த படமே அதற்கான ஒரு உதாரணம் தான்.

கடந்த மார்ச் 24ஆம் தேதியன்று ‘நெட்பிளிக்ஸ்’ தளத்தில் ‘சோர் நிகால் கே பாகா’ வெளியானது.

என்னதான் நடக்குது?

வைரங்களுக்கான காப்பீட்டு நிறுவனமொன்றை நடத்தி வருபவர் அங்கீத் (சன்னி கவுஷல்). ஒருநாள் விமானப் பயணமொன்றில், ஏர் ஹோஸ்டஸ் ஆக இருக்கும் நேகாவை (யாமி கவுதம்) சந்திக்கிறார். பார்த்தவுடன் காதல் பற்றிக் கொள்கிறது.

டெல்லியில் இருந்து அல்-பரக்கத் எனும் வளைகுடா நகரத்திற்கு அந்த விமானம் பறக்கிறது. தொடர்ந்தாற்போல, அந்நகரத்தில் அங்கீத்தும் நேகாவும் தற்செயலாகச் சந்திக்கின்றனர்.

‘அது தற்செயல்தானா’ என்று செல்லமாகக் கோபப்பட்டாலும், ஒருகட்டத்தில் அங்கீத்தைக் காதலிக்கத் தொடங்குகிறார் நேகா; அதனால் கர்ப்பமுறுகிறார்.

தகவல் கேட்டு முதலில் அதிர்ச்சியடையும் அங்கீத், அதன்பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்கிறார்.

வாழ்க்கை சிறப்பாகச் சென்றுகொண்டிருப்பதாக நம்பும் நிலையில், ஒருநாள் இரண்டு நபர்கள் அங்கீத்தை தனியாக அழைத்து மிரட்டுவதைக் காண்கிறார் நேகா.

தவறுதலாக 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களை மாற்றி அனுப்பிவிட்டதால், அந்த பணத்தைத் தரச் சொல்லி மிரட்டுவதாகக் காரணம் கூறுகிறார் அங்கீத்.

பணத்தைத் தர முடியாவிட்டால், அல்-பரக்கத்தில் இருந்து டெல்லிக்கு கடத்தப்படும் வைரங்களைத் திருடித் தருமாறு வற்புறுத்துவதாகச் சொல்கிறார்.

கேங்க்ஸ்டர் உலகின் பணப்புழக்கத்தைக் கையாண்ட காரணத்தாலேயே, தன் தந்தை துப்பாக்கிக்கு இரையானதை நேரில் கண்டவர் நேகா.

அந்த வலியின் காரணமாக, தனது திருமண வாழ்க்கை பிக்கல் பிடுங்கல் இல்லாமல் இருக்க விரும்புகிறார்; அங்கீத் வைரங்களைத் திருடச் சம்மதிக்கிறார்.

திருட்டைச் செயல்படுத்துவதில் ஒரு சிக்கல். அல்-பரக்கத்தில் இருந்து டெல்லி செல்லும் விமானப் பயணத்தின்போது தான் வைரங்களைத் திருட முடியும்.

ஏனென்றால், ஜிபிஎஸ் நுட்பம் உட்படப் பல அம்சங்கள் எளிதாகக் காட்டிக் கொடுத்துவிடும். அதற்கு நேகாவும் உதவ வேண்டும்.

வைரங்களை அனுப்பும் நபரிடம் அங்கீத் வேலை பார்ப்பதால், அது சம்பந்தப்பட்ட விவரங்கள் எல்லாம் அவருக்கு அத்துபடியாகத் தெரியும்.

ஒரு குறிப்பிட்ட தினத்தில் வைரங்களைச் சுமந்துகொண்டு ஒரு நபர் விமானத்தில் ஏறுகிறார்.

அதே விமானத்தில் அங்கீத்தும் நேகாவும் இருக்கின்றனர்.

கனகச்சிதமாகத் திருட்டைச் செயல்படுத்திவிடலாம் என்று அங்கீத் நினைக்கும்போது, மூன்று மர்ம நபர்கள் அந்த விமானத்தைக் கடத்தியதாக அறிவிக்கின்றனர்.

