துருக்கியில் பலி எண்ணிக்கை 20,000 ஆக வாய்ப்பு!

உலக சுகாதார அமைப்பு தகவல்

துருக்கி – சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் நேற்று அதிகாலை, முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. இதில் கட்டிடங்கள் பல குலுங்கி, சரிந்து தரைமட்டமானது.

இந்த இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர். ஆரம்பத்தில் 400 பேர் பலி என கூறி வந்த நிலையில், அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 4000 ஆனது.

இந்நிலையில், இன்று காலை முதல் துருக்கியில் மீண்டும் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

முதலில் ரிக்டர் அளவில் 5.5 எனவும் இரண்டாவது முறையாக 5.7 எனவும் பதிவானது. இதனால், மக்கள் மேலும் பீதியில் உறைந்துள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில், இதுவரை 6000 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிலநடுக்கத்தால், பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் தாண்ட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது.

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியா நாட்டுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளது.

மீட்புப் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொண்டு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்து உள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை துல்லியமாக கண்டுபிடிப்பதற்காக 76 பேரும் மீட்பு பணி நிபுணர்கள் 4 பேரும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

ஸ்பெயினில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள், உபகரணங்கள், 400 ரக ராணுவ விமானம், மற்றும் பணியாளர்களை அனுப்பி வைத்து உள்ளது.

போலந்து நாடு 76 தீயணைப்பு வீரர்கள், மற்றும் நன்கு பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள், நவீன கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக துருக்கியில் தற்காலிக ஆஸ்பத்திரி அமைத்து கொடுக்க இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்து உள்ளது.

இஸ்ரேல் நாடு 150 என்ஜீனியர்கள் கொண்ட மீட்பு படை, மருத்துவ பணியாளர்கள், உதவி பொருட்களை அனுப்பி வைத்து உள்ளது.

இந்தியாவும் 2 கட்டமாக மீட்பு குழுவினரை இன்று துருக்கி அனுப்பியது.

இதே போல ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, இத்தாலி, கிரீஸ் உக்ரைன், போலந்து கத்தார், செர்பியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 45-க்கும் மேற்பட்ட நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவி செய்துள்ளன.

You might also like