ரீமேக் படங்கள் எடுப்பதில் ஒரு வசதி. ஏற்கனவே ஒரு முன்மாதிரி இருப்பதால், அதைக் கொண்டு எளிதாகப் படப்பிடிப்பைத் திட்டமிட்டு விடலாம்.
ஆனால், அதில் ஒரு சிக்கலும் இருக்கிறது. வெற்றி பெற்ற காரணத்தாலேயே ஒரிஜினலின் ஒவ்வொரு பிரேமையும் அச்சு அசலாக மீளுருவாக்கம் செய்யாவிட்டால் ரசிகனின் அதிருப்தியைச் சம்பாதிக்க வேண்டியிருக்கும்.
இந்த ஒப்பீட்டை எதிர்கொள்ள வேண்டியிருக்குமே என்ற யோசனையினாலே தான் பெரும்பாலான இயக்குனர்கள், நடிப்புக்கலைஞர்கள் ரீமேக் படங்களைத் தவிர்ப்பார்கள்.
அதையும் மீறி, ஒரு படம் வேறொரு மொழியில் உருவாக்கப்படுவதற்கு உத்தரவாதமான வெற்றி காரணமாக இருக்கும் அல்லது மூலத்தைப் பார்க்காதவர்கள் நிச்சயம் இதனைப் பார்த்தாக வேண்டுமென்ற விருப்பம் இருக்கும்.
இரண்டாவது காரணம் எப்போதாவது காணக் கிடைக்கும். ஆனால், அப்படியொரு நோக்கத்தோடே வெளியாகியிருக்கிறது ஆர்.கண்ணன் இயக்கியுள்ள ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’.
அடுப்பங்கரை வாழ்க்கை!
ஒரு நிச்சயிக்கப்பட்ட திருமணம். புதிய வாழ்க்கை குறித்த எதிர்பார்ப்புடன் புகுந்த வீடு வருகிறார் ஒரு பெண்.
கணவர், மாமனார், மாமியார் என்று சிறிய குடும்பம். நாத்தனாருக்குத் திருமணமாகிவிட்டது.
ஒரு பிக்கல் பிடுங்கல் இல்லை என்றே வெளியில் இருப்பவர்கள் கருதும் சூழல்.
ஆனால், மணமான சில நாட்களிலேயே அந்த வீட்டின் இயல்பு அப்பெண்ணுக்குப் புரிந்து விடுகிறது.
சமையலறையே வாழ்க்கை என்றிருக்கும் பெண்களின் கதிதான் தனக்கும் என்பது மெல்ல பிடிபடுகிறது.
அந்த இறுக்கத்தை விட்டு விலகி வேலை தேடலாம் என்றால், மாமனாரும் கணவரும் அனுமதிப்பதில்லை. அதன்பின் என்னவானது என்று சொல்கிறது ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’.
அடுப்பங்கரை, அடுப்படி, சமையற்கட்டு, ஆங்கிலத்தில் கிச்சன் என்று சொல்லப்படும் சமையலறையைத் தவிர்த்து வேறெதையும் ஒரு நொடி கூட யோசிக்க முடியாது என்றிருந்த, என்றிருக்கிற பெண்களின் ஆதங்கத்தைக் காட்டுகிறது இப்படம்.
எளிமையான உரையாடல்!
மேலே சொன்ன கதையில் மருமகளாகத் தோன்றியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் வெளிப்படுத்தியிருக்கும் உணர்வுகள் காட்சிகளுக்குப் பொருத்தமாக இருக்கின்றன.
முந்தைய படங்களைவிட இதில் சற்று பூசினாற் போல தோன்றியிருக்கிறார். அது, கல்யாணக் கனவினை நனவாக்கத் துடிக்கும் ஒரு பெண்ணை கண் முன்னே நிறுத்தியிருக்கிறது. அது திட்டமிட்டதா தற்செயலானதா என்று தெரியவில்லை.
