நாட்டின் மிகப்பெரிய 6 வங்கிகள் உள்பட பல வங்கிகளின் இணைய தளங்களுக்குள் ஊடுருவிய 9 பேர் கொண்ட கும்பல் தகவல்களை திருடியுள்ளது.
இப்படிப் பல கோடி பேரின் தகவல்களைத் திருடிய 9 பேரை ஹைதராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் டெல்லி மற்றும் புனேவை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தனிநபர்களின் தகவல்கள் மட்டுமல்லாமல், அரசின் ரகசியத் தகவல்களையும் திருடியதாக கூறப்படுகிறது.
நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தனிநபர் தகவல் திருட்டு மோசடி இது என்றும் கூறப்படுகிறது.
வங்கி வாடிக்கையாளர்கள் 1.1 கோடி பேர், முகநூலை பயன்படுத்தும் 75 லட்சம் பேர், . 1.2 கோடி வாட்ஸ் ஆப் பயனாளர்கள், டெல்லி அரசின் 35,000 அதிகாரிகள், மற்றும் ஊழியர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதோடு கிரெடிட் கார்டுகளுக்காக விண்ணப்பித்தவர்கள் பற்றிய தகவல்களையும் இந்த 9 பேர் கொண்ட கும்பல் திருடி விற்பனை செய்துள்ளது.
வாடிக்கையாளர் பெயர்கள், பணி விபரம், ஆதார் எண் விபரங்கள், பான் கார்டு விபரங்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விபரங்கள் என பல்வேறு தகவல்களைத் திருடி ரூ.140 கோடிக்கு விற்பனை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.