சில படங்களின் கதையமைப்பு அட்டகாசமாக இருந்தாலும், குறிப்பிட்ட பட்ஜெட்டில் அதனைக் காட்சியாக்கம் செய்ய முடியாது என்று தெரிந்தே எடுக்கப்பட்டிருக்கும்.
சில நேரங்களில் அது போன்ற குறைகளை மீறி, கதை சொல்லலில் இருக்கும் நேர்மை அந்த படத்தின் மீது கவனம் குவிக்க வைக்கும்.
மிகக்குறைந்த திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ‘டி3’ படமும் அப்படியொரு அனுபவத்தைத் தருகிறது.
சூழ்ச்சி வலை!
நள்ளிரவில் காரில் வீடும் திரும்பும் ஒரு பெண் தன் கணவரோடு மொபைலில் பேசிக் கொண்டிருக்கிறார்.
திடீரென்று அவரது கைப்பையில் இருந்து வேறு ஏதோ ஒரு செல்போன் அழைப்புச் சத்தம் கேட்கிறது. அது அவருடையதில்லை. அதனைக் கையிலெடுத்து ’யார்’ என்று கேட்கிறார்; பதில் ஏதும் இல்லை.
திடீரென்று, எதிர்முனையில் இருப்பவரின் சொல் கேட்டு நடமாடும் பிணம் போல வீட்டில் இருந்து வெளியேறிச் சாலையில் வந்து நிற்கிறார்.
அந்த நேரத்தில், அங்கு வரும் லாரி அவர் மீது மோதுகிறது. அடிபட்டு விழுந்து கிடக்கும் பெண்ணின் கையில் இருந்த செல்போனை யாரோ ஒருவர் எடுத்துச் செல்கிறார்.
இந்த சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் கழித்து ‘டி3’ திரைக்கதை விரிகிறது.
குற்றாலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக மாற்றலாகி வரும் விக்ரம் (பிரஜின்), ஒரு கொலை பற்றி விசாரிக்கச் சம்பவம் நடந்த இடத்திற்குச் செல்கிறார்.
கொலையானவர் குற்றப் பின்னணி உடையவர். உடனிருக்கும் அதிகாரிகளின் பேச்சில் இருந்து, யாருக்கு விசுவாசமாக இருந்தாரோ அந்த நபரே அவரைக் கொன்றிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார். ஒரு காலத்தில் ரவுடியாக இருந்த செந்தாமரை எனும் அந்த நபர், தற்போது சமூகத்தில் செல்வாக்குமிக்க புள்ளி.
புதிதாகக் கல்யாணம் ஆனவர் விக்ரம். அவரது மனைவி மாயா (வித்யா பிரதீப்), வீட்டில் அவருக்காகக் காத்திருக்கிறார்.
ஆனால், அவரோ கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து மீண்டும் குற்றாலம் காவல் நிலையத்திற்கு வந்திருக்கும் பரபரப்பில் இருக்கிறார்.
விசாரணை முடிந்ததும், நேராகக் காவல் நிலையம் செல்லும் விக்ரமைப் பார்க்க ஒரு நபர் காத்திருக்கிறார். அவர், மேற்சொன்ன கதையில் லாரியில் அடிபட்டு இறந்த பெண்ணின் கணவர்.
அதேநேரத்தில், ஒரு பள்ளி மாணவியும் தன் சகோதரர் மரணம் குறித்து சந்தேகம் தெரிவிக்க வந்திருக்கிறார். அவரது சகோதரர் இறந்த விதம், முதலில் சொன்ன பெண்ணின் மரணத்துடன் ஒத்துப் போகிறது.
அப்போது தான், விக்ரமைச் சந்திக்க வந்த நபர் காவல் நிலையத்தில் இல்லாததை உணர்கிறார் காவலர் மணி.
மூன்றாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு பெண்ணின் வழக்கில் சாட்சியங்கள் என்ன சொன்னார்களோ, அதுவே அந்த மாணவியின் சகோதரர் விபத்துக்குள்ளானபோதும் நிகழ்ந்திருக்கிறது.
ஒன்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை எண்ணி விக்ரம் குழம்பும் நேரத்தில், பாட்மிண்டன் விளையாடக் குற்றாலம் வந்த எஸ்பியின் மகன் அதேபாணியில் காணாமல் போகிறார்.
