தொலைந்துபோன மொபைல்; துரத்தும் விபரீதம்!

அன்லாக்டு (Unlocked) திரை விமர்சனம்

ஒரு மொபைல் தொலைந்தால் என்ன நிகழும்? என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிறது ‘அன்லாக்டு’ எனும் கொரியத் திரைப்படம்.

இன்றைய தினத்தில் மொபைல் என்பது ஒரு சாதனம் அல்ல; அது நம் மனதை ஒளித்து வைத்திருக்கும் மந்திரக்கட்டியாக மாறிவிட்டது.

அதைத் தொலைப்பதென்பது உங்களையே நீங்கள் தொலைப்பதற்குச் சமம் என்கிறது இத்திரைப்படம்.

நெட்பிளிக்ஸில் இது காணக் கிடைக்கிறது.

தொலைந்த வாழ்க்கை!

ஒரு ஸ்டார்ட்அப்பில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் ஆகப் பணியாற்றும் லீ நா-மி (சுன் வூ-ஹீ) அலுவல் பரபரப்பு, தோழி ஜியோங் யூன்–ஜூ (கிம் யீ-வோன்) உடன் ஊர் சுற்றல், அவ்வப்போது தந்தை லீ சியோங்-வூ (பார்க் ஹோ-சான்) நடத்திவரும் ஹோட்டலில் ரிலாக்ஸாக உணவு பரிமாறுவது, மற்ற நேரங்களில் தனது தினசரிச் செயல்பாடுகளை சமூகவலைதளத்தில் பதிவு செய்வது என்று வாழ்ந்து வருபவர்.

 ஒருநாள் தன் மொபைலை பேருந்தில் தவறவிடுகிறார் லீ நா. அவ்வளவுதான்! அடுத்தநாள் முதல் அவரது வாழ்க்கையே தொலைந்து போனதாகிறது.

ஜியோங் யூன் தொடர்புகொள்ளும்போது லீ நா மொபைலில் வேறொரு பெண் குரல் ஒலிக்கிறது. ஆனால், உண்மையில் மொபைலை கையில் வைத்திருப்பவர் ஒரு ஆண்.

லீ நாவின் மொபைல் பாஸ்வேர்டு அறிய, அவரது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளப் பக்கங்களை நோண்டுகிறார் அந்த நபர். எதுவும் பலன் தராதபோது, தரையில் அடித்து அந்த மொபைலின் திரையை உடைக்கிறார்.

லீ நாவின் தந்தை நடத்தும் ஹோட்டலுக்கு போன் செய்து, சர்வீஸ் சென்டரில் அந்த மொபைலை ரிப்பேர் செய்யக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்.

அந்த கடையையும் அவரே நடத்தி வருகிறார். முகக்கவசம் அணிந்து லீ நாவுக்காக காத்திருக்கிறார். அவரும் அங்கு வருகிறார்.

பாஸ்வேர்ட் என்னவென்று லீ நா எழுதியதும், அவரது மொபைலை பிரதியெடுக்கும் வகையில், ஒரு மென்பொருளை ‘இன்ஸ்டால்’ செய்கிறார். ரிப்பேர் செய்தாகிவிட்டது என்ற நம்பிக்கையுடன் வழக்கம்போல மொபைலை பயன்படுத்த தொடங்குகிறார் லீ நா.

அதன்பிறகு, லீ நா மொபைல் கேமிரா வழியே அவர் இருக்குமிடத்தையும், மைக்ரோபோன் வழியாக அவரைச் சுற்றி நிகழும் உரையாடல்களையும் கேட்கத் தொடங்குகிறார் அந்த மர்ம நபர்.

லீ நாவுக்குப் பிடித்த உணவு, உடை என்று தொடங்கி ஒவ்வொரு தகவலாகச் சேகரிக்கிறார்.

நெருக்கமான வளையத்தில் இருக்கும் அவரது தந்தை, தோழி, அலுவலக உரிமையாளர் மூவரையும் துண்டித்துவிட்டால் போதும்; அவரை எளிதாகத் தன்வசப்படுத்திவிடலாம் என்று திட்டமிடுகிறார்.

