‘ஃபார்ஸி’ – மீண்டுமொரு நகல் விளையாட்டு!

தினசரிகளில் இடம்பெறும் பிரச்சனையொன்றை எடுத்துக்கொண்டு, அதனைச் சுற்றி புனைவுகளைக் கோர்ப்பது எளிதாகப் பார்வையாளர்களை ஈர்க்கும். அதில் இடம்பெற்ற தகவல்கள் மீது உண்மைச் சாயம் பூசப்பட்டிருக்கிறதா என்று சில நேரங்களில் சந்தேகம் எழும்.

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் ‘ஃபார்ஸி’ மேற்சொன்ன இரண்டையும் ஒருங்கே கொண்டிருக்கிறது.

இந்தி நடிகர் ஷாகித் கபூரும் நம்மூர் விஜய் சேதுபதியும் முதன்முறையாக நடிக்கும் வெப் சீரிஸ் என்ற பெருமையையும் இது பெறுகிறது.

கள்ள நோட்டு கதை!

சிறுவன் சந்தீப்பை அவரது தந்தைதான் வளர்க்கிறார். தாய் இறந்துவிட்டார்.

ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டுத் தலைமறைவாகும் வழக்கத்தைக் கொண்ட சந்தீப்பின் தந்தை, ஒருமுறை அவனை அழைத்துக்கொண்டு ரயிலில் ஏறுகிறார். பாதி வழியிலேயே ரயிலில் அவனைவிட்டு வேறிடம் செல்லும்போது மரணமடைகிறார்.

அப்போது சந்திப்புக்கு வயது பத்து. அந்த காலகட்டத்தில் சந்தீப்புக்கு அறிமுகமாகிறார் அதே வயதுள்ள பெரோஸ்.

சந்தீப்பின் தாய் வழி தாத்தாவான மாதவ் (அமோல் பலேகர்) இருவரையும் கண்டுபிடித்து, தன்னுடன் மும்பைக்கு அழைத்துச் செல்கிறார்.

கிரந்தி என்ற பத்திரிகையை நடத்திவரும் மாதவ் ஒரு மிகச்சிறந்த ஓவியர். தாத்தாவின் வழியில், அவரிடம் இருந்து ஓவியத் திறமையைக் கற்றுக் கொள்கிறார் சந்தீப்.

பத்திரிகைக்கான பிரிண்டிங் பிரஸ்ஸில் உள்ள அனைத்து நுட்பங்களையும் கற்கிறார் பெரோஸ்.

சந்தீப் என்ற சன்னி (ஷாகித் கபூர்), பெரோஸ் (புவன் அரோரா) இருவரும் வளர்ந்து பெரியவர்களாகின்றனர்.

ஒருநாள் தாத்தாவின் பத்திரிகை அலுவலகம் பணம் இல்லாமல் முடங்கும் நிலைக்கு ஆளாகிறது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தருகின்றனர்.

எதையாவது செய்து பிரஸ்ஸை மீட்டாக வேண்டும் என்று யோசிக்கும் சந்தீப், 500 ரூபாய் கள்ள நோட்டு அச்சடிக்க முடிவெடுக்கிறார். பிசிறு இல்லாமல் அதனை வடிவமைத்து பிரிண்ட் செய்கிறார்.

ரிசர்வ் வங்கியில் பணியாற்றும் மேகா (ராஷி கன்னா) கையில் அந்த கள்ள நோட்டு கிடைக்கிறது.

கள்ள நோட்டு கும்பலைக் கண்டறியும் மைக்கேல் வேதநாயகம் (விஜய் சேதுபதி) தலைமையிலான விசாரணைக்குழுவில் அவர் புதிதாகச் சேர்ந்திருக்கிறார்.

500 ரூபாய் கள்ள நோட்டை வடிவமைத்தவரைப் பிடித்தாக வேண்டுமென்று மேகா சொல்ல, ‘இதைவிடப் பெரிய கள்ள நோட்டு கும்பலின் தலைவனான மன்சூர் தலாலைப் பிடிப்பதுதான் நம் நோக்கம்’ என்கிறார் மைக்கேல்.

