குடிமகான் – வித்தியாசமான கதை சொல்லல்!

மது போதைக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை பெருகப் பெருக, குடிமகன் என்ற வார்த்தை கூட இரட்டை அர்த்தம் சூடிக் கொண்டது.

அப்படிக் குடிமகன்களாக இருப்பவர்களே வியக்கும் அளவுக்கு விளங்கும் ஒரு நபர் எவ்விதக் கெட்ட பழக்கங்களும் இல்லாமலிருப்பவராக இருப்பார்?

இந்தக் கேள்வியோடு, ‘குடிமகான்’ படத்தின் கதையைத் தந்திருக்கிறார் இயக்குனர் பிரகாஷ் என். நீங்கள் வாசித்த தலைப்பில் பிழை ஏதுமில்லை. அது குடி மகான் தான்.

பெயரே இப்படியிருந்தால் படம் எப்படியிருக்கும்?

நான் குடிக்கலீங்..க…!

முழுக்கப் போதையில் ததும்பும் ஒரு மதுப்பிரியர், ‘நான் குடிக்கலீங்..க…’ என்றுதான் தன் தரப்பு நியாயத்தைத் தொடங்குவார்.

அப்படிப் போதையில் திளைக்கும் ஒரு நபர், உண்மையிலேயே மது அருந்தவில்லை என்றால் எப்படியிருக்கும்? மதி (விஜய் சிவன்) அப்படியொரு மனிதர்.

ஏடிஎம்களில் பணம் நிரப்பும் ஏஜென்சி ஒன்றில் வேலை பார்ப்பவர் மதி.

நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்ப்பதால், எந்நேரமும் போண்டா, பஜ்ஜி, நொறுக்குத்தீனிகள் என்று சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்.

அதனால், வயிற்று வலியால் அவதிப்படுகிறார்.

மதியின் மனைவி பவி (சாந்தினி) ஒரு சராசரி குடும்பத் தலைவி. கணவர், மகன், மகள், மாமனார் சுந்தரம் (சுரேஷ் சக்கரவர்த்தி) என நால்வரையும் கவனித்துக் கொள்பவர்.

மாமனார் மகா குடிகாரராக இருந்தாலும், கணவர் ஒரு சொட்டு கூட மது அருந்துவதில்லை என்பதில் பவிக்குப் பெருமை அதிகம்.

ஒருநாள் சுந்தரம் சாக்கடையில் விழுந்து அடிபட, வேலைக்குச் செல்லும் அவசரத்தில் இருக்கும் மதி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். உச்சகட்ட டென்ஷன், பசி என்றிருக்கும்போது டீக்கடையில் ஒரு டீ அருந்துகிறார்.

உடனே, போதை அவரைத் தொற்றுகிறது. திரும்பிச் சென்று, அந்த மருத்துவமனையையே ஒருவழியாக்குகிறார்.

நடந்ததைச் சுந்தரம் சொல்வதை நம்பமுடியாமல் தவிக்கிறார் பவி. ஆனால், மதியோ தான் வெறுமனே டீ குடித்ததாகச் சொல்கிறார்.

அடுத்த சில நாட்களிலேயே அவர்களது காம்பவுண்டில் வசிக்கும் ஒரு தம்பதி தங்களது குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட ஏற்பாடு செய்கின்றனர்.

எவ்விதக் கெட்டபழக்கமும் இல்லாதவர் என்ற அடிப்படையில், விழாவுக்கு வந்தவர்களிடம் மதியைப் பெருமையோடு அறிமுகப்படுத்துகிறார் அந்த மனிதர்.

சிறிது நேரத்தில், ஒரு கூல்ட்ரிங்ஸை எடுத்துக் குடித்தவுடன் போதையில் தடுமாறத் தொடங்குகிறார் மதி. அந்த விழாவே அலங்கோலமாகிறது.

அதன்பிறகே, ஒரு சிறப்பு மருத்துவர் மூலமாக மதிக்கு வந்திருக்கும் ‘விசேஷ நோய்’ பற்றித் தெரிய வருகிறது. அதாவது, மது அருந்தாமல் வெறுமனே டீ, காபி, குளிர்பானம் அருந்தினாலே போதை தலைக்கேறுவதுதான் அந்நோயின் சிறப்பு.

