விஸ்வாசுமித்ரன் விமர்சனம்
ஒரு படத்தில் ஏதேனும் வித்தியாசப்படும் அம்சங்கள் இடம்பெற்றுவிட்டால் அதை ‘ஆஹா ஓஹோ’ எனப் புகழும் புல்லரிப்புக் கலாச்சாரம் சில வருடங்களாகவே தமிழ் விமர்சன உலகில் தனது உருட்டுவேலையை திறம்பட செய்து கொண்டிருக்கிறது என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் மாற்று சினிமா ஆர்வலரான விஸ்வாமித்ரன்.
‘விக்ரம்’ படம் வந்தால் அதற்கொரு உருட்டு. ‘காந்தாரா’ வந்தால் அதற்கொரு உருட்டு. ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ வந்தால் அதற்கொரு உருட்டு. இன்னும் பல உருட்டுகள் வழிநெடுக காத்திருக்கின்றன.
உருட்டுபவர்கள் மட்டும் இசைநாற்காலியில் ஓடிச்சென்று அமர்வதுபோல மாறி மாறி அமர்ந்து கொள்கிறார்கள். ஆனால் விளையாட்டு ஒன்றுதான்.
தவறான படத்தைப் பாராட்டி எழுதினால் யாரும் சொல் வாளை வீசுவதில்லை. பாதுகாப்பான பிழைப்பு மனதோடு தப்பித்துக் கொள்ளலாம்.
அந்த தவறான படத்திற்கு நியாய உணர்வோடு எதிர்விமர்சனம் எழுதிவிட்டால், அந்த இசை நாற்காலிப் போட்டியாளர்கள் ஓடிவந்து கண்டனக் குரலை எழுப்பி எழுதுபவரை அங்கிட்டும் இங்கிட்டும் போட்டு உருட்டுகிறார்கள்.
இந்தப் புல்லரிப்பு கலாச்சாரம் திரைக்கலையை அரைகுறையாகப் புரிந்துகொண்டு நாட்டாமை பண்ண வருவதால் உருவாகிறது.
வெகுசன சினிமா மீது கொள்ளும் கண்கள் மூடிய வழிபாட்டிலமைந்த மிகை நாட்டம் நல்ல சினிமாவிற்கு உகந்ததல்ல.
கண்களை நன்றாகத் திறந்து தெளிவில் பகுத்தறிந்து ஏற்கவும் மறுக்கவுமான ஆக்கபூர்வ சோதனைக்களம் நல்ல சினிமா என்பது.
மலையாள இயக்குநர் அரவிந்தன் தான் இயக்கிய (விமர்சகர்களது பாராட்டைப் பெற்ற) ‘சிதம்பரம் தனக்கு பிடித்தமான படமில்லை’ என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார்.
அப்படிச் சொல்ல இன்று ஒரு இயக்குநருக்கு தைரியம் இருக்கிறதா? உலக சினிமாவில், இயக்குநரிலிருந்து விமர்சகர் வரை அந்த நேர்மை மனநிலை கடைபிடிக்கப்படுவதால்தான் நல்ல சினிமாவிற்கான பெருந்தடம் நெடிய பயணத்தில் வீறுநடை போடுகிறது” என்று போலியான சினிமா போற்றுதல்களைச் சாடியிருக்கிறார் விஸ்வாசமித்ரன்.