மேகா கண்டறிந்த புதிய மென்பொருளினால் மன்சூர் தலால் (கே கே மேனன்) கும்பலின் கள்ள நோட்டுகள் எளிதாகப் பிடிபடுகின்றன.

அதையடுத்து, ஆர்ட்டிஸ்ட் என்று அழைக்கப்படும் சந்தீப்பைக் கொண்டு புதிய 2000 ரூபாய் கள்ள நோட்டை அச்சடிக்கிறார் மன்சூர்.

பல ஆயிரம் கோடிகள் எனும் அளவில் அந்நோட்டுகளைக் கடல் வழியாக இந்தியாவுக்குக் கொண்டு வரும் வேலையை சந்தீப்பும் பெரோஸும் செயல்படுத்துகின்றனர்.

அதற்காக, நைசாக மேகாவிடம் அறிமுகமாகி அவரது மொபைலில் வரும் தகவல்களை அறிய ஒரு சாப்ட்வேரையும் இன்ஸ்டால் செய்கிறார் சந்தீப்.

எங்கோ ஒரு வெளிநாட்டில் இருந்துகொண்டு இந்தியாவின் பொருளாதாரத்தைச் சிதைக்கத் திட்டமிடுகிறார் மன்சூர். அவரது கும்பலின் முயற்சியை முறியடிக்க முயல்கிறார் மைக்கேல்.

மேகாவைக் கைக்குள் வைத்துக்கொண்டு, இந்த எலி பூனை விளையாட்டை லாவகமாகக் கையாள்கிறார் சந்தீப்.

ஆனாலும் எதிர்பார்ப்பது போல எப்போதும் நடப்பதில்லையே? அதனால், இறுதியில் யார் வென்றார்கள் என்பதோடு முடிவடைகிறது ‘ஃபார்ஸி’.

‘கள்ளநோட்டு கும்பலில் ஒரு அபாரமான ஓவியன் ஐக்கியமாகிறான்’ என்று இக்கதையைச் சுருக்கமாகச் சொல்லலாம்.

மேற்கத்திய பாணி நடிப்பு!

‘சேக்ரட் கேம்ஸ்’ போலவோ, ‘பாதாள் லோக்’ போலவோ கதை நிகழும் இடங்களையும் அங்குள்ள வாழ்க்கைமுறைகளையும் விவரிக்க ‘ஃபார்ஸி’ பெரிதாக மெனக்கெடவில்லை. அதனால், மேற்கத்திய பாணியில் வடிவமைக்கப்பட்ட ஒரு திரைக்கதையில் இந்திய நடிகர்களைப் பொருத்திப் பார்க்கும் அனுபவமே கிடைக்கிறது.

சந்தீப் ஆக நடித்திருக்கும் ஷாகித் கபூர், உள்ளுக்குள் அரக்கனை ஒளித்துவைத்துவிட்டு அமுல் பேபியாக திரியும் ஒரு இளைஞனாகவே தென்படுகிறார்.

நாற்பதுகளைத் தொட்டபிறகும் இளமையாகத் தென்படும் அளவுக்குச் சரியான நடிப்பைத் தந்திருக்கிறார்.

ஷாகித் உடன் வரும் புவன் அரோரா, நிச்சயமாய் எல்லோருடைய மனதிலும் ஒட்டிக் கொள்வார். அந்த அளவுக்குப் பயம், அலட்சியம், வருத்தம், நகைச்சுவை என்று பல உணர்வுகளை ரசிக்கும்படியாகத் திரையில் கொட்டியிருக்கிறார்.

தென்னக ரசிகர்களை ஈர்ப்பதற்காக விஜய் சேதுபதிக்கு இடம் கிடைத்திருக்கிறது. அதேநேரத்தில், அவரது கதாபாத்திரம் தனிப்பட்ட வாழ்வில் எத்தகைய சோகங்களை எதிர்கொள்கிறது என்பதை உணர்ந்து அலுவலகத்திலும் அதனைப் பிரதிபலிக்கும் வகையிலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது அருமை.

