கப்ஜா – கறுப்பு வெள்ளை ஹோலி!

ட்ரெய்லரைப் பார்த்தாலே போதும், எப்படிப்பட்ட படம் என்று தெரிந்துவிடும். சில நேரங்களில் ட்ரெய்லரைப் பார்த்தாலே படம் பார்க்கும் தேவை இல்லாமல் போய்விடும்.

சில ட்ரெய்லர்களை பார்த்தபிறகு, அதற்கும் படத்திற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்பது தெரிந்துவிடும்.

உபேந்திராவோடு கிச்சா சுதீப்பும் சிவராஜ்குமாரும் தோன்றிய ‘கப்ஜா’ படத்தைத் தாராளமாக மூன்றாவது வகையில் சேர்க்கலாம்.

ட்ரெய்லருக்கும் படத்திற்கும் சம்பந்தமில்லாமல் இருந்தால் பரவாயில்லை; படம் பார்க்க நன்றாக இருக்கிறதா என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

கன்னடத்தில் எடுக்கப்பட்ட ‘கப்ஜா’ தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் டப் செய்யப்பட்டுள்ளது; அதனால் அந்தந்த மொழிகளில் இதன் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது. தமிழில் இந்த ட்ரெய்லர் 3 நிமிடம் 10 நொடிகள் ஓடுகிறது.

ட்ரெய்லர் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு!

1945ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்னர் ஒரு பெண்மணி சுமார் பத்து வயதுள்ள இரண்டு சகோதரர்களை அழைத்துக்கொண்டு ஒரு ஊருக்குப் பிழைக்கச் செல்கிறார். இருவரும் வளர்கின்றனர். அண்ணன் அம்மாவோடு இருக்கிறார். தம்பி அரசு அதிகாரியாக இருக்கிறார்.

ஒருமுறை அண்ணன் ஒரு நபரைத் தாக்குகிறார். அதன் எதிர்வினையாக மிகப்பெரிய பிரச்சனை எழுகிறது. கேங்க்ஸ்டர்கள், அரசியல்வாதிகள் என்று பலரும் பகையாளிகள் ஆகின்றனர். அவர்களது ஆட்களை தம்பி அடித்து நொறுக்குகிறார்.

தம்பியாக வருபவர் உபேந்திரா. தம்பியின் ஜோடியாக ஸ்ரேயா வருகிறார். இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகள். அவர்களைக் கொல்ல முயலும் வகையில், அவர்களுக்கும் இடத்தில் தீ வைக்கப்படும் காட்சியும் உண்டு.

இவற்றைத் தாண்டி காவல் துறை உயரதிகாரியாக சுதீப் வருகிறார். இவையனைத்தும் ட்ரெய்லரில் இருக்கின்றன.

ஒரு பெரிய அரண்மனை, ஆலைகள், வீடுகளுடன் ஒரு ஊரும் விஎஃப்எக்ஸில் காட்டப்படுகிறது. இதுவெல்லாம் போதாதென்று, கேஜிஎஃப் பாணியில் ஒரு ஆங்கில வசனமும் வேறு வருகிறது.

‘ஆஹா, திரும்பவும் ஒரு கேஜிஎஃப்பா’ என்று மகிழ்ச்சியடைந்து தியேட்டருக்கு செல்லும் வகையில் ஒட்டுமொத்த ட்ரெய்லரும் அமைந்திருந்தது.

படம் உண்டாக்கிய தாக்கம்!

ட்ரெய்லரில் நாம் என்னவெல்லாம் உணர்ந்தோமோ, அதெல்லாமே கதையாகத் திரையில் விரிகிறது.

சுதந்திரப் போரில் தந்தை அமரேஸ்வரா ஆங்கிலேயர்களை எதிர்த்து வீர மரணம் அடைகிறார். அந்த நெருக்கடியால், தாய் துளசி தேவி (சுதா) தனது இரு மகன்களை அழைத்துக்கொண்டு அமராபுரம் வருகிறார்.

ராட்டையில் கதர் நூற்று அவர்களிருவரையும் படிக்க வைக்கிறார்; வளர்த்து ஆளாக்குகிறார்; அவர்கள் பெரியவர்களான பிறகும் அவர் ராட்டையில் நூல் நூற்பதை நிறுத்துவதே அந்தத் தாய் நிறுத்துவதில்லை.

மூத்த மகன் சங்கேஸ்வரா (சுனில் புரானிக்) தாயோடு ஊரில் இருக்கிறார். அநீதியைக் கண்டால் பொங்கும் அளவுக்குத் தைரிய மனம் படைத்தவர் அவர்.

அதற்கு நேரெதிராகச் சாந்தமான குணமுடைய அர்கேஸ்வரா (உபேந்திரா) விமானப்படையில் சேர்ந்து பயிற்சியை நிறைவு செய்கிறார். வேலையில் சேருமுன் விடுப்பு எடுத்துக்கொண்டு அமராபுரம் வருகிறார்.

