தக்ஸ் – கூண்டுடைக்கும் பறவைகள்!

சிறை சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் தமிழில் பெரிதாக வந்ததில்லை. சிறையில் தொடங்கி சிறையில் முடிவதாக அமையும் கதைகளிலும் கூட, பிளாஷ்பேக் காட்சிகளே பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கும்.

அப்படியிருக்க, முழுக்க முழுக்க சிறையில் நடப்பது போன்று திரைப்படக் கதை இருந்தால் எப்படியிருக்கும்?

இதற்கான பதிலாகத்தான் ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ தந்திருக்கிறார் இயக்குநர் பிருந்தா.

நளினமும் அழகும் கவர்ச்சியும் கலந்த ஆட்டத்தைத் தந்தவராகவே அறியப்படும் ஒரு நடன இயக்குநரான இவர், தான் இயக்கும் இரண்டாவது படத்தில் ஆக்‌ஷனுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்திருக்கிறாரா?

இந்தக் கேள்விதான் இப்படத்தைப் பார்ப்பதற்கான முழுமுதற் காரணம்.

தப்பித்த சிறைவாசிகள்!

‘சிறையில் இருந்து தப்பித்த குற்றவாளிகள்’ என்ற செய்தியை எப்போதாவது தினசரிகளில் காண நேரிடும். இந்தியாவின் மிகப்பாதுகாப்பான சிறை என்று சொல்லப்பட்டவற்றில் இருந்து கூட கைதிகள் தப்பியதாக வரலாறு உண்டு.

வெளியில் இருந்து நோக்குபவர்களுக்கு அதுவொரு தகவல். ஆனால், அந்த கைதியின் இடத்தில் இருந்து பார்த்தால் அதுவொரு வாழ்வு.

அந்தக் கைதிகள் எந்த தவறும் செய்யாதவர்களாக இருக்கலாம் அல்லது சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரச்சனையில் மாட்டிக்கொண்டவர்களாக இருக்கலாம்.

அப்படிச் சூழ்நிலைக் கைதியாகச் சிறையில் அடைபட்டிருக்கும் சிலர், இனி வாழ்க்கையில் வெளியுலகைக் காணவே முடியாது எனும் இக்கட்டுக்கு ஆளாகின்றனர்.

அப்படிப்படிப்பட்ட கைதிகள் சிலர் பலத்த காவலை மீறிச் சிறையில் இருந்து தப்பிப்பதுதான் ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ படக் கதை.

கதை நிகழும் களம் நாகர்கோவில் என்பதும், அங்குள்ள வட்டார மொழியும் வாழ்க்கையும் பெரும்பாலான தமிழர்களுக்குத் தெரியாது என்பதும் இப்படத்தின் சிறப்பு.

ஆனால், குமரி வட்டார வாழ்வுமுறை திரைக்கதையில் ஊறுகாய் அளவுக்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

தயாரிப்பாளரின் வாரிசு!

‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ படத்தில் சேதுவாக ஹிருது ஹாரூண், துரையாக பாபி சிம்ஹா, சிறைக் கண்காணிப்பாளர் ஆரோக்கிய தாஸ் ஆக ஆர்.கே.சுரேஷ், கயல் ஆக அனஸ்வரா ராஜன், அண்ணாச்சியாக பி.எல்.தேனப்பன், மருதுவாக முனீஸ்காந்த், வில்லனாக சரத் அப்பானி என்று பலர் நடித்துள்ளனர்.

சிறையில் நாயகனின் அறைவாசிகளாக வரும் சேகர், அருண், அரவிந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிரிப்பூட்டுகின்றன.

நாயகனாக அறிமுகமாகியிருக்கும் ஹிருது ஹாரூண், படத் தயாரிப்பாளின் ஷிபு தமீன்ஸின் மகன். வண்ணமயமான ரொமான்ஸ் படம் வாயிலாக அறிமுகமாவதே திரையுலக வாரிசுகளின் வழக்கம்.

அதனைத் தவிர்த்து, ஹாரூணும் சிபு தமின்ஸும் இப்படியொரு கதையைத் தேர்ந்தெடுத்ததற்குப் பாராட்டுகள்.

முக்கால்வாசி சிறைக்காட்சிகள் என்பதால் ஹாரூண் முகத்தை இறுக்கமாக வைத்திருகிறார்; அதே நினைவில், காதல் காட்சிகளில் நடிக்கச் சிரமப்பட்டிருக்கிறார்.