ஐஸ்வர்யாவுக்கு அடுத்தபடியாகப் படம் முழுக்க வருவது கணவராக வரும் ராகுல் ரவீந்திரனும் மாமனாராக வரும் போஸ்டர் நந்தகுமாரும் தான்.
ராகுல் நடிப்பில் துருத்தல்கள் ஏதும் இல்லை; ஆனால் அது திருப்தியைத் தரவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.
வெளிப்படையாக வன்மத்தை கக்காத, அதே நேரத்தில் ஆணாதிக்கமிக்க ஒரு முதியவராக, மாமனார் வேடத்தில் நடித்திருக்கிறார் நந்தகுமார். இயக்குனர் சொன்னதைச் செய்திருக்கிறார்.
இவர்கள் தவிர்த்து ஐஸ்வர்யாவின் மாமியாராக, நாத்தனாராக நடித்தவர்கள், அவரது குடும்பத்தினர் என்று ஒரு டஜன் நடிகர்கள் இரண்டொரு காட்சியில் வந்து போயிருக்கின்றனர்.
தமிழ் பதிப்புக்காக சேர்க்கப்பட்டார்களோ என்று எண்ணும் அளவுக்கு யோகிபாபு, கலைராணியின் வரவு அமைந்திருக்கிறது. இவ்விரண்டு பாத்திரங்களையும் இதர காட்சிகளோடு பிணைக்கத் தவறியிருக்கிறார் இயக்குனர்.
யோகிபாபுவின் நடிப்பு வெகு இயல்பாகத் தெரிந்தாலும், அவர் பேசும் வசனங்கள் சிரிப்பூட்டவில்லை என்பதைச் சொல்லியாக வேண்டும்.
அதேபோல, ஆணாதிக்கத்தைத் தன்னை அறியாமல் சுமக்கும் ஒரு சாதாரணப் பெண்ணாக வருகிறார் கலைராணி. ஒரு ரசிகரால் வெகுசாதாரணமாக அவரது பாவனைகளை ‘ஓவர் ஆக்டிங்’ என்று சொல்லிவிட முடியும்.
இப்படத்துக்குப் பெரிய பலம் பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு.
வண்ணமயமாகவும் இருக்க வேண்டும், அதேநேரத்தில் செயற்கையாகவும் தெரியக்கூடாது என்பதற்காக மெனக்கெட்டிருக்கிறார்.
லியோ ஜான் பாலின் படத்தொகுப்பு, இறுதியாக வரும் நடனக் காட்சியில் மட்டும் கொஞ்சம் நெருட வைத்திருக்கிறது.
கொண்டாட்டத்தையும் அருவெருப்பையும் உணரும் ஒரு பெண்ணின் மனதை வெளிக்காட்ட உதவியிருக்கிறது ஜெர்ரி சில்வஸ்டர் வின்சென்டின் பின்னணி இசை. ராஜ்குமாரின் கலை வடிவமைப்பும் அதையே செய்திருக்கிறது.
’என் துணி மட்டுக்கும் கையால துவைம்மா’, ‘சாதத்தை மட்டும் விறகு அடுப்புல வைக்கச் சொல்லும்மா’, ’வெளியில வந்தா டேபிள் மேனர்ஸ் எல்லாம் பாலோ பண்றீங்க போலிருக்கு’, ‘அத்தை உங்களுக்கு என்ன பிடிக்கும்’ என்பது போன்ற எளிமையான உரையாடல் வழியே கதைக்குள் நம்மை இழுக்கிறது சவரிமுத்து, ஜீவிதா கூட்டணியின் வசனம்.
இத்தனை அம்சங்களையும் மீறி, நியாயமாக இப்படம் யாரைச் சென்றடைய எடுக்கப்பட்டதோ அந்த நோக்கம் பூர்த்தியாகியிருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
ஒப்பீடு தரும் உளைச்சல்!
