திரையில் படம் ஓட ஓட, அதன் மையக்கதை என்னவென்று புரியும். சில படங்களோ அங்குமிங்கும் அலைபாயும் காட்சிகளின் வழியே, அதற்குச் சம்பந்தமே இல்லாத ஒரு கதையைச் சொல்லும். அவற்றில் இருந்து வேறுபட்டு, ’இதுதான் கதை’ என்று தொடக்கத்திலேயே சொல்லிவிட்டு சில படங்கள் நீளும். ’ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்ற வரியுடன் ஆரம்பிக்கும் ‘கொன்றால் பாவம்’ படம் அந்த ரகம் தான்.
சில படங்களின் உள்ளடக்கம் என்னவென்று சொல்ல டைட்டிலே போதும்; அந்த வரிசையிலும் இதனைச் சேர்க்கலாம்.
மெல்லத் துளிர்க்கும் குரூரம்!
மல்லிகா (வரலட்சுமி) என்ற இளம்பெண். தன் வயதையொத்தவர்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழும் நிலையில் தான் மட்டும் தனியாக வாழ்வதை எண்ணி மனதுக்குள் குமைகிறார். அவரது பெற்றோருக்கு (சார்லி – ஈஸ்வரிராவ்) மல்லிகாவின் வருத்தம் நன்றாகத் தெரியும். ஆனாலும், வறுமைக்கு வாழ்க்கைப்பட்டு தங்களது இயலாமையில் இருந்து வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மல்லிகாவின் வீட்டைப் பற்றி அப்பகுதியில் இருப்பவர்களுக்குத் தெரியும். சில கிலோமீட்டர் இடைவெளியில் அது போன்று அமைந்திருக்கும் வீடுகளைத் தாண்டித்தான் அடுத்த ஊருக்குப் போக வேண்டியிருக்கும்.
ஒருநாள் மல்லிகாவின் வீட்டுக்கு வருகிறார் அர்ஜுனன் (சந்தோஷ் பிரதாப்) எனும் இளைஞர். மாலை நேரமாவதால் அவர்களது வீட்டில் தங்கிக் கொள்ளலாமா என்று அனுமதி கேட்கிறார். மல்லிகாவை நினைத்துப் பெற்றோர் தயங்க, அவரோ ‘எனக்காக ஒண்ணும் யோசிக்க வேண்டாம்’ என்கிறார். அனுமதி கிடைத்தவுடன், தானும் அந்தக் குடும்பத்தில் ஒருவர் என்பது போல நடந்து கொள்ள ஆரம்பிக்கிறார் அர்ஜுனன்.
அதேநேரத்தில், அர்ஜுனனின் புஜபல பராக்கிரமத்தைப் பார்த்து சொக்குகிறார் மல்லிகா. அப்போது, தன் கைவசமிருக்கும் நகை, பணத்தைக் காட்டுகிறார் அர்ஜுனன். இந்தப் பணமிருந்தால் தனக்கும் திருமண வாழ்க்கை வாய்த்திருக்கும் என்று நினைக்கும் மல்லிகா மனதில் மெல்ல அர்ஜுனன் மீது மோகம் பிறக்கிறது. ஆனால், அவரோ மல்லிகாவின் நோக்கத்தைக் கண்டு முகம் சுளிக்கிறார்.
அப்போது, பக்கத்து ஊரில் இருக்கும் ஒரு பண்ணையார் வீட்டில் யாரோ ஒரு திருடன் கொள்ளையடித்த தகவலும் வந்து சேர்கிறது. அர்ஜுனன் கையில் இருப்பது திருட்டு நகைகளாக இருக்கலாம் என்றெண்ணும் மல்லிகா, அவரைக் கொன்று அவற்றை அபகரிக்க எண்ணுகிறார். நம்மை நம்பி வந்திருக்கும் ஒரு அப்பாவியைக் கொல்வதா என்று தாயார் தயங்க, மகளது காமதாபங்களைத் தீர்க்க முடியாத இயலாமையை எண்ணி வருந்தும் தந்தையோ அதற்குச் சம்மதிக்கிறார். அதன்பிறகு அர்ஜுனன் என்னவானார் என்பதே மீதிக்கதை.
சாதாரண மனிதர்கள் எத்தனை கருணைமிக்கவர்களாக இருந்தாலும். அவர்கள் மனதில் குரூரம் துளிர்க்க தீர்க்கவே இயலாத வறுமை போதும் என்று சொல்கிறது ‘கொன்றால் பாவம்’.