தாங்கள் ஒரு தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கின்றனர். அவ்வளவுதான். அங்கீத்தின் மொத்த திட்டமும் பாழாகிறது.

அதன்பிறகு, தீவிரவாதிகளின் பிடியை மீறி வைரங்களைத் திருட அங்கீத்துக்கு நேகா உதவினாரா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.

விமானக் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் இருப்பிடத்தை விட்டுக் கிளம்பி வருவதில் இருந்து தொடங்குகிறது திரைக்கதை; இடையிடையே, நேகா – அங்கீத் காதல் பிளாஷ்பேக் ஆகச் சொல்லப்படுகிறது.

திருட்டா, தீவிரவாதமா என்ற இரு தரப்பு போராட்டங்களுக்கு நடுவே, ‘என்னதான் நடக்குது’ என்று நாம் பதைபதைக்கும் விதமாகத் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதுதான் ‘சோர் நிகால் கே பாகா’வின் சிறப்பு.

டைட்டில் சொல்லும் கதை!

‘சோர் நிகால் கே பாகா’ என்ற டைட்டில் இந்தி ரசிகர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கலாம். ஏனென்றால், ‘திருடிவிட்டு தப்பிவிட்டார்’ என்பதே அதன் அர்த்தம்.

அதற்கிணையான தலைப்பொன்றை வைத்திருந்தால் தமிழ், தெலுங்கு உட்பட இதர பிராந்திய மொழிகளிலும் ‘டப்’ செய்யப்பட்டதற்கு நியாயம் கிடைத்திருக்கும்.

மேற்சொன்ன டைட்டிலே கதையைச் சொல்லிவிடுவதால், முடிவில் வைரம் திருடப்பட்டுவிட்டது என்பது தெளிவாகிவிடுகிறது.

ஆனால், அவற்றைத் திருடியது எப்படி என்ற கேள்விக்குப் பதில் சொன்ன விதத்தில்தான் திரைக்கதையாசிரியர்களும் இயக்குனரும் பாராட்டுகளைப் பெறுகின்றனர்.

படம் மொத்தமாக ஒன்றை மணி நேரமே ஓடுகிறது.

நேகா – அங்கீத்தின் காதல் காட்சிகள் முதல் பதினைந்து நிமிடங்களை ஆக்கிரமிக்க, அடுத்த முப்பத்தைந்து நிமிடக் காட்சிகள் விமானத்திலேயே கழிய, கிளைமேக்ஸ் மற்றும் இரண்டாவது கிளைமேக்ஸுக்கு பத்து நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

அதனால், மீதமுள்ள சுமார் முப்பது நிமிடக் காட்சிகள் விமான நிலைய வளாகத்தில் நடக்கும் விசாரணையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறைவான நேரமே ஓடினாலும், ஒரு திருப்தியான அனுபவத்தைத் தருகிறது ‘சோர் நிகால் கே பாகா’.

அதற்குக் காரணம் ஜியானி ஜியானெல்லியின் ஒளிப்பதிவும் சாரு தக்கரின் படத்தொகுப்பும் தான்.

எல்லா பிரேமிலும் பரபரப்பு என்பதை இருவருமே கடைப்பிடித்திருப்பதுதான் அதனைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

போலவே, கேதன் சோதாவின் பின்னணி இசையும் காட்சிகளில் நிரம்பியிருக்கும் விறுவிறுப்பை நமக்குக் கடத்த உதவியிருக்கிறது.

விமானம் மற்றும் விமான நிலைய செட்கள் மூலமாக நம்மைப் பிரமிக்க வைத்திருக்கிறார் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொண்டிருக்கும் மயூர் சர்மா.

இந்த படத்தில் தமிழ் ரசிகர்களுக்குத் தெரிந்த முகம் என்றால், அது தலைவாசல் விஜய் தான். அவரும் கூட, இரண்டொரு காட்சிகளில் மட்டுமே தோன்றுகிறார்.