அது தொடர்பான விசாரணையில், மேற்சொன்ன வழக்குகளையும் அந்த ரவுடி தொடர்பான தேடலையும் விட்டு விலகுகிறார் விக்ரம்.
ஆனால், மேற்சொன்ன பாணியில் காணாமல் போன, விபத்திற்குள்ளாகி மரணித்தவர்களின் வழக்குகள் மட்டும் இருநூத்தி சொச்சம் என்று கண்டறிகின்றனர் டி3 போலீசார்.
எஸ்பியின் மகனைத் தேடும் முயற்சியில் அத்தனையும் ஒன்று சேர்ந்திருக்கும் ஒரு புள்ளியை நோக்கித் தான் போவதை உணர்கிறார் விக்ரம்.
அந்த குற்றங்களின் பின்னிருப்பது யார் என்று கண்டறிவதற்குள் செந்தாமரையின் ஆட்களால் விக்ரம் கடத்தப்படுகிறார்.
அதேநேரத்தில், வீட்டில் அவர் மனைவி ஆபத்தில் இருக்கிறார். அதன் பின் என்ன நடந்தது என்று சொல்கிறது ‘டி3’.
மூன்றாண்டுகளுக்கு முன் பணியாற்றிய அதே காவல் நிலையத்திற்கு நாயகன் மாற்றலாகி வருகிறார் என்பதும், அவர் ஒரு சூழ்ச்சி வலையில் சிக்கியிருக்கிறார் என்பதும் தான் ‘டி3’ கதையின் மையம். அது தெளிவுறச் சொல்லப்படாதபோதும், முன்பாதி பரபரவென நகரக் காரணம் நேர்த்தியான காட்சியமைப்பு. ஆனால், பின்பாதியில் அந்த நேர்த்தி நீர்த்துப் போயிருக்கிறது.
பிரஜின் முத்திரை!
ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் என்ற விறைப்பைக் காட்டாவிட்டாலும், சாதாரணமாக அரசு அலுவலகம் சென்றுவரும் ஒரு இளைஞர் என்று எண்ண வைக்கிறது பிரஜின் தோற்றம். உண்மையில், போலீஸ் படங்களுக்கே உரிய மிடுக்கு இல்லாததுதான் இந்த த்ரில்லரை ரசிக்க வைத்திருக்கிறது.
பெரும்பாலான காட்சிகளில் அவர் இருக்கிறார் என்பதும், அது எரிச்சலூட்டவில்லை என்பதும் நல்ல விஷயம். அந்த வகையில், இது பிரஜின் முத்திரை பதித்த ஒரு பாத்திரமாகியிருக்கிறது.
காயத்ரி யுவராஜ், வித்யா பிரதீப், அருள் சங்கர், அபிஷேக் குமார், மேத்யூ வர்கீஸ் என்று பலரும் இரண்டொரு காட்சிகளில் மட்டுமே வந்து போயிருக்கின்றனர். கொஞ்சம் கூடுதலான காட்சிகளில் தலைகாட்டும் சார்லிக்கு இதில் வழக்கமான வேடம்.
தனி ஒருவன் படத்திற்குப் பிறகு, ராகுல் மாதவ் இப்படத்தில் முதன்மையான வேடத்தில் நடித்துள்ளார்.
செந்தாமரையாக நடித்திருக்கும் வில்லன் நடிகர், அவரது அடியாட்கள் உட்படப் பலர் இப்படத்தில் வந்து போயிருக்கின்றனர்.
வில்லன் கூட்டத்தின் சூழ்ச்சிக்கு இரையானவர்கள் என்றும் ஒரு கும்பலைத் திரையில் காட்டியிருக்கின்றனர்.
பரபரவென நகரும் இக்கதையில் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பிகேவின் பங்கு மிக முக்கியம்.
ஒருகட்டத்தில், அடுத்த காட்சி என்ன வரும் என்று யோசிக்கும் அளவுக்கு விறுவிறுப்பூட்டியிருக்கிறது கேமிரா நகர்வு.
ஸ்ரீஜித் எடவானாவின் பின்னணி இசை, ஒரு த்ரில்லர் படம் பார்க்கிறோம் எனும் உணர்வை அதிகப்படுத்தியிருக்கிறது.
முன்பாதியில் பல காட்சிகளைச் சீராக அடுக்கிய படத்தொகுப்பாளர் ராஜா ஆறுமுகம், பின்பாதியில் சரிந்து விழும் திரைக்கதையை ஈடுகட்ட வழியின்றித் திணறியிருக்கிறார்.