ஒரு கதையை, களத்தைப் படைத்தபிறகு, அதனைப் படமாக உருமாற்றுவதை ஒரு விளையாட்டைப் போல கையாளும் திறமை இயக்குனர் ஆர்.கண்ணனுக்கு வாய்த்திருக்கிறது. இதில் வஞ்சப்புகழ்ச்சி துளியும் இல்லை.
ஏனென்றால், ‘ஜெயம்கொண்டான்’ தொடங்கி இப்போது வரை அவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கையே அதற்குச் சாட்சி. ஒருவகையில் அறிமுக இயக்குனர்களுக்கு உதாரணம் காட்டத் தகுந்தவர்.
ஆனால், ‘தி கிரேட் இண்டியன் கிச்சனி’ல் அவர் கொஞ்சம் சறுக்கியிருக்கிறார். ஒரிஜினல் படத்தையும் இதனையும் ஒப்பிட்டு விமர்சகர்கள் உளைச்சலைத் தருவார்களே என்ற எண்ணத்தில், மூலத்தை அப்படியே பிரதியெடுக்க முயன்றிருக்கிறார்.
மலையாளத்தில் ஜியோ பேபி சொன்ன ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ கதை நிச்சயம் புதியதல்ல; மிகச்சில படங்களில் ஓரிரு காட்சிகளாக வந்த விஷயத்தை அவர் 100 நிமிடங்களுக்கு விரித்திருந்தார். அவ்வளவுதான்..
தமிழ் ரீமேக் என்ற பெயரில் புதிதாக எதையும் சேர்த்து, ஏற்கனவே இருப்பதைச் சொதப்ப வேண்டாம் என்று கண்ணன் நினைத்திருக்கலாம்.
ஆனால், அவரது அந்த எண்ணமே சாதாரணப் பெண்களின் கவனம் இப்படம் மீது குவியாமல் தவிர்க்கவும் காரணமாகியிருக்கிறது.
சபரிமலைக்குச் செல்லத் துடிக்கும் பெண் ஆர்வலரின் வீட்டுக்குள் ரவுடி புகும் காட்சி, ’அந்த விவகாரத்தை மறந்து ரொம்ப நாளாச்சே’ என்பதை உணர்த்துகிறது.
அதேநேரத்தில், தற்போது சபரிமலையில் 10 முதல் 50 வயதுப் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற உண்மையை அது கோடிட்டுக் காட்டவே இல்லை.
பல்லாண்டுகளாக அடுப்பங்கரையில் இருக்கும் பெண்கள் விரும்பியே அதனைச் செய்வதாகச் சமூகம் கட்டமைத்திருக்கிறது.
அதை உடைத்து, மனம் புழுங்கியவாறே அதனைச் செய்கின்றனர் என்பதைச் சொல்லப் புதிதாகச் சில காட்சிகளைச் சேர்த்திருக்கலாம்.
அக்கம்பக்கத்தில், வெளியிடங்களில் அப்பெண்ணுக்குச் சமூகம் தரும் மரியாதையைக் காட்சிப்படுத்தியிருந்தால், பெண்ணின் உறவினர்கள் அவரது நிலையைக் கண்டும் காணாமல் இருப்பதைச் சொல்லியிருந்தால் தாய்மார்களிடம் கூடுதல் அழுத்தம் கிடைத்திருக்கும்.
அப்படிச் சேர்த்தால் முழுக்க ‘மெலோடிராமா’ ஆகிடுமோ என்ற தயக்கத்தில், மூலத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் இயக்குனர்.
ஆனால், நமக்குத்தான் இருக்கையில் உட்கார முடியவில்லை.
ஒருவேளை ஓடிடியில் வெளியாகும்போது, இப்படம் எடுக்கப்பட்ட நோக்கம் பூர்த்தியாகலாம்.
அவ்வாறு நிகழ்ந்தால், திரையரங்குகளுக்குப் பெண்கள் படையெடுக்க வேண்டும் என்ற நோக்கில் ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ உருவாக்கப்படவில்லை என்பது உண்மையாகிவிடும்.
-உதய் பாடகலிங்கம்