அதேநேரத்தில், மதியின் விசேஷ போதையில் அவர் பணியிலும் ஒரு சிக்கல் ஏற்படுகிறது.

ஏடிஎம்மில் பணம் நிரப்புவதில் மதி தடுமாற, அதனால் ஏஜென்சிக்கு அதிக பண இழப்பு ஏற்படுகிறது; மதியின் வேலை பறி போகிறது. குடும்ப நிம்மதியும் அதோகதியாகிறது.

ஒரே நேரத்தில் தனக்கு வந்திருக்கும் நோயை எதிர்கொள்வது, தன்னால் நேர்ந்த பொருளாதார இழப்பைச் சரி செய்வது என்று களத்தில் இறங்குகிறார் மதி. அவருக்கு வெற்றி கிடைத்ததா இல்லையா என்பதே மீதிக்கதை.

முதல் பாதி குடும்பம், வேலை, சிக்கல் என்று எல்லா அம்சங்களும் கலந்தவாறு இருக்க, பின்பாதியோ பொருளாதார இழப்பைச் சரி செய்ய மதி மேற்கொள்ளும் முயற்சிகளை நகைச்சுவையாகச் சொல்கிறது.

அற்புதமான கூட்டு முயற்சி!

மதி எனும் பாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சிவனைப் பார்க்கும்போது ஒரு நாயகனாகவே தோன்றவில்லை.

ஆனால், அதுவே அவரை அப்பாத்திரமாகப் பார்க்க வகை செய்திருக்கிறது.

சீரியசாக காமெடி செய்யும் வேடம் என்றபோதும், முகத்தை மறைக்கும் தாடி அவரது நடிப்பையும் காக்கிறது.

ஒரு சராசரி இல்லத்தரசி பாத்திரம் தரப்பட்டாலும், அது இயல்பு வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒரு நபர் என்று எண்ண வைத்திருப்பதே சாந்தினியின் வெற்றி.

‘அழகன்’ படத்தில் காமெடி வில்லனாக நடித்த சுரேஷ் சக்கரவர்த்தி இதில் குடிகாரராகவும் முதுமையில் இன்னொரு திருமணம் செய்துகொள்பவராகவும் நடித்திருக்கிறார்.

நிச்சயம் அவரது காமெடி நடுத்தரக் குடும்பங்களை ஈர்க்கும். அதற்காக ‘சங்கீத ஸ்வரங்கள்’ பாடலை, அவரது காதல் ட்ராக்குக்கு பயன்படுத்தியிருப்பது அட்ராசிட்டி தான்.

இவர்கள் தவிர்த்து காம்பவுண்டில் வசிப்பவராக வரும் மனிதர்கள், குடிகாரர்கள் சங்கத் தலைவராக வரும் நமோ நாராயணா மற்றும் அவருடன் திரிபவர்கள், புதுமாப்பிள்ளையாக வரும் சேதுராமன், உணவு டெலிவரி செய்யும் நபர், நாயகனால் ஏடிஎம்மில் இருந்து பணத்தை வாரியிறைத்துக் கொண்ட மனிதர்கள் என்று பலர் இக்கதையில் வந்து போகின்றனர்.

அவர்களால் பின்பாதி முழுக்க சிரிப்பு மழை தான். குறிப்பாக, கடைசி இருபது நிமிடம் அப்படியே எண்பதுகளில் வந்த காமெடி திரைப்பட கலாட்டாக்களை நினைவூட்டுகிறது.

மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு, சுரேஷ் விஸ்வாவின் கலை வடிவமைப்பு, ஷிபு நீலின் படத்தொகுப்பு என்று பலப்பல பிரிவுகளில் நிகழ்ந்த உழைப்பின், கூட்டு முயற்சியின் தொகுப்பே ‘குடிமகான்’ படம் வித்தியாசமானதாகத் தோற்றமளிக்கக் காரணம்.

தனுஜ் மேனனின் பின்னணி இசை அதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாடல்கள் ‘ஆஹா’ என்று சொல்ல முடியாத வகையில் இருந்தாலும், இருக்கையில் இருந்து நம்மைத் துரத்தும் வகையில் இல்லை.

போலவே, ஸ்ரீகுமாரின் எழுத்தாக்கமும் இப்படம் ரசிகர்களைக் கவர முக்கியக் காரணமாக விளங்குகிறது.