போலவே, ஒரு மருத்துவக் குற்றம் நிகழ்வதற்குப் பின்னால் பாலியல் வக்கிரப் பின்னணியையும் விலாவாரியாகக் காட்ட வேண்டுமா என்ற கேள்வி எழவும் காரணமாகியிருக்கிறார்.
கதைக்களம் குற்றாலம் என்றபோதும், அங்கு சுற்றுலா சென்றவர்கள் ‘ஆ’ என்று புருவம் உயர்த்தும் வகையில் எந்த இடத்தையும் திரையில் காட்டவில்லை இயக்குனர் பாலாஜி. அதேநேரத்தில், இப்படியொரு கதைக்கு ஏன் இதுவரை அதிகமாகத் திரையில் காட்டாத ஒரு களத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்கும் பதில் இல்லை.
யூகிக்க வைக்கும் பின்பாதி!
காயத்ரி தோன்றும் முதல் காட்சியில், தொலைக்காட்சியில் ஒரு தொழிலதிபரின் மகன் விபத்தில் காயமடைந்து உயிருக்குப் போராடுவதாக ஒரு செய்தி ஒலிக்கும்; சேனலை மாற்றும்போது, ‘ஊமை விழிகள்’ படம் ஓடும். அதன்பிறகே, அவர் கொலையுறுவதாகக் காட்டப்படும்.
பார்வையாளருக்கு அடிக்கோடிட்டுக் காட்டாமல், அதேநேரத்தில் தான் சொல்லவந்த கதையைச் சிரத்தையுடன் உணர்த்திய விதத்தில் கவனம் ஈர்த்திருக்கிறார் பாலாஜி.
அதேநேரத்தில், அடுத்த பாகம் எடுக்க வேண்டுமென்ற ஆசையில் முன்பாதியில் அவர் இட்ட முடிச்சுகளுக்குத் திரைக்கதையின் பின்பாதியில் பதில் தராமல் விட்டிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல், யூகிக்க வைக்கும் அளவுக்கே அப்பகுதி அமைந்திருப்பது சலிப்பூட்டுகிறது.
அதில் முக்கியமானது, விபத்துக்குள்ளானவர்கள் மொபைலை காதில் வைத்துக்கொண்டு பேயறைந்தது போலச் செல்வதற்கான காரணத்தையும் அது நிகழ்த்தப்பட்ட விதத்தையும் விளக்கமாகச் சொல்லாதது.
போலவே, காயத்ரியின் கணவராக வருபவர், சார்லி மரணிப்பதாக வரும் காட்சிகளில் அவர்களது பாத்திரங்கள் பேசும் வசனங்களுக்குத் திரையில் பதிலே கிடையாது.
‘மாபியா’ படம் போலவே, இதிலும் ஒரு ‘செகண்ட் கிளைமேக்ஸ்’ உள்ளது; அதுவும் சலிப்பூட்டுகிறது.
திரைக்கதை எழுதுகையில் இடும் முடிச்சுகளை அப்படம் முடிவதற்குள்ளாகவே தீர்க்க வேண்டியது ஒரு எழுத்தாளரின், இயக்குனரின் கடமை.
இப்படியொரு கதையை ‘வெப்சீரிஸ்’ ஆகச் சொல்லியிருந்தால், இந்த விமர்சனம் தேவைப்பட்டிருக்காது.
போலவே, வில்லன் பாத்திரம் மற்றும் பணம் படைத்தவர்களின் பாலியல் வக்கிரங்கள் குறித்த வசனங்களும் ‘சென்சாருக்கு’ அஞ்சி அரைகுறையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இக்குறைகளை மீறி, பல ஆண்டுகளாக ஓரிடத்தில் சிலர் விபத்துக்குள்ளாவதும் காணாமல் போவதும் நிகழ்வதை மையப்படுத்தி ‘ஒரு டீசண்டான த்ரில்லர்’ காட்சியனுபவத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி.
குறைவான திரையரங்குகளில் வெளியாகி இப்படத்தைக் காண முடியாத சூழல் நிலவினாலும், நிச்சயமாக ஓடிடி வெளியீட்டின்போது ‘டி3’ ரசிகர்களை ஈர்க்கும்!
- உதய் பாடகலிங்கம்