டாஸ்மாக்கைத் தடுக்கப் பஞ்சாயத்து அமைப்பால் முடியுமா?

– வழிகாட்டும் குன்றக்குடி

‘குடி குடியைக் கெடுக்கும்’ என்று சொல்லியே இங்கு ‘டாஸ்மாக்’ விற்பனை இலக்கு விதிக்கப்பட்டு, அமோகமாக நடந்தாலும், அதனால் பாதிக்கப்படுகிறவர்களும், இளம் வயதிலேயே உயிரிழக்கிறவர்களும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இருந்தாலும், மது விற்பனைக் குறித்த புள்ளிவிபரங்கள் கிடைக்கிற அளவுக்கு, மதுவால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைக் குறித்த புள்ளிவிபரங்கள் பொதுவெளியில் கிடைப்பதில்லை.

ஒரு கட்டத்தில் மதுபானக் கடைகளை மூடக் கோரிப் போராட்டங்கள் தமிழகத்தில் வேகத்துடன் நடந்திருக்கின்றன.

அதையடுத்து சில அரசியல் கட்சிகள் தாங்கள் ஆட்சிப்பொறுப்புக்கு வந்ததும், மதுவிலக்கை அமல்படுத்தப்போவதாக விடுத்த அறிக்கைகள் கூடப் பலருக்கு மங்கலாக நினைவில் இருக்கலாம்.

இப்போது உள்ளாட்சித் தேர்தல் முழுமையடையாமல் நடந்த பிறகு, சில உள்ளாட்சி அமைப்புகளில் குறிப்பாக, சில கிராமப் பஞ்சாயத்துகளில் டாஸ்மாக் கடை தங்களுடைய கிராமத்திற்குள் இருப்பதை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இன்னும் சில கிராமப் பஞ்சாயத்துகள் அதைப் பின்பற்றவும் தயாராக இருக்கின்றன.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதற்கான அதிகாரம் இருக்கிறதா? என்கிற கேள்விக்கு ‘இருக்கிறது’ என்கிற பதிலைத் தருகிறார்கள் உள்ளாட்சி அமைப்புகளின் சட்டவிதிகளை அறிந்த அறிஞர்கள்.

தங்கள் கிராமத்தின் வழியே செல்லும் சாலைத்திட்டத்தை எதிர்க்கும் உரிமை கிராமப் பஞ்சாயத்துகளுக்கு உண்டா என்பது குறித்த விவாதம் ஊடகங்களில் நடந்தாலும் கூட, உள்ளாட்சிப் பிரிதிநிதிகளுக்கிடையே ஒத்த கருத்து இருந்தால், அங்கு பொதுமக்களின் ஏகோபித்த விருப்பத்திற்கு மதிப்புக் கொடுத்து, மதுபான விற்பனையைத் தடுத்து நிறுத்த முடியும், என்றே சொல்கிறார்கள்.

இந்தச் சமயத்தில் தென் தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு சில கிராமங்களில் தி.மு.க மலிவுவிலை மதுத் திட்டத்தை அமல்படுத்தியபோது, ஊர்க்கட்டுப்பாடு விதித்துத் தங்களுடைய கிராமங்களுக்குள் மலிவுவிலை மதுக்கடைகள் நுழைவதைத் தடுத்து நிறுத்தின.

காரணம்-குன்றக்குடி பஞ்சாயத்து அளித்த ஊக்கம் தான்.

முருகன் கோவிலுக்கும், பாரம்பரியமான மடத்திற்கும் பெயர் பெற்ற குன்றக்குடியில் பஞ்சாயத்துத் தலைவராகத் தொடர்ந்து இருந்தவர் அப்போதிருந்த குன்றக்குடி அடிகளார்.

அவர் தன்னுடைய பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட எல்லைக்குள் மலிவுவிலை மதுக்கடைகள் வைக்கப்படுவதைத் தடுத்த நிலையில், பிரஷர் கொடுக்கப்பட்டு, தங்களுடைய உரிமைக்காக வழக்குப் போடுமளவுக்குச் சென்றார் அடிகளார்.

மடத்தின் சார்பாக நடந்த வெவ்வேறு தொழிற்சாலைகளில் குன்றக்குடியில் வசித்த பலருக்கும் வேலை கிடைத்தது. வீட்டுக்கு ஒருவருக்கு என்கிற விகிதத்தில் குன்றக்குடி பஞ்சாயத்தில் வேலைக்கும், வருமானத்திற்குமான உத்திரவாதம் இருந்தது.

குன்றக்குடி மடத்தின் சார்பில் அங்கு செயல்பட்ட முந்திரி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு யாருடைய பெயர் வைக்கப்பட்டிருந்தது தெரியுமா?
பெரியாரின் பெயர்.

அந்த அளவுக்கு குன்றக்குடி அடிகளாருக்கும், பெரியாருக்கும் இடையில் புரிதல் இருந்தது.

அந்தச் சமயத்தில் வார இதழ் ஒன்றிற்காக அடிகளாரைச் சந்தித்து – குன்றக்குடியில் மதுக்கடை நுழைவதற்கு எதிராகத் தீவிரம் காட்டுவது குறித்துப் பேட்டி கண்டபோது கரகரத்த குரலில் திருநீறு மணத்துடன் அவர் சொன்னார்.

“இங்கிருப்பவர்கள் எங்களோட மக்கள். அவர்களுக்கு வேலை கொடுக்கிறோம். தொழிற்பயிற்சி கொடுக்கிறோம். அவர்கள் வாழ்க்கையில் பங்கெடுத்துக் கொள்கிறோம்.

அவர்கள் மதுவினால் உடலையும், குடும்பத்தையும் சீரழித்துக் கொள்வதை எப்படி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்?

அதனால் தான் அரசுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், எங்களுடைய பகுதிக்குள் மதுக்கடை நுழையக்கூடாது என்பதில் நாங்கள் அழுத்தமாக இருக்கிறோம்.

முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவனுடைய வயிறு நிறைந்தால்தான் அவன் இறைவனை நினைப்பான்.

அதற்குத் தொழில் அவசியம். அதைக் கொடுக்கிறோம். எங்கள் பகுதிக்குள் நாங்கள் செய்கிறோம்.

தமிழகத்தில் உள்ள பல மடாதிபதிகளும், மடங்களும் தங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் இதை அமல்படுத்த வேண்டும்”

தலையில் காவி வண்ணத்தில் முண்டாசு கட்டியபடி அடிகளார் பேசிய பேச்சில் தொனித்த மக்களின் மீதான நேசம் பிடித்திருந்தது.

– மணா

You might also like