இந்த வெப் சீரிஸில் வில்லன் பாத்திரம் ஏற்றிருக்கிறார் கே கே மேனன்; அவர் நடித்த படங்களை, வெப்சீரிஸ்களை பார்த்தவர்களுக்கு இது புதிதாக இராது, அதேநேரத்தில் ஏமாற்றவும் செய்யாது.

ரெஜினா கேசண்ட்ரா மிகச்சில காட்சிகளில் இடம்பிடித்தாலும், ஒரு சாதாரண குடும்பத்தலைவி போன்றே வந்து போயிருக்கிறார்.

ராஷி கன்னா நடித்த பாத்திரம், ‘ஷீ’யில் வரும் அதிதி பொகங்கர் பாத்திரத்தின் சாயலில் வடிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், இளைய தலைமுறையினரைக் கவரும் விதமாக நடித்திருக்கிறார்.

அமைச்சர் பாத்திரத்தில் ஜாகீர்கான் வருமிடங்கள் நிச்சயம் சிரிப்பூட்டும்.

தாத்தாவாக வரும் அமுல் பலேகர், யாசிர் சித்தப்புவாக வரும் சித்தரஞ்சன் கிரி, அனீஸ் ஆக வரும் சாஹிப் அயூப் உட்படப் பலரும் நம் நினைவில் நிற்கும்விதமான ‘பெர்பார்மன்ஸை’ தந்திருக்கின்றனர்.

இவர்கள் தவிர்த்து ‘தி பேமிலி மேன்’ சீரிஸை நினைவூட்டும் வகையில் உதயபானு மகேஸ்வரனின் செல்லம் பாத்திரம் ஒரு காட்சிக்கு வந்து போயிருக்கிறது.

இந்தியில் தயாரிக்கப்பட்டாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் இது ‘டப்’ செய்யப்பட்டுள்ளது.

தமிழில் ஷாகித் கபூருக்கு நடிகர் ஜீவாவும், அமுல் பலேகருக்கு நாசரும் விஜய் சேதுபதிக்கு டிஎஸ்கேவும் குரல் தந்திருக்கின்றனர்.

ஆமாம், விஜய் சேதுபதியின் இடத்தை கிட்டத்தட்ட அதே தொனியிலான குரலுடன் நிரப்பியிருக்கும் டிஎஸ்கேவை தனியாகப் பாராட்ட வேண்டும். இந்த மெனக்கெடல்தான் தமிழ் பதிப்பை பார்க்க ரசிக்க உதவுகிறது.

ஒளிப்பதிவாளர் பங்கஜ் குமாரும் தயாரிப்பு வடிவமைப்பாளர் பரிசித் பரல்கரும் இத்தொடரின் பெரும்பலமாக விளங்கியிருக்கின்றனர்.

ஆங்காங்கே சில ஷாட்களை காட்டிவிட்டு, அதன் பின்னணியை இரண்டாம் பாகத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டிருக்கிறது சுமித் கோடியன் படத்தொகுப்பு. மற்றபடி, காட்சிகள் அனைத்தும் வெகு ‘ஷார்ப்’பாக ‘கட்’ செய்யப்பட்டிருக்கின்றன.

இயக்குனர்கள் ராஜ் நிதிமொரு, கிருஷ்ணா டிகே இருவரும் சீதா மேனன், சுமன் குமார் உடன் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கின்றனர்.

ஷாகித் பாத்திரம் எப்போதெல்லாம் வெளிநாட்டிற்குச் செல்கிறது என்பது திரைக்கதையில் விளக்கப்படவில்லை. அதனால், பரந்துவிரிந்த பாலை நிலப்பரப்பை பார்த்தால் மட்டுமே அது இந்தியா அல்ல என்று நம் புத்திக்கு உறைக்கிறது.