அந்த நேரத்தில், அந்த ஊரை ஆட்டிப் படைக்கும் கேங்க்ஸ்டர் கலீத்தின் மகன் திருமணம் நடைபெறுகிறது. அதற்காக, அவர் துபாயில் இருந்து விமானத்தில் வந்திறங்கி, அங்கிருந்து குதிரையில் ஏறி நேராகத் திருமணம் நடக்குமிடத்திற்கு வருகிறார்.

வழியில் ஒரு பெண்மணியை அவர் துப்பாக்கியால் சுட, அவர் இறந்துபோகிறார். அவரது கணவர், ‘ஏண்டா இப்படிப் பண்ணே’ என்று பொங்கியெழ, அந்த மனிதரை மிதித்து தள்ளுகிறார். ‘அப்படித்தான் பண்ணுவேன்’ என்று கர்ஜிக்கிறார்.

அப்புறமென்ன, அந்த இடத்திற்கு வரும் சங்கேஸ்வரா அந்த ரவுடியின் மகனைச் சுட்டுக் கொல்கிறார். அவரை போலீசார் கைது செய்கின்றனர். ‘சட்டப்படி வந்து உன்னை ஜாமீனில் எடுக்கிறேன்’ என்று தம்பி அர்கேஸ்வரா அண்ணனிடம் உறுதியளிக்கிறார்.

ஆனால், அதற்குள் கலீத்தின் ஆட்களோடு சேர்ந்து சங்கேஸ்வரனைக் கொல்லத் துணையாக இருக்கிறார் போலீஸ் அதிகாரி. அண்ணனின் பிணத்தை ஊரின் நடுவே தொங்கவிட்டு எச்சரிக்கை செய்ய, அந்த அவலத்தைத் தாயுடன் சேர்ந்து காண்கிறார் அர்கேஸ்வரா.

கோழையாகவும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவராகவும் இருக்கும் நாயகன், அந்த நிகழ்வுக்குப் பிறகு எப்படி பொறுமை காப்பார்?

அதன்பின் கலீத் மட்டுமல்ல, அவருக்குப் பின்னால் இருக்கும் ஒவ்வொருவரையும் ஒழிப்பேன் என்று களமிறங்குகிறார் அர்கேஸ்வரா.

அதன்பிறகு எதிரே வருபவர்களையெல்லாம் அடித்து நொறுக்கி அவர் களைப்பதற்குள், படம் பார்க்கும் நாம் சோர்ந்துவிடுகிறோம். ‘இதுதான் சாக்கு’ என்று கப்ஜா 2 விரைவில் வரும் என்று சொல்லி படத்தையும் முடித்துவிடுகிறார்கள்.

ட்ரெய்லரில் சொன்ன கதைக்கும் படத்திற்கும் பெரிய வித்தியாசமில்லைதான். ‘ஆனா, இப்படிப்பட்ட படமா இருக்கும்னு தெரியாமப் போச்சே’ என்று ரசிகர்களைப் புலம்ப வைத்திருக்கிறார் இயக்குனர் ஆர்.சந்துரு. அந்தளவிற்குப் படம் ‘செமத்தியான’ தாக்கத்தை உண்டுபண்ணியிருக்கிறது.

‘படத்துக்குத்தான் ‘கப்ஜா’ன்னு டைட்டில் வச்சீங்க; ஹீரோவுக்கும் அவங்க அண்ணனுக்கும் அர்கேஸ்வரா, சங்கேஸ்வரான்னு ஏண்டா பேரு வச்சீங்க’ என்று ரசிகர்கள் கொந்தளிக்கும் அளவுக்கு இருக்கிறது நிலைமை.

இதுல கேஜிஎஃப் ரெஃபரன்ஸ் வேற..!

கேஜிஎஃப்பில் ஒருவர் நாயகனைப் பற்றி முன்னுரை, முடிவுரை எல்லாம் வாசிப்பார்; அதேபாணியில், இதிலும் நாயகன் யார் எப்படிப்பட்டவர் என்பதை ஒருவர் விவரிக்கிறார்.

விவரிப்பவர் போலீஸ் அதிகாரியாக வரும் சுதீப். நாயகரோ ஒரு ரவுடி. அப்படியானால், அந்த போலீஸ் அதிகாரி அந்த ரவுடியைப் பார்த்து பிரமித்திருக்க வேண்டும் அல்லது அந்தளவுக்கு ரவுடி அந்த அதிகாரிக்கு நல்லவற்றைச் செய்திருக்க வேண்டும். இரண்டுமே இந்த படத்தில் இடம்பெறவில்லை.

இதே போல, கேஜிஎஃப்பில் யாஷ் பேசுவது போல ‘இங்கிலீஷ் பஞ்ச்’ பேசுகிறார் உபேந்திரா. அதே பாணியில் படத்தொகுப்பு, கேமிரா கோணம், வசனம், விஎஃப்எக்ஸ் வடிவமைப்பு, சண்டைக்காட்சிகள் என்று எல்லாமே இருக்கிறது.

ஆனால், அதே போன்றதொரு நேர்த்தியான திரைக்கதை இதில் இல்லை. அதுதான் பிரச்சனையே!

