இது மவுனமான நேரம்!

-இயக்குனர் கே.விஸ்வநாத்துக்கு இதயப்பூர்வமான அஞ்சலி!

கமர்ஷியல் திரைப்படங்களில் கருத்துகளைச் சொல்வதே குதிரைக்கொம்பு என்றிருக்கும் சூழலில், இயல்பு வாழ்க்கையைப் பிரதிபலிப்பது அரிதினும் அரிது என்றிருக்கும் ஒரு வர்த்தகப் பரப்பில், உலக சினிமா வரிசையில் வைக்கத்தக்க பல படைப்புகளைத் தந்தவர் இயக்குனர் கே.விஸ்வநாத்.

பொழுதுபோக்கு அம்சங்களைத் தவிர வேறெதுவும் இருக்க ‘இஞ்ச்’ அளவுக்குக் கூட வாய்ப்பில்லை என்று சொல்லப்படும் தெலுங்குத் திரையுலகில் அவர் இந்த சாதனையைச் செய்திருக்கிறார் என்பது இன்னும் ஆச்சர்யம்.

ஒலிப்பதிவு வழியே..

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ரேபல்லே எனும் ஊரில் பிறந்தவர் காசினதுனி விஸ்வநாத். இவரது பெற்றோர் பெயர் சுப்பிரமணியம் – சரஸ்வதி. காசினதுனி என்பது அவரது குடும்பப் பெயர். அதுவே அவரது இனிஷியலாகவும் ஆனது.

குண்டூரில் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தபிறகு திரைத்துறையில் நுழைய வேண்டுமென்று ஆசைப்பட்டார் விஸ்வநாத். அதற்கேற்றவாறு, அப்போது அவரது தந்தையும் சென்னையிலுள்ள வாஹினி ஸ்டூடியோவில் பணியாற்றி வந்தார்.

முதலில் ‘பாதாள பைரவி’ படத்தின் உதவி இயக்குனராகச் சேர்ந்தவர், பின்னர் வாஹினியின் ஒலிப்பதிவுப் பிரிவில் வேலை செய்யத் தொடங்கினார்.

அதே நேரத்தில், தமிழ் இயக்குனர் கே.ராம்நாத்திடம் உதவியாளராகவும் பணியாற்றினார்.

அந்த காலத்தில் ஒலிப்பதிவு இயக்குனரின் கீழ் ஆபரேட்டிவ் ஆடியோகிராபராக பணியாற்றும் வழக்கம் இருந்தது.

அந்த வகையில், ‘எங்க வீட்டு மகாலட்சுமி’ உள்ளிட்ட பல தமிழ், தெலுங்கு படங்களுக்கு ஒலிப்பதிவு செய்துள்ளார் கே.விஸ்வநாத்.

அப்போது ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் இயக்குனர் ஆதுர்த்தி சுப்பாராவின் உதவியாளர் ஆனார். அவ்வாறு பணியாற்றிய அனுபவத்தின் வெளிப்பாடாக, சுப்பாராவ் இயக்கிய படங்களின் திரைக்கதையிலும் பங்களிப்பைத் தந்துள்ளார்.

1965இல் ‘ஆத்ம கவுரவம்’ என்ற படம் வழியே இயக்குனர் அந்தஸ்தை அடைந்தார். அடிப்படையில் திரைக்கதை, வசனம் குறித்த அறிதலும் தெளிவும் மிக்கவராக இருந்தபோதும், ஆரம்பகாலத்தில் ரீமேக் படங்களையும் பிற கதாசிரியர்களின் கதைகளையும் தன் முத்திரையோடு தந்தார் விஸ்வநாத்.

ஏன், 80 வயதில் கூட அல்லாரி நரேஷ், மஞ்சரி பட்னிஸ் ஜோடியை கொண்டு ‘சுபப்ரதம்’ எனும் படத்தை இயக்கினார்.