கெமிஸ்ட்ரி இல்லை!
நாயகன் சந்தோஷ் பிரதாப்புக்கு இதில் சொல்லும்படியான வேடம். அதற்கேற்றவாறு கட்டுமஸ்தான உடல்வாகோடு தோன்றியிருக்கிறார்.
ஒரு குடும்பத்தின் மீது அவர் ஏன் அன்புமழை பொழிய வேண்டும் என்பதற்கான காரணம் கிளைமேக்ஸில் தெரிந்துவிடும் என்றாலும், அதுவொரு சஸ்பென்ஸ் ஆக இருக்குமளவுக்கு அவர் நடிப்பு அமையவில்லை.
சார்லிக்கும் ஈஸ்வரி ராவுக்கும் இதில் காட்சிகள் அதிகம். போலவே, கேமிராவை பார்த்து உணர்வுகளை வெளிப்படுத்தப் போதுமான வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.
அதனை இருவருமே சரியாகப் பயன்படுத்தியிருக்கின்றனர். ஆனால், அவர்களது அன்னியோன்யத்தைச் சொல்வதற்கான வசனங்களோ, காட்சிகளோ படத்தில் இல்லை என்பது பெருங்குறை.
இவர்கள் மூவருக்கும் திரைக்கதையில் இருக்கும் முக்கியத்துவத்தை ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொள்கிறார் வரலட்சுமி சரத்குமார். தெனாவெட்டு, அலட்சியம், குரூரம், வருத்தம் என்று பல உணர்வுகளைப் பிரதிபலித்தாலும், காமத்தையும் காதலையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு மட்டும் தரப்படவில்லை. அதனை அவரே தவிர்த்தாரா அல்லது இயக்குனரே இவ்வளவு போதும் என்று முடிவு செய்தாரா எனத் தெரியவில்லை.
சந்தோஷ் பிரதாப்புக்கும் அவருக்குமான ‘கெமிஸ்ட்ரி சரிவர இல்லை’ என்பதே கிளைமேக்ஸ் சப்பென்று மாறக் காரணமாயிருக்கிறது. எங்கே கலாசாரக் காவலர்கள் போர்க்கொடி தூக்குவார்களோ என்ற பயம் அதன் பின்னிருக்கலாம்.
இவர்கள் தவிர்த்து சென்றாயன், ஜெயக்குமார், சுப்பிரமணிய சிவா, கவிதா பாரதி, தங்கதுரை உட்பட வெகுசிலர் இதில் தோன்றியிருக்கின்றனர்.
ஒரே வீட்டுக்குள் பெரும்பாலான காட்சிகள் நிகழ்வது சலிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்ற நோக்கில் அழகுற அமைந்திருக்கிறது செழியனின் ஒளிப்பதிவு. ப்ரீதியின் படத்தொகுப்பு நேர்த்தியாக காட்சிகளை அடுக்கத் துணை புரிந்திருக்கிறது.
‘வாரத்திற்கு ஒரு படம் பணியாற்றுகிறாரோ’ என்று யோசிக்கும் அளவுக்குத் தொடர்ந்து இசையமைப்பில் ஈடுபட்டு வருகிறார் சாம் சிஎஸ். ‘கொன்றால் பாவம்’ கிளைமேக்ஸ் காட்சி உட்படத் திரைக்கதையின் முக்கியமான இடங்கள் நம்மை உலுக்க அவரது பின்னணி இசையும் ஒரு காரணம்.
’ரீமேக்’ கலாசாரம்!
ரூபர்ட் ப்ரூக் எழுதிய ‘லித்துவேனியா’ நாடகத்தைத் தழுவி இந்தியாவிலும் பல நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. அப்படிக் கன்னடத்தில் அரங்கேற்றப்பட்ட ஸ்ரீ மோகன் ஹப்புவின் நாடகமொன்றைத் தழுவி எடுக்கப்பட்ட கன்னடத் திரைப்படம் ‘ஆ கரால ராத்ரி’. அதுவே, 2020-ல் ‘அனகனகா ஓ அதிதி’ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. இரண்டு படங்களையும் இயக்கிய தயாள் பத்மநாபனே ’கொன்றால் பாவம்’ படத்தைத் தந்திருக்கிறார்.