நாயகியாக வரும் யாமி கவுதம், ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ என்ற தமிழ் படத்தில் ஜெய் ஜோடியாக நடித்தவர்.

ஆனால், அவரது முகம் அழகுசாதன விளம்பரப் படங்களின் வழியே நமக்கு ரொம்பவே பரிச்சயம்.

நாயகன் சன்னி கவுஷல் கூட வித்தியாசமான முயற்சிகளாகக் கருதப்படும் இந்திப்படங்களில் தலைகாட்டியவர் என்பதால் வெகுஜன ரசிகர்களிடம் பெரிதாகப் பிரபலமாகாதவர்.

நாயகன் நாயகி மட்டுமே பிரதானம் என்பதால் மற்ற பாத்திரங்களில் நடித்தவர்களுக்குத் தங்கள் முகத்தைத் தெரியப்படுத்தும் அளவுக்கே காட்சிகள் கிடைத்திருக்கின்றன.

அசாத்தியமான கூட்டுழைப்பு!

கதை, சம்பந்தப்பட்ட கலைஞர்களின் உழைப்பு எப்படிப்பட்டது என்பதைச் சொன்னபிறகு, கலைக்கூடத்தில் போற்றிப் பாதுகாக்கும்படியான படமாக இது இல்லை என்பது தெளிவாகியிருக்கும்.

அதேநேரத்தில், பார்வையாளர்களை இருக்கை நுனியில் இருத்தும் வகையில் அமைக்கப்பட்ட திரைக்கதையே ஒரு வித்தியாசமான கமர்ஷியல் படமாக இதனை மாற்றியிருக்கிறது.

சிராஜ் அகமது, ராஜ்குமார் குப்தாவுடன் இணைந்து அமர் கவுசிக் திரைக்கதை எழுதியுள்ளார்.

அது போதாதென்று வசனகர்த்தா திரிஷாந்த் ஸ்ரீவஸ்தவாவும் திரைக்கதையில் பங்களிப்பைத் தந்துள்ளார். இவர்களில் ராஜ்குமாரும் அமரும் இயக்குனர்களாகப் பல வெற்றிப்படங்களைத் தந்தவர்கள்.

இவ்வளவு ஏன், தயாரிப்பாளர் தினேஷ் விஜன் கூட ஒரு படத்தை இயக்கிய அனுபவமுள்ளவர்.

முதல் படமான ‘பீயிங் சைரஸ்’ தொடங்கி லவ் ஆஜ் கல், பத்லாபூர், ஸ்திரீ, இந்தி மீடியம், பேடியா உட்படப் பல வெற்றிப்படங்களைத் தயாரித்தவர்.

இவர் தயாரித்தவற்றில் பெரும்பாலானவை வழக்கமான கமர்ஷியல் பாணியில் இருந்து விலகி நிற்பவை.

மாற்று சினிமா முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் குவித்த இவர்களைப் போன்றவர்கள் ஒன்றிணைந்திருப்பதால் மட்டுமே, ‘சோர் நிகால் கே பாகா’ போன்ற நல்ல கமர்ஷியல் திரைப்படங்கள் கிடைக்கின்றன.

‘ஒரு விமானத்தை இவ்வளவு சுலபமாகக் கடத்திவிட முடியுமா?’, ‘ஒரு விமானநிலையத்தில் பாதுகாப்பை மீறி இத்தனை சாகசங்களைச் செய்ய முடியுமா?’ என்று பல கேள்விகள் ‘லாஜிக்’ சார்ந்து எழலாம்.

அதேபோல, கிளைமேக்ஸில் வரும் பல திருப்பங்களையும் நம்மால் எளிதாக யூகித்து விட முடியும்.

இதற்கெல்லாம் சேர்த்து வைத்துதான், கழுவுகிற நீரில் நழுவுகிற மீனாகத் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மிகநேர்த்தியான படைப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும், சமீபகாலத்தில் நாயகியை மையப்படுத்திய திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க முயற்சி என்று ‘சோர் நிகால் கே பாகா’வைச் சேர்க்கலாம்!

– உதய் பாடகலிங்கம்

You might also like