உணவகம் எனும் இரக்கமற்ற வசூல் மையங்கள்!

எழுத்தாளர் ராஜகுமாரனின் அனுபவம்

அண்மையில் பயணத்தின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஆரோக்கியமான உணவுக்காக அலைந்த அனுபவத்தை எழுதியுள்ளார் எழுத்தாளரும் இயக்குநருமான ராஜகுமாரன்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டே இருக்கிறேன்.

இதில் குடும்பப் பயணம், தோழமைப் பயணம், எழுத்துப் பயணம், தனித்த பயணம், படப்பிடிப்புக்கான பயணம் எல்லாம் அடங்கும்.

பயணங்கள்தான் என் ஆழ்மனதை, எழுத்தை, படைப்பூக்க மனநிலையை உற்சாகமாக இயக்கிக் கொண்டிருக்கிறது. அவற்றில் எண்ணிலடங்கா அனுபவங்கள். பாடங்கள்.

பயணங்களில் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் மூன்று. தண்ணீர், உணவு, சுகாதாரமான தங்குமிடம்.

மூன்றுமே இப்போது எங்கும் நம்பகத் தன்மை இன்றி இருக்கின்றன. அண்மையில் 4 நாள் வெளியூர் பயணங்களில் திடீரென உடல் நலக் குறைவு. உடலில் இயல்பற்ற சோர்வு. மருத்துவ மனைக்கு சென்றேன்.

Gastritis என்னும் இரைப்பை அழற்சி என்றன பரிசோதனை முடிவுகள். இதற்கு காரணம் ஏதோ ஒரு food poison!

ஊசி, மாத்திரைகள், திரவமருந்து கொடுத்து, இடியாப்பம், இட்லி, ரசம் சாதம் உண்ணுங்கள். ஓய்வெடுங்கள் என்றார் மருத்துவர்.

இடியாப்பம் எங்கும் கிடைக்கவில்லை. மதியம் ஒரு உணவகத்தில் சாம்பார் சாதம் போன்றே ரசம் சாதம் கொடுங்கள், அதே 60 ரூபாய் தருகிறேன் என்றேன், உடல் நலக் குறைவை எடுத்துச் சொல்லி.

இல்லை சார் 150 ரூபாய்க்கு சாப்பாடு வாங்கி, அதில் ரசம் சாதம் சாப்பிடலாம் என்றார், அந்த கார்பரேட் கருணை நிறைந்த உணவக உரிமையாளர்.

மருத்துவமனைகள் போன்றே பெரு உணவகங்களும் இரக்கமற்ற வசூல் மையங்கள் ஆகிவிட்டன.

ராஜகுமாரன்

மிகப்பெரிய துயர் என்னவெனில் எல்லா ஊரிலும் இருந்த ஆரோக்கியமான, விலை குறைவான நடுத்தர வர்க்க மெஸ்கள், சுவையான மரபு வழி சிறு உணவகங்கள் எல்லாம் கார்ப்பரேட் அரக்கன்களால் கபளீகரம் ஆகி விட்டன.

நாம் வாழ்வின் பாதிப் பயணத்தை நலமாகவே கடந்து விட்டோம்.

சுவையூக்கி உணவுகளுக்கு அடிமை ஆகிவிட்ட நம் பிள்ளைகளின் வாழ்க்கை முறை, இரவு பகல் பேதமற்ற பணிச்சூழல், உணவு முறை இவற்றை நினைத்தால் மிகுந்த கவலையாக இருக்கிறது.

பயணம் இனிதே தொடர்வோம்.

You might also like