அதேநேரத்தில், ‘உன் மொபைல் எப்போ ரீச் ஆகும்னே தெரியறதில்லை’ என்று ராஷி பேசும் வசனத்தின் உதவியுடன் இக்கேள்வியை ‘ஜஸ்ட் லைக் தட்’ கடந்து போக வேண்டியிருக்கிறது.

அருகில் ஆபத்து!

ஆபத்து அருகில் இருக்கும். ஆனால், சம்பந்தப்பட்ட பாத்திரங்களுக்குத் தெரியாது. பார்வையாளர்களுக்கு மட்டும் நன்றாகவே தெரியும்.

இந்த உத்தியை வைத்துக்கொண்டு ‘தி பேமிலி மேன்’ தந்தது போலவே, ‘ஃபார்ஸி’யில் கள்ள நோட்டு மோசடியை கமர்ஷியல் படைப்பாக்க முயன்றிருக்கின்றனர் இயக்குனர்கள் ராஜ் & டிகே.

நாயகன் படத்தை இயக்குனர்கள் இருவரும் நிறைய முறை பார்த்திருப்பார்கள் போல. அதில் உப்பு மூட்டையுடன் கடத்தல் பொருட்களைக் கட்டி கடலில் இறக்குவது போல, இதில் நான்கைந்து கண்டெய்னர்களையே கடலில் தள்ளியிருக்கின்றனர். அதுவும் ஜோராக கரை வந்து சேர்கிறது.

இது போன்ற லாஜிக் மீறல்களைப் பொறுத்துக்கொண்டால், ஓரளவுக்கு விறுவிறுப்பான ஆக்‌ஷன் த்ரில்லர் பார்த்த திருப்தி கிடைக்கும்.

அதே நேரத்தில் 8வது எபிசோடில் வரும் சேஸிங் காட்சிகள் பெரிதாக பரபரப்பை ஏற்படுத்தவில்லை.

ஏகப்பட்ட கேள்விகளுக்குப் பதில்களைத் தராமல் அடுத்த பாகத்தை நோக்கி ‘ஃபார்ஸி’ முடிவடைந்திருக்கிறது; ஆனால், முடிவடைந்த விதம் அடுத்த பாகத்தைப் பார்த்தேயாக வேண்டும் என்ற துடிப்பை உருவாக்குவதாக அமையவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.

ஜோர்டான் போன்ற ஒரு நாட்டில் இருந்துகொண்டு, பெரும்பாலும் இஸ்லாமியர்களைக் கொண்ட குழுவொன்று கள்ளநோட்டுகளை அச்சடித்து கடல் வழியாக இந்தியாவுக்குள் கொண்டுவருவதாகச் சொல்கிறது ‘ஃபார்ஸி’ கதை.

அந்த குழுவின் தலைவர் எங்கிருக்கிறார் என்பதை இதில் சொல்லவில்லை.

போலவே, மும்பையில் போலி கலைப்பொருட்கள், ஓவியங்கள், வீட்டு உபயோகப்பொருட்களை விற்பதில் ஈடுபடும் கும்பலும் அத்தகைய அடையாளங்களுடன் காட்டப்படுகிறது.

இந்த குற்றங்களோடு தொடர்புடையவர்கள் நூறாண்டுகள் பழமையான ஒரு தேசியக் கட்சியைச் சேர்ந்தவராக இருக்கிறார்.

இது போன்ற தகவல்கள் அதிக சதவிகிதத்தில் இடம்பெற்றிருப்பதே ‘ஃபார்ஸி’யை வெறுமனே ஒரு பொழுதுபோக்கு படைப்பாக மட்டும் பார்க்க முடியாது என்பதை உணர்த்துகிறது.

‘இல்லை, இது பொழுதுபோக்குதான்’ என்று நம்புபவர்களுக்கு, இப்படைப்பு ஓரளவுக்குத் திருப்தியைத் தரும். மற்றவர்களுக்கு, இது இன்னுமொரு நகல் விளையாட்டு. அவ்வளவுதான்!

– உதய் பாடகலிங்கம்

You might also like