ஜானகி அக்காவின் அறிவுரை எப்போதும் என்னுள் இருக்கும்!

– நடிகை விஜயகுமாரி

திருமதி. ஜானகி எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் சினிமாவில் இருந்த காலத்திலிருந்தே பழக்கம் உண்டு. எனது கணவர் எஸ்.எஸ்.ஆரும் எம்.ஜி.ஆர். அண்ணன் அவர்களும் கட்சியில் இருந்தபோது அண்ணன் தம்பியாக தான் பழகி வந்தனர். நானும் ஜானகி அவர்களை ‘அக்கா’ என்று தான் அழைப்பேன்.

ஜானகி அக்காவிற்கு தான் முதல்வருடைய மனைவி என்ற எண்ணம் இருந்ததே கிடையாது. அந்த அளவிற்கு அவர் எல்லா விஷயங்களிலும் மிக எளிமையாக இருந்தார்.

ஜானகி அக்கா முதல்வராக இருந்தபோது கூட கோட்டைக்குச் செல்லும் முன்பு தனது வீட்டு வேலைகளை தானே செய்து கொள்வதை நான் பார்த்திருக்கிறேன்.

சூழ்நிலை காரணமாக அவர் அரசியலில் நுழைந்தார்களே தவிர அவர்களுக்கு அரசியல் மீது ஈடுபாடு கிடையாது. இதை என்னிடம் அக்காவே சொல்லி இருக்கிறார்.

குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதிலும், தன் கணவரை கவனித்துக் கொள்வதிலும் தான் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்தார் ஜானகி அக்கா.

அவருடைய தம்பி குழந்தைகளை மிகவும் பாசத்துடன் வளர்த்தார். சைக்கிள், பேருந்து உட்பட அனைத்திலும் பயணம் செய்ய வேண்டும் என குழந்தைகளுக்கு எளிமையாக வாழும் முறையையும் கற்றுக் கொடுத்தார்.

எங்களது வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் எல்லாம் அக்கா கலந்து கொண்டிருக்கிறார். அதேபோல் நாங்களும் அவர்களது இல்ல நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் அளவிற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் போல நெருக்கமானவர்களாக தான் இருந்தோம்.

ஒருமுறை பேரறிஞர் அண்ணாவின் மகன் பரிமளம் கல்யாணத்திற்கு நாங்கள் சென்றோம். அப்போது நான் எனது கணவருடன் சென்றேன்.

அதேபோல் எம்.ஜி.ஆர் அண்ணனும் ஜானகி அக்காவும் வந்தார்கள். ஆனால் அந்த விழாவில் மேடை ஏற முடியாத அளவிற்கு அதிகக் கூட்டம் இருந்தது.

அப்போது அண்ணா எங்களிடம் கூட்டம் அதிகமாக இருப்பதால் எம்.ஜி.ஆர்-ஜானகியுடன் காரில் வீட்டிற்குச் செல்லும்படி கூறினார்.  அதன் பிறகு எங்கள் இருவரையும் எம்.ஜி.ஆரும் ஜானகியும் அவர்களுடைய காரில் அழைத்துச் சென்றனர்.

அப்போது எங்களை நேராக தோட்டத்திற்கு அழைத்துச் சென்ற எம்.ஜி.ஆர் அண்ணன், “என் தங்கை முதன்முதலாக நம் வீட்டிற்கு வந்திருக்கிறார்” எனக் கூறி ஒரு தாம்பூலத் தட்டில் பத்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் புடவையையும் வைத்து என்னிடம் கொடுத்தார். அதன்பிறகு தோட்டத்தில் உணவருந்திய பின் தான் எங்களை அனுப்பி வைத்தனர்.

எம்.ஜி.ஆர் என்னை ’உடன் பிறக்காத தங்கை’ என்றுதான் அடிக்கடி கூறுவார். அதனால் தான் அவரது படங்களில் என்னை கதாநாயகியாக நடிக்க வைக்க மறுத்துவிட்டார்.

ஒருநாள் காலையில் எனக்கு போன் செய்த எம்.ஜி.ஆர் அண்ணன் என்னிடம், “நான் உன்னுடைய சம்பந்தி பேசுகிறேன். மற்றதை உன்னுடைய அக்கா சொல்வார்கள்” என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார்.

எங்களுக்கு எதுவும் புரியவில்லை. நாங்கள் உடனடியாக திரும்பவும் அந்த எண்ணிற்கு அழைத்தபோது எம்.ஜி.ஆர் தான் மீண்டும் போனை எடுத்தார்.

அப்போது, “அதற்குள் என்ன அவசரம் உனக்கு.. இரு சொல்கிறேன்” என்று கூறி மறுபடியும் போனை வைத்துவிட்டார்.

அதன் பிறகு நான் அக்காவிடம் கேட்டபோது தான் தெரியவந்தது அவர்களுடைய பேத்தி கவிதாவை என்னுடைய மகனுக்குக் கொடுப்பதாக பேச்சு வந்ததால் என்னை சம்பந்தி என அழைத்திருக்கிறார்.

