அலோபதி, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, சித்த மருத்துவம் உட்படப் பல மருத்துவ முறைகள் இருந்தாலும், உலகம் முழுக்க இயற்கை சார்ந்த மருத்துவ முறைகளே மண் பற்று கொண்ட மக்களால் பின்பற்றப்படுகின்றன.
அப்படித் தமிழ்நாட்டில் நாட்டு வைத்தியர்களும் அவர்களைச் சார்ந்தியங்கும் மருந்து வணிகர்களும் இன்றும் தங்கள் பணியை ஆற்றி வருகின்றனர்.
சித்தர்களின் ஓலைச்சுவடிகளை, வாய் வழித் தகவல்களை அடிப்படையாகக் கொண்ட நாட்டு வைத்திய முறை கடுமையான நோய்த்தொற்று காலங்களில் கவனிப்பைப் பெறுவது வாடிக்கை. அப்படியொரு சூழலைச் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது ஓம் விஜய் இயக்கியுள்ள ‘ஓம் வெள்ளிமலை’ திரைப்படம்.
நாட்டு வைத்தியத்தை மையப்படுத்தினாலும், இது முழு நீளத் திரைப்படம் பார்த்த அனுபவத்தைத் தருகிறதா அல்லது வெறும் பிரச்சாரமாக அமைந்திருக்கிறதா?
ஊரே வெறுக்கும் வைத்தியர்!
வெள்ளிமலையின் அடிவாரத்தில் வசிப்பவர் அகத்தீஸ்வரன் (சூப்பர்குட் சுப்பிரமணி). சிறுவயதில் அவரது தந்தையிடமும் சகோதரனிடமும் சிகிச்சை பெற்ற நபர் ஒருவர் மரணமடைந்த காரணத்தால், அவ்வூரில் உள்ள எவரும் அகத்தீஸ்வரன் குடும்பத்தை நாடி வருவதில்லை.
உயிரே போனாலும் வைத்தியர் வீட்டு வாசலில் நிற்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வாழ்கின்றனர்.
ஆனால், அகத்தீஸ்வரனும் அவரது மகளும் (அஞ்சு கிருஷ்ணா) பாரம்பரிய வைத்தியத்திற்கான மூலிகைகளைத் தேடுவதையே குறியாகக் கொண்டிருக்கின்றனர்.
ஊரில் உள்ளவர்களில் ஒருவர் மட்டும் அகத்தீஸ்வரனின் நாட்டு வைத்தியத்தை நம்புகிறார்.
அந்த நபர் மரணமடைந்தவுடன், சென்னையில் இருக்கும் அவரது பேரனை வரவழைக்கின்றனர் அவ்வூர் மக்கள்.
அரிப்பு நோய் அறிகுறிகளுடன் ஊர் திரும்பும் அந்த பேரனால் அனைவருக்கும் அது தொற்றுகிறது. என்ன செய்தாலும் குணப்படுத்த முடியாது என்ற நிலையில், நோய் பரவக் காரணமான நபர் அகத்தீஸ்வரனைத் தேடி வருகிறார்.
பலகட்ட வைத்தியத்திற்குப் பின் அவரது நோய் தீர்கிறது. இதனை அறிந்து, ஊர் மக்கள் அனைவரும் அவரிடம் உயிரைக் காக்குமாறு மண்டியிடுகின்றனர்.
அதற்கான மூலிகையை வெள்ளிமலையில் இருந்து கொணர வேண்டுமென்று கூறுகிறார் அகத்தீஸ்வரன்.
அதன் தொடர்ச்சியாக மகள், உறவினர்கள் சகிதம் மலையேறத் தொடங்குகிறார். அகத்தீஸ்வரன் மூலிகையைக் கண்டறிந்தாரா, இல்லையா என்பதுடன் படம் முடிவடைகிறது.
உண்மையைச் சொன்னால், ‘ஊரே வெறுக்கும் வைத்தியர் ஒருவர் அதே மக்களின் துயர் தீர்க்கிறார்’ என்பது அற்புதமான கமர்ஷியல் படத்திற்கான ஒருவரிக் கதை.
