- ஒன்றிய அரசு
உயா்நீதிமன்றங்களில் உள்ள நீதிபதி காலியிடங்கள் குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு எழுத்துபூா்வமாக பதிலளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பதிலில், “மார்ச் 10-ம் தேதி நிலவரப்படி உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பணியிடம் காலியாக இல்லை. நாட்டில் உள்ள 25 உயா்நீதிமன்றங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 1,114. ஆனால், 780 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனா். 334 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.
உயா்நீதிமன்றங்களில் 118 நீதிபதி காலியிடங்களை நிரப்புவதற்கான பரிந்துரைகளை கொலீஜியம் இதுவரை அனுப்பியுள்ளது. அந்தப் பரிந்துரைகள் மீதான நடவடிக்கைகள் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. 216 நீதிபதி காலியிடங்களை நிரப்புவதற்கான பரிந்துரைகளை உயா்நீதிமன்ற கொலீஜியம் வழங்க வேண்டியுள்ளது.
பணி ஓய்வு, ராஜினாமா, உச்சநீதிமன்றத்துக்குப் பதவி உயா்வு உள்ளிட்ட காரணங்களால் உயா்நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்கள் காலியாவதாக தெரிவித்துள்ள சட்டத்துறை அமைச்சர், அவற்றை நிரப்புவதற்குத் தொடா்ச்சியான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு அரசமைப்புச் சட்ட அமைப்புகளின் ஆலோசனைகளைப் பெற்றே நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது” என்று விளக்கமளித்துள்ளார்.