காமம் முற்றி எரிச்சலில் தவிக்கும் முதிர்க்கன்னியாகவே வரலட்சுமி நடித்த பாத்திரம் தெலுங்கிலும் கன்னடத்திலும் வடிவமைக்கப்பட்டிருக்கும். சந்தோஷ் பிரதாப் பாத்திரம் நிராகரிக்கும்போது அவர் ரௌத்திரம் கொள்வதை நியாயப்படுத்துவதாகவும் அந்த விஷயம் இருக்கும். ஏனோ தமிழில் வரலட்சுமியை அப்படிக் காட்டாமல் தவிர்த்திருக்கிறார் தயாள் பத்மநாபன்.
தெலுங்கில் வரலட்சுமி நடித்த வேடத்தில் தோன்றியவர் பாயல் ராஜ்புத். ஆர்டிஎக்ஸ் 100 எனும் படம் மூலமாகப் பிரபலமானவர். அவருக்கென்று கவர்ச்சிகரமான இமேஜ் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் உண்டு. ஆனால், காமம் பொதிந்து வசனம் பேசும் ஸ்டைலை அவர் அளவுக்கு இந்தப் படத்தில் வரலட்சுமி கைக்கொள்ளவில்லை.
சந்தோஷ் பிரதாப் நல்ல நடிகர் என்றபோதும், வரலட்சுமி அதட்டினால் அடங்கிப் போவார் என்றளவிலேயே இதில் நடித்துள்ளார். அதுவே, கதையோடு ஒன்றத் தடையாக இருக்கிறது.
வீடு தேடி வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தபிறகு, குழந்தையைக் கையில் தூக்கி ‘நீ வளர்ந்து பெரியாளானதும் உன்னையே கல்யாணம் பண்ணிக்கறண்டா’ என்று சொல்வது திருமண வயதைத் தாண்டிய ஒரு பெண்ணின் மனவலியைச் சொல்லும். அதையும் தாண்டி, தன் தாயிடம் ‘உனக்கும் உன் புருஷனுக்கும் நடக்கறது எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா’ என்று சொல்கிறார் அப்பெண். கொஞ்சம் அதிகப்படியாகத் தோன்றும் இந்த வசனங்கள் தான், கதையின் திருப்புமுனையை நாமாகப் புரிந்துகொள்ளவும் வகை செய்கிறது.
இயக்குனரைப் பொறுத்தவரை இப்படம் ஒரு அமிலச் சோதனை. கொஞ்சமாய் ஆபாசத்தைப் புகுத்தினாலும், வணிக நோக்கத்தைப் பிரதானப்படுத்தியதாக விமர்சனம் வரும். அதனைத் தவிர்க்க நினைத்தால், மையக்கரு ரசிகர்களுக்குப் பிடிபடாமல் போகும். அந்த சவாலை ஏற்று, வரலட்சுமியையும் சந்தோஷ் பிரதாப்பையும் திரையில் கண்ணியமாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர். ஆனால், ஏற்கனவே இக்கதை தெரிந்தவர்களுக்கு அவர்களது நடிப்பு திருப்தியைத் தராது.
ஒரு திரைப்படமாகப் பார்த்தால், ரொம்பவும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படைப்பு ‘கொன்றால் பாவம்’. அது சிலருக்குக் குறையாகத் தென்படலாம். ‘இதையெல்லாம் ஒரு கதையா எடுக்கணுமா’ என்று சிலர் முடிவைக் கண்டு அதிர்ச்சியுறலாம்.
அனைத்தையும் தாண்டி, சாயங்காலம் தொடங்கி நள்ளிரவில் முடிவடைவதாகச் சொல்லப்படும் இக்கதையைத் திரையில் பார்ப்பது சிலருக்கு அதிருப்தியைத் தரலாம். ஏனென்றால், கிழக்கு நோக்கி நகரும் நிழல்களைத் திரையில் காட்டவே இல்லை. ஊரை விட்டு விலகி வெகுதொலைவில் இருக்கும் ஒற்றை வீடு என்பதே அந்நியமாகத் தோன்றுபவர்களுக்கு, திரையில் கால வெளியைச் சரியாகக் குறிப்பிடாதது அதீதமான கற்பனையாகவே தெரியும்.
அதுவே ‘கொன்றால் பாவம்’ எதிர்கொள்ளும் மாபெரும் தடை. அதனாலேயே, கேமிரா முன்னால் நிகழும் மேடை நாடகமாகவும் எண்ணத் தூண்டுகிறது.
– உதய் பாடகலிங்கம்