அன்றைய தினம் லீ நாவின் முதலாளி அவரது சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தியதாகச் சொல்லி ஆச்சர்யமளிக்கிறார். முக்கியமான புரொஜக்ட் ஒன்றைப் பற்றி விவரிக்கிறார்.

அடுத்தநாள் காலையில், லீ நாவின் சமூகவலைதளப் பக்கங்களில் அந்த புரொஜக்ட் பற்றிய ரகசியங்கள் வெளியாகிகின்றன; அதோடு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டதாகவும் ஸ்டேட்டஸ் வைக்கப்பட்டிருக்கிறது.

யார் இதனைச் செய்கிறார்கள் என்று யோசித்து முடிப்பதற்குள் தந்தை, தோழி, முதலாளி மூவரிடம் இருந்தும் விலக்கப்படுகிறார் லீ நா. அதன்பிறகு, அந்த நபர் என்ன செய்கிறார் என்பதுதான் மீதி திரைக்கதை.

ஒரு பெண்ணின் சடலத்தைக் கண்டுபிடிப்பதில் இருந்துதான் படமே தொடங்குகிறது. அந்த இடம், அவ்வழக்கை விசாரிக்கவரும் ஒரு அதிகாரிக்கும் வீட்டை விட்டு ஓடிப்போன அவரது மகனுக்கும் மட்டுமே தெரிந்த ஒன்று. அவரது மகனின் பெயர் ஓ ஜுன் யோங். லீ நாவை துரத்தும் அந்த நபரின் பெயரும் அதுதான்.

ஸ்டோலன் ஐடெண்டிடி!

முதல் ஐந்து நிமிடங்களில், இன்றைய தலைமுறையினரின் உயிர் போன்று மொபைல் மாறியிருப்பதைக் காட்டுகிறார் இயக்குனர் கிம் தே-ஜுன்.

விஎஃப்எக்ஸ் காட்சிகளில் எழுத்துருக்கள் நிறைய என்றாலும், சப்டைட்டில் வழியாகவே அதில் ஒருவரது வாழ்வு நிறைந்திருப்பதை உணர முடிகிறது.

மொபைலே கதி என்று உலகுக்கே தெரிகிற மாதிரி நம்மில் பலர் ‘டைரி’ எழுதி வருகிறோம். யாரோ ஒரு குரூரன் கையில் அந்த மொபைல் சிக்கும்போது நம் வாழ்வு அதோகதிதான் என்பதே இக்கதை நமக்குச் சொல்லும் சேதி.

அதற்கேற்றவாறு, பாதிக்கப்பட்ட பெண் ‘நான் என்ன தப்பு செஞ்சேன்’ என்று கேட்கும்போது, ‘உன் மொபைலை தொலைச்சதுதான்’ என்கிறார் அந்த குரூரன்.

தன் மகனைக் கைது செய்யத் துடிக்கும் அந்த அதிகாரிக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதுதான் ‘அன்லாக்டு’ படத்தைக் காண்பதற்கான காரணமாகவும் இருக்கிறது.

அகிரா தேஷிகாவாரா எனும் ஜப்பானிய நாவலாசிரியர் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் கிம் தே-ஜூன்.

இதே நாவலை அடிப்படையாகக் கொண்டு ‘ஸ்டோலன் ஐடெண்டிடி’ என்ற பெயரில் ஜப்பானியத் திரைப்படத்தின் இரண்டு பாகங்கள் வந்துவிட்டன.

ஆனால், மையக்கதையை மட்டும் வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த திரைக்கதையையும் மாற்றியிருக்கிறாராம் இயக்குனர் கிம் தே-ஜுன்.

ஓ ஜுன் யோங் எங்கு வசிக்கிறார் என்பதை அவரது தந்தை எப்படி அறிகிறார்? ‘வீட்டை விட்டு ஓடிப்போனதுக்கு பிறகு உன் மகன்கிட்ட பேசலையா’ என்று தன் மனைவியிடம் அவர் பேசும் வசனமே பதிலாகத் தரப்பட்டிருக்கிறது.

