30 ஆயிரத்தைத் தாண்டும் நிலநடுக்க உயிரிழப்பு!

-உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

துருக்கி-சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7000ஐ தாண்டி உள்ளது. சிரியாவிற்கு அருகிலுள்ள தொலைதூர பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வது கடும் சவாலாக உள்ளது.

பனிப்பொழிவால் சில சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் உதவிப்பொருட்களை விரைவாக கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகும் என்பதால் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 தென்கிழக்கு மாகாணங்களில் 3 மாதங்களுக்கு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார் அதிபர் தாயிப் எர்டோகன்.

இந்த நிலையில், துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் தற்போதைய பலி எண்ணிக்கையை விட 8 மடங்கு அதிகமாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத இந்த நிலநடுக்கத்தால் மொத்த பலி எண்ணிக்கை 30 ஆயிரமாக அதிகரிக்கக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள துருக்கியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள இரு விமானங்களில் மீட்பு உபகரணங்கள் மற்றும் மருத்துவர்கள் குழுக்களை இந்தியா அனுப்பி வைத்தது.

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு சி-17 போக்குவரத்து விமானங்களில் சுவர்களைத் துளையிடும் இயந்திரங்கள், நிவாரண முகாம்களுக்கான பொருள்கள், மருந்துகள், தேர்ச்சி பெற்ற மோப்ப நாய்களுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 101 பேர் துருக்கிக்கு புறப்பட்டனர்.

அந்த விமானங்கள் துருக்கியின் அடானா பகுதியில் தரையிறங்கின. இதேபோல் சிரியாவுக்கும் மருந்துப் பொருட்களுடன் கூடிய மீட்புப் படையினரையும் இந்தியா அனுப்பி வைக்க உள்ளது.

You might also like