ஒரு வித்தியாசமான நோய் என்று சொல்லி அதனைப் படம் வரைந்து விளக்க முயற்சிக்காமல் கடந்து போயிருக்கிறார். அதேநேரத்தில், இக்கதையில் ஒரு மெசேஜும் ஒளிந்திருக்கிறது.

எளிமையான வாழ்க்கை!

நம்மில் பலர் கிராமத்தில் இருந்தாலும், நகரத்தில் இருந்தாலும், கொஞ்சம் ‘கெத்தாக’ சமூகத்தில் உலவவே விரும்புகிறோம்.

கையில் பேக் தூக்கிக் கொண்டு, அதில் சாப்பாடு முதல் இத்யாதி விஷயங்களைச் சுமந்துகொண்டு திரிவதில் ஆர்வம் காட்டுவதில்லை.

வெறும்கை வீசித் திரிவதோடு, ஹோட்டலில் சாப்பிடுவதையும் இதர கெட்ட பழக்கங்களைக் கைக்கொள்வதையும் பெருமை என்று நினைக்கிறோம்.

‘குடிமகான்’ பிரதான பாத்திரமான மதிக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை; ஆனாலும், அதற்கு ஈடாக ‘சைடு டிஷ்’ எனப்படும் நொறுக்குத்தீனிகளை அள்ளியிறைக்கும் பழக்கம் இருக்கிறது.

அதுவே அவரது வயிற்றைப் பாழ்படுத்தி வித்தியாசமான ஒரு குறைபாட்டுக்கு ஆளாக்குகிறது. அதனால், வீட்டில் சமைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் தருவது உட்பட வாழ்வின் எளிய அம்சங்களைக் கைவிடக் கூடாது என்று உணர்த்துகிறது ‘குடிமகான்’.

அது மட்டுமல்லாமல், மது அருந்துவதால் நிகழும் தீமைகளையும் குடிகாரர் அல்லாத ஒருவரைக் கொண்டு விளக்குகிறது.

‘ஒரு அரசாங்கம் நல்லா ஓடுறதுக்கு பெட்ரோலா இருக்குறதே நாங்கு குடிக்கறதுதான்’ என்பது போன்ற வசனங்கள் அவ்வழக்கம் எவ்வாறாகச் சமூகத்தில் கருதப்படுகிறது என்பதைச் சொல்கிறது.

‘முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் தொடர்பில்லை’, ‘ஒரு சீரியசான கதையை சிரிப்பு வரும்படி எடுத்து வைத்திருக்கிறார்கள்’, ‘சீரியல் அல்லது யூடியூப் வீடியோ மாதிரி இருக்கு’ என்று பல வகையில் இப்படத்திற்கு விமர்சனங்கள் குவியலாம்.

அவற்றில் ‘இந்த கதையில ஒரு பிரபல ஹீரோ நடிச்சிருந்தா நல்லாயிருக்கும்’ என்பதும் ஒன்று. அவ்வாறு நிகழ்ந்திருந்தால், நிச்சயமாக இப்படம் கூடுதல் கவனத்தைக் குவித்திருக்கும்.

ஆனால், அப்படி எந்த ஒரு ஹீரோவும் இப்படிப்பட்ட கதைகளை உடனடியாக ‘ஓகே’ சொல்வது ரொம்பவே அபூர்வமான விஷயம்.

அது உண்மை என்பதனை விஜய் சிவாவின் இருப்பு உணர்த்துகிறது.

இவரைப் போன்றவர்களின் வரவு தமி ழ் திரையுலகில் வித்தியாசமான படங்களில் நடிக்கும் கலைஞர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும்; இது போன்ற படங்களையும் அதிகரிக்கும்.

‘குடிமகான்’ படம் வழியே அந்த தொடர்ச்சியை நீட்டித்திருக்கின்றனர் பிரகாஷ் என் மற்றும் படக்குழுவினர்.

பெரிதாக வணிக அம்சங்கள் கலக்காத, வித்தியாசமான கதை சொல்லும் முயற்சி என்பதற்காகவே ‘குடிமகானை’ நிறையவே பாராட்டலாம்!

– உதய் பாடகலிங்கம்

You might also like