தமிழர் மீது துப்பாக்கிச் சூடு: கர்நாடகாவுக்கு கண்டனம்!

சேலம் அருகே, தமிழகம் மற்றும் கர்நாடக எல்லை பகுதியில் பாலாறு செல்கிறது.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மேட்டூர் அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், தர்மபுரி மாவட்டம் ஏமனூரை சேர்ந்த ரவி ஆகிய 3 பேரும் பரிசலில் மீன்பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் அவர்கள் மான் வேட்டைக்கு வந்துள்ளதாக கருதி அவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதில், மற்ற மூன்று பேரும் தப்பிய நிலையில், ராஜா மட்டும் காணாமல் போயுள்ளார். 

இதற்கிடையில், ராஜாவின் சடலம் பாலாறு நீர் தேக்கப் பகுதியான காவிரி ஆற்றில் மிதந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பர்கூர் வனப்பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடகா வனத்துறை அடையாளம் தெரியாத 4 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இதனிடையே, மீனவர் ராஜாவின் இறப்புக்கு காரணம் கர்நாடக வனத்துறையினர் தான் எனவும், அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தான் ராஜா உயிரிழந்திருப்பதாகவும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில்,  உயிரிழந்த தமிழக மீனவர் ராஜாவின்  குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதோடு கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கி சூட்டிற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

You might also like