நாயகியாக வரும் அனஸ்வரா ராஜன், ஏற்கனவே ‘ராங்கி’ மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். நான்கைந்து காட்சிகள், ஒரு பாடல் என்று அவரது பங்கு இருந்தாலும் கயல் எனும் பாத்திரத்தில் பாந்தமாகப் பொருந்தியிருக்கிறார்.

என்ன, இதற்கு முன் அனஸ்வரா நடித்த மலையாளப் படங்களை விட இதில் அவரது தோற்றத்தில் கவர்ச்சி அதிகம் தென்படுகிறது. அடுத்து தமிழ், தெலுங்கு என்று ஜாகையை மாற்றலாம் என்று யோசித்துவிட்டார் போலிருக்கிறது.

கொஞ்சம் கெத்தான, தோரணையான ஆள் என்பதனை எளிதாகத் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார் பாபி சிம்ஹா.

அவரது மனைவியாக வரும் ரம்யா சங்கர் ஒரு காட்சியில் வந்தாலும் அசத்தியிருக்கிறார்.

முனீஸ்காந்த், சேகர் பேசும் ஒன்லைனர்கள் அவ்வப்போது பார்வையாளர்களை குதூகலப்படுத்துகின்றன. அவை சிறை சம்பந்தப்பட்ட தகவல்களாகவும் அமைந்திருப்பது அருமை.

சிறைக் கண்காணிப்பாளராக வரும் ஆர்.கே.சுரேஷ் விறைப்பும் மிடுக்குமாக திரையில் உலவியிருக்கிறார்.

ஆட்டோ சங்கர் எனும் வெப் சீரிஸில் பிரதான வேடத்தில் நடித்த சரத் அப்பாணி, கிளைமேக்ஸில் வில்லத்தனம் காட்டியிருக்கிறார்; ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் என்பதை அவரது அடர்ந்த தாடி மறைத்துவிடுகிறது.

இவர்கள் தவிர்த்து ஒரு டஜன் பாத்திரங்கள் பார்வையாளர்களை நேருக்கு நேர் பார்க்கின்றன. அப்பாத்திரங்களை ஏற்றவர்களும் சிறப்பான நடிப்பைத் தந்திருக்கின்றனர்.

‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ கடைக்கோடி ரசிகனையும் ஈர்க்க, படத்தோடு ஒன்றவைக்கும் அம்சமொன்று இருக்க வேண்டும். ‘அது தன்னிசையே’ என்றிருக்கிறார் சாம் சி.எஸ். ஏற்கனவே இந்தியா முழுக்க அவர் பெயர் தெரிந்தாலும் இப்படத்தின் பின்னணி இசை, அவருக்கான இடத்தை பல படிகள் உயர்த்தும்.

பிரியேஷ் குருசாமியின் ஒளிப்பதிவு, ஜோசப் நெல்லிக்கல்லின் தயாரிப்பு வடிவமைப்பு இரண்டும் இணைந்து சிறையில் நடக்கும் கதை என்பதை அடிக்கோடிட்டுக் காட்ட உதவியிருக்கின்றன; அதோடு, பார்வையாளர்கள் மனம் சோர்வுறாத வகையில் கதை சொல்ல இயக்குனருக்குப் பக்கபலமாக இருக்கின்றன.

பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பு கிளைமேக்ஸ் காட்சியில் ‘ஆஹா’ சொல்ல வைக்கிறது. ஒலி வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, வண்ணக்கலவை என்று பல வகையிலும் திறம்பட இருக்கும் இப்படத்தில் விஎஃப்எக்ஸ் மட்டுமே கொஞ்சம் சுமார் ரகம்.

குறிப்பாக, கிளைமேக்ஸில் வரும் சில இடங்களைக் கவனித்திருக்கலாம்.

ஒரு இயக்குனர் என்ற வகையில், இதில் பிருந்தா விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.

ஒரு பெண் இயக்குனர் இப்படித்தான் படம் எடுப்பார் என்று சிலர் எதிர்மறையாக விமர்சிப்பதை ‘ஹே சினாமிகா’வில் அடியொற்றிப் பின்பற்றியவர், ‘இப்படியும் படம் எடுப்பேன்’ என்று சொல்லி இதில் அவர்களது வாயை அடைத்திருக்கிறார்.