இருபதுகளைத் தாண்டிய இளைஞராக உபேந்திரா வரும்போது, இன்றைய சூழலில் ரஜினியும் கமலும் கல்லூரி மாணவர்கள் போல ஒப்பனை செய்துகொண்டது போலிருக்கிறது.

அதுவே பரவாயில்லை எனும் அளவுக்கு ஒரு காட்சி. தாய் சுதாவைக் காண ஸ்ரேயா வரும்போது, காதலி வந்திருக்கும் பதைபதைப்பில் அண்ணனுக்குப் பின்னால் போய் ஒளிந்துகொண்டு வெட்கப்படுகிறார் உபேந்திரா.

அதைப் பார்த்துவிட்டு, ‘ஆஹா என்னவொரு அற்புதமான காட்சி’ என்று சொன்னீர்களானால், ஒட்டுமொத்த தியேட்டரும் உங்களைத் திரும்பிப் பார்க்கும்.

இந்த படத்தில் ஒவ்வொருவரின் நடிப்பும் எப்படியிருக்கிறது என்பதை அறிய, அவர்கள் நடித்த பழைய படங்களைப் பார்ப்பதே போதுமானது. ட்ரெய்லரில் நவாப் கான், கோட்டா சீனிவாசராவ் போன்ற வில்லன் நடிகர்களின் இருப்பு சில நொடிகளில் காட்டப்படும்; படத்திலும் அதே அளவில்தான் தோன்றியிருக்கின்றனர்.

அதேநேரத்தில், படத்தில் உபேந்திராவை போட்டுத்தள்ள வில்லன்கள் ஒவ்வொருவராகத் திரையில் தோன்றிக்கொண்டே இருக்கின்றனர்; அதனால், சம்பந்தமேயில்லாமல் பல காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

சுதீப்பும் சிவராஜ்குமாரும் வரும் காட்சிகளும் அதில் அடக்கம்.

இந்த படத்தின் மாபெரும் தோல்விக்குக் காரணம் ‘டப்பிங்’ செய்யப்பட்டிருக்கும் விதம்; ‘கேஜிஎஃப்’ படத்தில் டைட்டில் தவிர படம் நெடுக நேரடித் தமிழ் படம்தானோ என்று சொல்லும் வகையில் வசனங்களும் பாடல்களும் இரவல் குரல்களின் உச்சரிப்பும் ‘செம்மையாக’ இருக்கும்.

இப்படமோ, தொண்ணூறுகளில் வெளியான டப்பிங் படம் பார்த்த அனுபவத்தைத் தருகிறது.

இடைவேளை விடும்போது, இதுதான் முதல் காட்சியாக அமைந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது; கிளைமேக்ஸ் காட்சியைப் பார்த்ததும், இதுதான் இடைவேளையாக இருக்க வேண்டுமென்பது புரிகிறது.

அதன்பிறகு, ‘அடடா, பாதி படத்தைக் காமிச்சு ஏமாத்திட்டாங்கடா’ என்று புலம்ப வேண்டியிருக்கிறது.

இந்த லட்சணத்தில், ‘கப்ஜா 2’ வேறு வருவதாக டைட்டில் வந்து விழுகிறது. ’ரொட்டித்துண்டை பிய்க்கிற மாதிரி ஒரு படத்தை ரெண்டா பிரிச்சுட்டு, ரெண்டு தடவை டிக்கெட் வாங்க வைக்குறீங்களே’ என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

இதையும் மீறி, படத்தில் பாராட்டப்பட வேண்டிய அம்சங்களாக ரவி பஸ்ரூரின் பின்னணி இசையும் ஏஜே ஷெட்டியின் ஒளிப்பதிவும் உள்ளன.

ட்ரெய்லர் பார்த்துவிட்டு, இதில் அற்புதமான கதை சொல்லல் இருக்குமென்ற நம்பிக்கையை உருவாக்குவது அவையிரண்டும்தான்.

என்னதான் டிஐ, விஎஃப்எக்ஸ், மிரட்டும் பின்னணி இசை, சிறப்பான கேமிரா கோணங்கள் என்று ஜிகினா பூச்சுகள் பளபளத்தாலும், அதனைத் தாங்கி ஜொலிக்கும் முகமாக திரைக்கதை அமைய வேண்டும்;

’கப்ஜா’வைப் பொறுத்தவரை, நடுவில் ஏதோ ஒரு முகம் இருப்பதாக நினைத்துக் கொண்டு படம் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் ஹோலி கொண்டாடியிருக்கிண்றனர்;

அதுவும் கறுப்பு வெள்ளை வண்ணங்களில். முடிவில், படம் பார்த்துவிட்டு வெளியே வரும் நாம்தான் கண்ணாடி பார்த்து மிரள வேண்டியிருக்கிறது; அதெல்லாமே நம் தலை மீது கொட்டியிருக்கிறது என்பதைத் தனியாகச் சொல்லத்தான் வேண்டுமா?

– உதய் பாடகலிங்கம்

You might also like