இதுவே, இடைவிடாத உழைப்போடும் கால மாற்றங்களுக்கேற்ற அறிதலோடும் விஸ்வநாத் திரைப்படங்களை உருவாக்கினார் என்பதற்குச் சான்று.

விதவிதமான அனுபவங்கள்!

ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் கே.விஸ்வநாத் தன்னை மாற்று சினிமா இயக்குனர் என்று ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை. ஆனால், அவரது படங்கள் அப்படிப்பட்டவைதான்.

கலைப் படங்கள் மக்களிடம் இருந்து விலகித்தான் நிற்கும் என்றிருந்த அப்போதைய சூழல் கூட அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

அவரது ஆரம்பகாலப் படங்கள் அப்போதைய சமூகப் பிரச்சனைகளைப் பேசினாலும், அவை அனைத்துமே முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டவைதான்.

நாகேஸ்வர ராவ், என்.டி.ராமாராவ், கிருஷ்ணா, கிருஷ்ணம் ராஜு, சோபன் பாபு, சந்திரமோகன், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ராஜசேகர், வெங்கடேஷ், ஸ்ரீகாந்த் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் முன்னணியில் இருந்த தெலுங்கு நடிகர்களை இயக்கியவர் கே.விஸ்வநாத்.

இடையிடையே சோமயாஜுலுவை வைத்து ‘சங்கராபரணம்’மும், சர்வதமன் பானர்ஜியைக் கொண்டு ‘ஸ்ரீவெண்ணிலா’வும் தந்துள்ளார்.

இந்தியில் ஜிதேந்திரா, ரிஷி கபூர், ராகேஷ் ரோஷன், மிதுன் சக்கரவர்த்தி, அனில் கபூர், அஜய் தேவ்கன் என்று முன்னணி நட்சத்திரங்களே அவர் படத்தில் நடித்துள்ளனர்.

ஆனால், ஒன்று கூட அப்போதைய காலகட்டத்தில் வந்த இதர கமர்ஷியல் படங்களோடு ஒப்புநோக்கும் தன்மை கொண்டதல்ல. அதுவே கே.விஸ்வநாத்தின் தனித்துவமான படைப்பாக்கத்திற்குச் சான்று.

மனிதனின் நிறம், சாதீயப் பாகுபாடுகள், வரதட்சணைக் கொடுமை, பெண்ணடிமைத் தனம், அகங்காரம் பொறாமை போன்ற துர்க்குணங்கள், அங்கக் குறைபாடுகள், மது போதை உள்ளிட்ட பல சமூகப் பிரச்சனைகளைப் பேசியவை விஸ்வநாத்தின் திரைப்படங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அனுபவம் தரும்.

ராக தேவதை என்று தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட ’ஸ்ரீ வெண்ணிலா’வில் கண் பார்வைக் குறைபாடுடைய நாயகன் ஒரு விலைமாதுவைக் காதலிப்பார்; அந்த நாயகனை ஒருதலையாகக் காதலிக்கும் பெண் பேச்சுத்திறன் அற்றவராக இருப்பார்.

எண்பதுகளில் மட்டுமல்ல, இந்த முக்கோணக் காதல் கதை இப்போதும் புதிதென்று சொல்லத்தக்கது.

கொண்டாடப்பட்ட கமல்!

கமல்ஹாசனின் நடிப்புத் திறமையைப் பாரதிராஜாவின் ’16 வயதினிலே’ படத்திலேயே பார்த்தாலும் கூட, பாலு மகேந்திராவின் ‘மூன்றாம் பிறை’யில் அவர் தேசிய விருதைப் பெற்றிருந்தாலும் கூட, நூறாவது படமான ‘ராஜபார்வை’யில் அவர் தனியாவர்த்தனம் செய்திருந்தாலும் கூட, பெருவாரியான ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கியது ‘நாயகன்’ படத்தில்தான்.

ஆனால், இடைப்பட்ட காலத்தில் வெளியான இரண்டு தெலுங்கு டப்பிங் படங்கள் கடைக்கோடியில் இருந்த தமிழ் ரசிகனையும் வாய் பிளந்து ரசிக்க வைத்தது.

சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகியன தான் அந்தப் படங்கள்.

முக்கியமாக ‘இது மவுனமான நேரம்’ பாடலை நம்மையும் அறியாமல் தொடர்ந்து கேட்டாலும், பார்த்தாலும், கடந்த காலத்தில் காதல் பூத்த தருணங்களை ஆழ்மனது அசை போடத் துடிப்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

ஒரு டப்பிங் படம் என்பதையும் தாண்டி, அப்படங்களை ரசிக்க காரணமாக இருந்தது கமல் ஏற்ற பாத்திரங்கள்.

அந்த இரண்டுமே, சாதாரண மனிதர்களிடம் இருந்து வேறுபட்ட விளிம்பு நிலை பாத்திரங்கள் என்பதைக் கவனித்தாக வேண்டும்.

முதலாமவர், நடனத் துறையில் அபாரமான ஆற்றல் இருந்தும் உச்சாணிக்கொம்பை எட்ட முடியாமல் தோல்வியுற்ற கலைஞன்.

இரண்டாவது நபர், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டு சமூகத்தினரால் மனநலம் பிறழ்ந்தவராகக் கருதப்படுபவர்.

இந்த இரண்டு படங்கள் வழியே திகட்டத் திகட்ட காதலைத் தந்த விஸ்வநாத் தான், கமல் நடித்த இதர தெலுங்கு, கன்னடம், இந்திப் படங்களின் மூலங்களையும் டப்பிங் பதிப்புகளையும் ஆசையோடு தேடித் தேடிப் பார்க்க வைத்தவர்.

அதே கமல்ஹாசனோடு பாசவலை, குருதிப்புனல் படங்களில் நடித்தவர்.

நடிப்பிலும் முத்திரை!

முகவரி, காக்கைச் சிறகினிலே, பகவதி, ராஜபாட்டை, லிங்கா போன்ற படங்களில் நடித்திருந்தாலும், யாரடி நீ மோகினியில் நயன்தாராவின் தாத்தாவாக கே.விஸ்வநாத் நடித்ததை தமிழ் ரசிகர்கள் மறக்கமாட்டார்கள்.

அந்த படத்தின் தெலுங்கு மூலமான ‘ஆடவாரி மாட்டலுகு அர்த்தாலே வேறுலே’வில் த்ரிஷாவின் தாத்தாவாக வந்திருப்பார்.

அதில் அவரது நடிப்பு மெய் சிலிர்க்க வைக்கும். அப்படம் பெருவெற்றியைப் பெற்றதற்கு, விஸ்வநாத்தின் இருப்பும் ஒரு காரணம். அப்போது அவரது வயது எண்பதை நெருங்கியிருந்தது.

ஒலிப்பதிவாளராகத் தன் வாழ்வைத் தொடங்கியது முதல் திரைக்கதையாக்கம், இயக்கம், நடிப்பு என்று திரைத்துறையில் தான் ஆற்றிய ஒவ்வொரு பணியையும் ரசித்துச் செய்தவர் விஸ்வநாத்.

அது மட்டுமல்லாமல், ஒரு இயக்குனராகத் தான் எடுத்த படங்களில் வலிந்து எந்தவொரு சார்பு நிலையையும் முன்வைக்காதவர்.

அதுவே, காலம் கடந்தும் அவரது திரைப்படங்களை ரசிக்கும்படியாக வைத்திருக்கிறது; அவருடைய படைப்புகளோடு உலக சினிமாக்களை ஒப்பிட்டு நோக்கும் பார்வையைத் தந்திருக்கிறது.

இந்தியத் திரையுலக வரலாற்றில் தனக்கென்று தனித்துவத்தை உருவாக்கிய கே.விஸ்வநாத்துக்கு இதயப்பூர்வமான அஞ்சலி!

– உதய் பாடலிகலிங்கம்

You might also like