தமிழில் ‘போக்கிரி’ இயக்கியதால், இந்தியிலும் கால் பதித்தார் பிரபுதேவா. பிருந்தாவுக்கும் அப்படியொரு வாய்ப்பு எதிர்காலத்தில் அமையலாம். ஏனென்றால், நடன இயக்குனர்கள் நடனத்திற்கும் நகைச்சுவைக்கும் முக்கியத்துவமுள்ள கதைகளையே இயக்குவார்கள் என்ற வாதம் இப்படத்தில் உடைக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், சிறைக்குள் இருப்பவர்கள் ஏன் தப்பிக்க நினைக்கிறார்கள் என்பதையோ, அந்த சிறை ஒரு நரகம் என்றோ, அங்குள்ள கெடுபிடிகள் தப்பிக்கும் எண்ணத்தையே தவிடுபொடியாக்கும் என்றோ திரையில் தெளிவாகச் சொல்லியிருக்கலாம். இயக்குனர் அதைத் தவறவிட்டிருக்கிறார்.

போலவே, ஹிருது ஹாரூண் – அனஸ்வரா காதல் காட்சிகளும் கூட வழக்கமான கமர்ஷியல் பட பாணியிலேயே இருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, நாயகனின் நண்பனாக வரும் ஜான் பாத்திரத்தில் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த ஒரு நடிகரைக் காட்டியிருக்கலாம். காரணம், அதுவே கதையின் திருப்புமுனையாகவும் அமைந்திருக்கிறது.

தவிர்த்திருக்கலாமே..!

ஒருவேளை ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ படம் பெரும்பாலான ரசிகர்களைச் சென்றடையாவிட்டால், அதற்கு இப்படத்தின் டைட்டிலும் ஒரு காரணமாக அமையக்கூடும்.

‘தக்ஸ்’ என்பதை ஆங்கிலத்திலும் தமிழிலும் பிரபலப்படுத்தினாலும், டைட்டில் மொத்தமும் ரசிகர்களால் உச்சரிக்கப்பட நெடுநாட்களாகும்.

ஒரு வட்டாரத்தையோ, மாவட்டத்தையோ குறிப்பிட்டால் அங்குள்ள மொத்த மக்களையும் அது சொல்வதாக எதிர்ப்பு கிளம்பலாம் என்ற தயக்கத்தில் பின்வாங்கியிருக்கலாம். இதற்கு, வேறு ஏதோ ஒரு தலைப்பையே படத்திற்கு வைத்திருக்கலாம்.

2018இல் வெளியான ‘ஸ்வந்தர்யம் அர்த்தராத்தியில்’ மலையாளப் படத்தின் அப்பட்டமான ரீமேக் இது. ஆனால், அதன் கதாசிரியர் மற்றும் படக்குழுவினர் பற்றிய தகவல்கள் இதில் இடம்பெறவில்லை.

மாறாக, இப்படத்தைத் தயாரித்து வடிவமைத்தது என்று தயாரிப்பாளரின் பெயரே உள்ளது. போலவே, வசனம் எழுதியவர்களின் பெயர்களும் குறிப்பிடப்படவில்லை.

மலையாளப் படம் பார்த்தவர்கள், அதில் இருந்த செறிவு தமிழில் இல்லை என்று கூறலாம். அப்படத்தை முதலில் பார்த்ததால் தோன்றும் இந்த எண்ணத்தைத் தவிர்க்க முடியாது.

உண்மையைச் சொன்னால், தமிழ் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இப்படத்தில் நாகர்கோவில் வட்டார வாழ்க்கை முறையை சில ஷாட்களில் அல்லது ஒரு பாடலில் சொல்லியிருக்கலாம்.

கூடவே, உணர்ச்சிவசப்பட்டு தவறு செய்து சிறை சென்றவர்களில் பலர் சிறு வாய்ப்பு கிடைத்தாலும் வெளியுலகைக் காண ஏங்குவார்கள் என்பதையும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.

மேற்சொன்ன குறைகள் இயக்குனருக்குத் தெரிந்தே நிகழ்ந்திருந்தால், அதற்கு இப்படம் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ஒரேநேரத்தில் வெளியாவது மட்டுமே காரணம்.

நிச்சயமாக அதனைத் தவிர்த்திருந்தால், ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ செம்மையான அனுபவத்தைத் தந்திருக்கும். இப்போது, கூடு திரும்ப ஆசைப்பட்டு கூண்டுடைக்கும் பறவைகளின் வேட்கையை மட்டுமே காட்டுவதாக மாறியிருக்கிறது.

-உதய் பாடகலிங்கம்

You might also like