அதேநேரத்தில், அந்த மூவரின் வாழ்க்கை எப்படித் தலைகீழாக மாறியது என்பதையும் சொல்லியிருந்தால் படம் பார்ப்பவர்களை கிளைமேக்ஸில் தொற்றும் குழப்பம் நீங்கியிருக்கும். ஏனோ, இயக்குனர் அது வேண்டாம் என்று தவிர்த்திருக்கிறார்.

அதேபோல, ‘சைக்கோ த்ரில்லர்’ருக்கு உண்டான வழக்கமான பரபரப்பு பில்ட்அப், வன்முறைக் காட்சிகள், அதிர்வூட்டும் இசை இதில் இல்லை என்பதும் மிக முக்கியமான விஷயம்.

கிம் யோங்-சியோங்கின் ஒளிப்பதிவு, சின் மின் –ஜியோங்கின் படத்தொகுப்பு, தல்பலானின் பின்னணி இசை என்று எல்லாமுமாகச் சேர்ந்து ஒரு வித்தியாசமான காட்சியனுபவத்தைத் தந்திருக்கிறது.

லவ்வர்பாய் இமேஜ்!

படத்தில் தேடப்படும் நபராக வரும் இம் சி-வான், கொரிய மொழி சீரியல்களில் ‘லவ்வர் பாய்’ ஆக அறியப்படுபவர். அவர் செய்யும் வில்லத்தனம் சாத்தியம் என்றாக்கிவிடுகிறது அந்த இமேஜ்.

அதேநேரத்தில், உண்மையிலேயே அப்பாவியாகத் திரிபவர்களைச் சந்தேகப்படும் சூழலையும் இது ஏற்படுத்தக்கூடும்.

2018இல் வந்த ‘பர்னிங்’ எனும் கொரிய திரைப்படத்திலும் இதே போன்றதொரு நாயக பாத்திரம் இடம்பெற்றிருக்கும். ஆனால், அப்பாத்திரம் எல்லோருடனும் சகஜமாகப் பழகும் ஒரு மேல்தட்டு வர்க்க நபராக காட்டப்பட்டிருக்கும்.

ஒருவர் எப்படிப் பழகுகிறார் என்பதை நேரில் பார்க்கும்போதே உண்மையை அறிய முடியாதபோது, ஒரு மொபைல் வழியே நம் வாழ்க்கையைப் பகிரங்கப்படுத்துவது எப்படி சரியாக இருக்க முடியும்? நாயகி சுன் வூ-ஹீயைப் பார்க்கும்போது அந்த கேள்விதான் நம் மனதில் எழும்.

இவர்கள் இருவரையும் தவிர்த்து ஒரு டஜன் நடிகர்களே இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.

ஒரு கதைக்குள் நடமாடும் மனிதர்களாக மட்டுமே அவர்களைப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

மொபைல் மூலமாக இப்படியெல்லாம் ஆபத்துகள் நேருமா என்ற கேள்வியே, உலகெங்கும் பல மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்படவும் காரணமாக அமையும்.

இப்படத்தில் காட்டப்படும் நுட்பங்களை ஒரு ‘ஆக்‌ஷன்’ அல்லது ‘ஸ்பை த்ரில்லர்’ படங்களில் ஹீரோயிசமாக பார்த்து ரசிக்கும் நாம், இது போன்ற ‘சைக்கோ த்ரில்லர்’ படங்களில் இடம்பெறும்போது மனம் கலங்குகிறோம்.

காரணம், இது போன்ற நுட்பங்கள் குற்றவாளிகளுக்கு எளிதில் வசப்பட்டுவிடுமோ என்ற எண்ணம் தான்.

இந்த படத்தைப் பார்த்தபிறகு, யாரோ ஒரு அந்நிய நபர் ‘உங்களுக்குப் பிடிச்சதெல்லாம் எனக்கும் பிடிக்கும்’ என்று விஷயங்களைப் பட்டியலிடத் தொடங்கினால் நீங்கள் ‘ஜெர்க்’ ஆவது நிச்சயம். ‘அன்லாக்டு’ படத்தின் வெற்றியும் அதுவே!

-உதய் பாடகலிங்கம்

You might also like