அதுவே, இப்படம் வறட்சியான திரைக்கதையைக் கொண்டிருக்காது என்ற உத்தரவாதத்தைத் தருகிறது.
இயற்கையெனும் அன்னை!
பல படங்களில் சிறு வேடங்களில் நடித்த சூப்பர்குட் சுப்பிரமணி தான் இதில் கதை நாயகன். படம் முழுக்க வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லும் வகையில் அவரது நடிப்பு அமைந்திருக்கிறது.
நகைச்சுவைக் காட்சிகளில் அவர் காட்டும் முகபாவனைகள் கொஞ்சம் மிகையாக அமைந்து, மையக்கதையை விட்டு விலகி நிற்கிறது.
ஆனால், அதுவே சாதாரண ரசிகர்களை எளிதில் ஈர்க்கக்கூடியது என்ற வாதத்தையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
இக்கதையில் இளம் ஜோடியாக வீர சுபாஷ் – அஞ்சு கிருஷ்ணா வருகின்றனர். ‘பருத்தி வீரன்’ கார்த்தியைப் பிரதியெடுத்தது போன்றிருக்கும் வீர சுபாஷின் நடிப்பு ஒரு சராசரி இளந்தாரி ஆண் பிள்ளையைக் கண்ணில் காட்டியிருக்கிறது.
இயல்பாக வசனம் பேசுவது தொடங்கி உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்துவது வரை ‘அட்டகாசம்’ என்று சொல்ல வைக்கிறார் அஞ்சு.
அழகிப் போட்டிகளில் வென்றவர் என்றாலும், இதில் ஒரு சாதாரண கிராமத்துப் பெண்ணாக மட்டுமே தெரிவது சிறப்பு. இன்னொரு ஐஸ்வர்யா ராஜேஷ் தயார் என்றே கூற வேண்டும்.
இவர்கள் தவிர்த்து பயில்வான், வைத்தியரின் மச்சான், அவரது மகள் உட்படப் பல பாத்திரங்களை ஏற்றவர்கள் சிறப்பாக நடித்துள்ளனர். அவர்களது நடிப்பு செயற்கையாகத் தெரியவில்லை.
‘ஓம் வெள்ளிமலை’யின் ஒவ்வொரு காட்சியிலும் இயற்கை அழகு நிறைந்திருக்கிறது; காரணம், மணி பெருமாளின் ஒளிப்பதிவு.
காடு மேடு மலை என்று கேமிரா சுற்றிச் சுழன்றாலும் கிரேன் உட்படப் பெரிய உபகரணங்களைப் பயன்படுத்தியிருப்பதே ‘மேக்கிங்’கில் கூர்மை காட்டியதைச் சொல்கிறது.
மவுனத்திற்கு இடம் தந்து பல காட்சிகளைக் கோர்த்திருக்கிறார் சதீஷ் சூர்யா. அதனால் ஒரு காட்சி தொடங்குமிடத்திலும் முடியுமிடத்திலும் தென்படும் கூர்மை குறைவு என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
மாய பாண்டியனின் கலை வடிவமைப்பு அப்படியே ஒரு மலைவாழ் கிராமத்து வாழ்வியலைக் காட்ட உதவியிருக்கிறது.
படத்தின் கதையை வெகுஎளிதாகச் சொல்லிவிட முடியுமென்றபோதும், காட்சிகளாக அடுக்கியதில் சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் இயக்குனர் ஓம் விஜய்.
சித்தர்கள் தந்த நாட்டு வைத்தியம் என்றே படம் முழுக்க குறிப்பிடுகிறார். மலையேறும் காட்சிக் கோர்வையில் குறிப்பிட்ட மூலிகைகளின் சிறப்புகளைச் சொல்வதற்காகச் சில காட்சிகளைச் சேர்த்திருப்பது அருமை.
காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தாலும், மருத்துவத் தகவல்களைத் தந்தாலும், கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிற வகையில் காட்சிகளுக்கிடையே தொடர்பிழை அமையப் பெறவில்லை. அதனால், மெதுவாகப் படம் நகர்கிறது என்ற குற்றச்சாட்டு எழலாம்.
ஆனால், குறிப்பிட்ட மக்களின் வாழ்க்கையில் ஒரு சில கூறுகளை மட்டும் சொல்லிவிட்டுத் தாண்டிவிடாமல், அந்த இடத்திற்கே சென்று வந்த உணர்வை ஏற்படுத்தியிருப்பதே ஓம் விஜய்க்குச் சொந்தமான இயக்குனர் நாற்காலி பலமிக்கது என்பதைக் காட்டுகிறது.
இறுதியாக இடம்பெற்ற ‘மேக்கிங் வீடியோ’, ‘ஓம் வெள்ளிமலை’ குழுவினரின் கடின உழைப்பைப் பறை சாற்றுகிறது.
கற்கண்டாய் பாடல்கள்!
வெகுநாட்களுக்குப் பிறகு, காலத்திற்கு அப்பாற்பட்ட இனிய மெலடிகளைக் கொண்ட ஒரு ஆல்பமாக அமைந்திருக்கிறது ‘ஓம் வெள்ளிமலை’. ஒரு படத்தில் எட்டு பாடல்கள் என்பது நிச்சயம் அதிசயமான அம்சம்தான்.
என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் ‘நெஞ்சோரமா’, ‘சொல்லி முடியாத உறவே’, ‘ஆளு வந்தா கத்தி சொல்லும்’ பாடல்கள் மனதை இளக்குவதாக இருக்க, லியோனி பாடும் ‘ஊருக்குப் புதுசா’ நகைச்சுவையூட்ட, இறுதியில் வரும் ‘வந்தார் அய்யா போகர் அய்யா’ நரம்புகளைப் புடைக்கச் செய்கிறது.
விக்ரம் செல்வாவின் இசையில் உதித் நாராயணன் பாடிய ‘கீச்சான்’ பாடலும், கைலாஷ் கெரின் ‘ராவுற’ பாடலும் காதலூட்டுகின்றன; சோகத்தையூட்டுகிறது அந்தோணி தாசனின் ‘ஆதி கால பத்திரமே’ பாடல்.
பின்னணி இசை ஒலிக்கும் பல இடங்கள் இயற்கையின் மேன்மையை உணர்த்த உதவியிருக்கிறது; வெகு சில இடங்களில் நகைச்சுவை மிளிர பங்களித்திருக்கிறது.
தாகம் உச்சி மண்டையை இரண்டாகப் பிளக்கும் மனநிலையில் தெளிந்த நீரோடையைக் கண்டது போல, உள்ளார்ந்த அமைதியுடன் ஒரு திரைக்கதையைத் தந்திருக்கிறார் ஓம் விஜய்.
நிச்சயம் சக கலைஞர்களால் அவர் கொண்டாடப்பட வேண்டும். மேலும், தொழில் முறை நடிகர்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் பயன்படுத்தி, ‘சுயாதீனப் படம்’ என்று தோற்றமளிக்கக்கூடிய ஒரு வர்த்தகப் படம் தந்திருக்கிறார்.
நாட்டு வைத்தியத்தை விரும்பாதவர்களும் பார்க்கும் வகையில் அமைந்திருப்பதால் லாஜிக் மீறல்கள் தாண்டி ‘ஓம் வெள்ளிமலை’யை ரசிக்கலாம்; பரபரவென்று நகரும் ஒரு பொழுதுபோக்குப் படத்தை விரும்பாதவர்கள் தங்கள் பாதையை மாற்றிக் கொள்ளலாம்.
காரணம், படம் முழுக்க நாட்டுவைத்தியத்தின் கொடி உயரே பறக்கிறது!
-உதய் பாடகலிங்கம்