அந்த 15 வருடங்கள் நாங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகத் தான் பழகி வந்தோம்.

ஜானகி அக்காவின் தனித்துவம் என்னவென்றால் அவர்கள் ஏழை, பாழை, பணக்காரர்கள் எனப் பிரித்துப் பார்க்கமாட்டார். எல்லோருடனும் இயல்பாக கனிவுடன் பழகுவார்.

ஜானகி அக்கா கஷ்டப்பட்ட காலங்களில் தன்னுடன் பழகியவர்களிடம் கூட பழமை மறக்காமல் கடைசி வரை அதே தன்மையுடன் தான் பழகினார்.

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும் கூட அவர்களுக்கும் ஆடைகள் வாங்கி கொடுப்பார்கள் அக்கா. பண்டிகை தினங்களில் அக்கா எனக்குப் புடவை வாங்கித் தருவார். நான் அக்காவிற்குப் புடவை வாங்கித் தருவேன். அந்த அளவிற்கு நாங்கள் மிகவும் நெருக்கத்துடன் பழகி வந்தோம்.

ஜானகி அக்கா எல்லோருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர். இயற்கையாகவே பேரழகுக் கொண்டவர் ஜானகி அக்கா. அதனால் தான் என்னவோ எப்போதும் மிக எளிமையாக இருப்பார். யாருக்கும் கெடுதல் நினைக்காத மனம் கொண்டவராகவே வாழ்ந்தார்.

குழந்தைகளை ஒழுக்கமுடையவர்களாகவும் எல்லாச் சூழலுக்கும் தகுந்தபடி வாழவும் பழகிக் கொடுத்தார். தன்னைப் போலவே அனைத்துக் குழந்தைகளையும் எளிமையாக இருக்க கற்றுக் கொடுத்தார்.

புதுப்படங்கள் வரும்போதெல்லாம் தியேட்டருக்குச் செல்வோம். அப்போது, “விஜயா இன்று நீ சூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு என்னுடன் வா.. நாம் படத்திற்கு போய் வரலாம்” என என்னிடம் கூறுவார். எனக்கு படம் பார்ப்பதில் விருப்பமில்லை என்றாலும் எனது அக்காவிற்காக நான் அவருடன் சென்று வருவேன்.

அண்ணன் மறைந்த அன்று அவரைத் தொட்டு வணங்குவதற்காக முதன்முறையாக அவரது அறைக்குச் சென்றேன். அப்போது அண்ணனுடைய டேபிளில் மூகாம்பிகை படம் இருந்தது. முதல் முறையாக அவர் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவிற்குச் சென்றபோது அவரிடம் நான் அளித்திருந்த படம் அது.

அடிக்கடி அக்காவை சென்று நான் பார்த்து வருவேன். அக்கா மறைந்த அன்று கூட என்னை சந்திக்க வருமாறு அழைத்திருந்தார். நான் சென்று பார்ப்பதற்குள் அவர் மறைந்து விட்டார். அக்காவின் மறைவிற்குப் பின் இன்று வரை நான் அங்கு செல்லவே இல்லை.

அவரது கடைசிக் காலத்தில் எம்.ஜி.ஆர் அண்ணனை ஒரு குழந்தையைப் போலப் பார்த்துக் கொண்டார் ஜானகி அக்கா. அரசியலிலும் சினிமாவிலும் அண்ணனுக்கு மிகுந்த உத்வேகம் கொடுத்தவர் ஜானகி அக்கா.

எம்.ஜி.ஆர் அண்ணனைப் போலவே ஜானகி அக்காவும் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் கொடைத் தன்மை மிக்கவராகத் திகழ்ந்தார்.

அவர்கள் வாழ்நாளில் பெற்ற கஷ்டங்களுக்குப் பலனாக  தமிழகத்தின் முதல் பெண் முதல்வராக இருக்கும் வாய்ப்பு கிடைத்தது தான் பெரிய வரம். தனது பெயரில் வாங்கிய அவருடைய இடத்தைக் கூட அ.தி.மு.க அலுவலகத்திற்காக கொடுத்தவர்.

தினமும் நான் சூட்டிங் முடிந்து வந்த பிறகு அக்கா எனக்கு போன் செய்வார். எம்.ஜி.ஆர் அண்ணன் வீட்டிற்கு வரும் வரை என்னுடன் போனில் பேசிக் கொண்டிருப்பார் ஜானகி அக்கா. நான் கஷ்டப்பட்ட காலங்களிலெல்லாம் ஒரு தாயாக, “உனக்கு நான் இருக்கிறேன்” என்று எனக்கு மிகுந்த ஆறுதல் கூறியவர் ஜானகி அக்கா.

அவர் கூறிய அறிவுரை எப்போதும் என்னுள் இருக்கும்.

‘அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் – 100’ சிறப்பு மலரில் இருந்து.

You might also like