அதிகரிக்கும் ‘கஞ்சா சாக்லேட்’ புழக்கம்!

“ஆபரேஷன் கஞ்சா வேட்டை” தமிழக காவல்துறையினர் கடந்த சில மாதங்களாக அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தையாக மாறிவிட்டது.

குறிப்பாக தமிழக காவல்துறையின் தலைவராக உள்ள சைலேந்திர பாபு வீடியோ வழியாக தோன்றி தமிழகத்தில் கஞ்சா விற்பனையை கட்டுக்குள் கொண்டுவர ஆப்ரேஷன் கஞ்சா வேட்டையை கையில் எடுத்துள்ளோம் என்று சிலாகித்தார்.

தமிழக காவல்துறையும் கஞ்சாவை கட்டுக்குள் கொண்டுவர படாதபாடு பட்டுவருகிறது.

இந்த ஆப்ரேஷன் கஞ்சா வேட்டையே ஆப்ரேஷன் 1..2..3 என மூன்று கட்டங்களாக நடத்தி முடித்து, கஞ்சாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம் என்று மார்த்தட்டி முடிப்பதற்குள் தமிழக காவல்துறையின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டியிருக்கிறார் இந்த பிகார் இளைஞர்.

அதுவும் தமிழகத்தின் தலைநகரான சென்னையின் மையப்பகுதியிலேயே கஞ்சா விற்பனையை ஹைடெக் வழியில் நடைபெற்றுக் கொண்டிருந்ததை இப்போதுதான் கண்டறிந்துள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள பிரபல உணவகத்திற்கு அருகே சிறிய பெட்டியில் வைத்து பீடா வியாபாரம் செய்துவந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த கசரத் என்கிற இளைஞர் தான் தமிழக போலீஸாருக்கு தண்ணீ காட்டிய பலே கில்லாடி.

கஞ்சாவை பொட்டலமாக விற்றால் தானே காவல்துறை கண்ணில் சிக்குவோம் என்று யோசித்தபோது தான் வட மாநிலங்களில் சில இடங்களில் கஞ்சா சாக்லேட் விற்பனையாவது பற்றிய விவரம் கிடைத்தது.

குஷியான கசரத் உடனடியாக தனது சொந்த மாநிலமான பீகார் மாநிலத்திலிருந்து கஞ்சா சாக்லேட்டை இறக்குமதி செய்ய முடிவெடுத்தார்.

கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பாக பீகாரிலிருந்து இரயிலில் பார்சலாக இந்த கஞ்சா சாக்லேட்டை கொண்டுவந்து விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் கஞ்சாவுடன், சாக்லேட் பொருட்களை கலந்த சாக்லேட் மட்டுமே விற்பனை செய்துவந்துள்ளார்.

குறிப்பாக தன்னிடம் பீடா வாங்கவரும் இளைஞர்களை குறிவைத்து இந்த சாக்லேட் பற்றி சொல்லி, பான் சாக்லேட் என்று  சொல்லித்தான் விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

ஒருகட்டத்தில் இளசுகள் அந்த சாக்லேட் போதைக்கு அடிமையானதும், வியாபரம் களைகட்ட துவங்கியது.

அடுத்தகட்டமாக கஞ்சாவையே உருண்டை வடிவத்தில் செய்து, அதை சாக்லேட் கவரில் சுற்றி விற்பனைக்கு கொண்டுவந்துள்ளார்.

அதாவது கஞ்சா சாக்லேட் போதை பத்தாது என்று கேட்பவர்களுக்கு, கஞ்சா உருண்டையை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார்.

தமிழக காவல்துறை தமிழகம் முழுவதும் கஞ்சா வேட்டையை நடத்திக் கொண்டிருக்க, கசரத் சத்தமில்லாமல் அண்ணாசாலையில் வைத்தே கஞ்சா வியாபாரத்தில் கல்லாக்கட்டி வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் இரவு நேரத்தில் இந்த கடையை சுற்றி இளசுகள் கூட்டம் அதிகமானதை நோட்டப்பிறகு தான் கஞ்சா சாக்லேட் விசயமே காவல்துறையினர் காதுக்கு எட்டியுள்ளது.

அதன்பிறகு தான் கசரத் கடையை தொடர்ந்து நோட்டமிட காவல்துறையின் பொறியில் சிக்கியிருக்கிறார் இந்த பீகார் இளைஞர். அவரிடமிருந்து 38 கிலோ கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்துள்ளது காவல்துறை.

கசரத் காவல்துறையிடம் சொல்லியது அதைவிட மாஸ்.

“சார் நான் பீகார்ல ஒரு ரூபாய்க்கு ஒரு சாக்லேட் வாங்கி, இங்க நாற்பது ரூபாய்க்கு விக்கிறேன். நல்ல லாபம்” என்று பிஸினஸ் ட்ரிக்கை சொல்லி அசத்தியிருக்கிறான்.

நான் மட்டுமா? இந்த வியாபாரம் பண்றேன் சிட்டில பலரும் இந்த சாக்லேட்டை விற்க ஆரம்பிச்சுட்டாங்க என்று கொழுத்தி போட கஞ்சாவை தேடி அழைந்த காவல்துறை இப்போது கஞ்சா சாக்லேட் எது என்று தேடி அழைய ஆரம்பித்துள்ளது.

You might also like