எனக்கான எண்ணங்கள் வேரூன்றிய இடம்!

– சுப.உதயகுமாரின் பள்ளிப் பிராய அனுபவம்

எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம்.
அந்த வரிசையில் சுப.உதயகுமாரின் பள்ளிப் பிராயம்.

நாகர்கோவிலில் உள்ள தேசிய விநாயகம் தேவஸ்தானம் மேல்நிலைப் பள்ளியில்தான் படித்தேன்.

எட்டாம் வகுப்பு படிக்கும்போது சுவாமிதாஸ் என்றொரு ஆசிரியர் இருந்தார். என் அப்பா, அம்மாவுக்கு பாடம் நடத்தியவரும் அவர்தான்.

ஓய்வுபெற்ற பிறகு பள்ளி மாணவர்களுக்காக கணிதம், ஆங்கிலப் பாடங்களுக்காக தனி வகுப்புகளை நடத்தினார். அவருடைய வகுப்பில் என்னையும் சேர்த்துவிட்டனர்.

இன்று நான் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஆசிரியர் சுவாமிதாஸ்தான் காரணம். பள்ளியில் படிக்கும்போது படித்ததை மட்டும் அப்படியே எழுதாமல், சுயமாக எழுதக் கற்றுக் கொண்டேன்.

அதை சில ஆசிரியர்கள் விரும்புவார்கள், சிலர் விரும்ப மாட்டார்கள். “நான் வகுப்பில் நடத்தியதை எழுதாமல், உன் இஷ்டத்துக்கு எழுதி வைத்திருக்கிறாய்’ என்று சிலர் கடிந்து கொள்வார்கள்.

ஆனால், ஆங்கிலத்தை நம்பிக்கையுடன் எழுதும் பழக்கம் அவரிடமிருந்துதான் கிடைத்தது. ஆசிரியர் சுவாமிதாஸ் நடத்திய பாடங்கள்தான் ஆங்கில மொழி அறிவுக்கான அடித்தளமாக அமைந்தது.

அமெரிக்காவுக்குப் படிக்கச் செல்வதற்காக எழுதிய தேர்வுகளில் எளிதாகத் தேர்ச்சி பெறுவதற்கு அவர் கொடுத்த ஆங்கில மொழிப் பயிற்சியே காரணம்.

ஆங்கில இலக்கியத்தில் கவிதைகள், கட்டுரைகள் எழுதும் அளவுக்கு என்னை மேம்படுத்திய, அந்த ஆங்கில ஆசிரியரின் படத்தை இன்றும்கூட எனது கம்ப்யூட்டரில் வைத்திருக்கிறேன்.

நமக்கு அகரம் எழுத கற்றுக்கொடுத்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை எப்போதும் நாம் மறந்து விடுகிறோம்.

அரசு தொடக்கப் பள்ளியில் படித்தேன். அப்போது புஷ்பம், லில்லி என்ற ஆசிரியைகள் இருந்தார்கள். அவர்கள், அவ்வளவு
அருமையாக பாடம் நடத்துவார்கள்.

முதலில் எனக்கு எழுதக் கற்றுத்தந்தவர்கள் அவர்கள்தான். இன்று நான் உயர்கல்வி படித்து உயர்ந்திருக்கலாம்.

ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளும் திறனும், ஆழமான அறிவும் அவர்கள் பயிரிட்டது. இன்று அது விளைந்து பயிராகி தழைத்திருக்கிறது.

அதேபோல, எனக்குத் தமிழைக் கற்றுத்தந்த இரு தமிழாசிரியர்களை வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாது.

எங்களுக்குத் தமிழை உணர்ந்து நடத்திய மிகச் சிறந்த ஆசிரியர்கள் கோலப்பன் அய்யாவும், வள்ளிநாயகம் அய்யாவும். தமிழ் இலக்கணம், இலக்கியம் இரண்டையும் நேர்த்தியாக கற்பித்தார்கள்.

தமிழாசிரியர் கோலப்பன் பாடம் நடத்தும்போது முகத்தில் அத்தனை பாவங்களைக் காட்டுவார். முழு உடலும் பாடங்களை நடத்திக்காட்டும்.

அவர்களிடம் தமிழ் படித்தது ஒரு பொற்காலமாக மனம் நினைவுகளைக் கூடுகட்டி வைத்திருக்கிறது. இருவரும் வழங்கிய கொடையால் எனக்குள் தமிழ் செழித்து வளர்ந்திருந்தது.

இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறீர்களே என்றுகூட சிலர் சொல்வார்கள். அதற்குக் காரணம் அந்தப் பெருமகன்கள். 25 ஆண்டுகள் வெளிநாடுகளில் இருந்திருக்கிறேன்.

ஆனாலும் தமிழ்ப் பேச்சில் மாற்றமில்லை.

பயோனியர் குமாரசாமி கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் படித்தேன்.

அப்போது பேராசிரியர் எபிநேசர் பால்ராஜ், கணிதத்துறைத் தலைவராக இருந்தார். எனக்கோ கணக்கு சரிப்பட்டு வராது. அதில் பாண்டித்யம் கிடையாது. ஆனாலும் ஆசிரியர் என்மேல் பிரியமாக இருப்பார்.

வகுப்பு எடுப்பதற்கு முன்பு 5 நிமிடம் உலக நடப்புகள் பற்றி எடுத்துரைப்பார். மாணவர்கள் அனைவரும் அமைதியாக இருப்பார்கள்.

‘புட்டோ கைது’ என்ற செய்தியைக் கூறுவார். அவர் யாரென்றே புரியாமல் பலர் உட்கார்ந்திருப்பார்கள். நான் மட்டும் பதில் சொல்வேன்.

எனக்கு பொது விஷயங்களில் ஆர்வம் இருப்பதை முதலில் கண்டறிந்தவர் அவரே. எனக்கு போஸ்ட் கார்டு எழுதி, “எம்.எஸ்.சி. மேத்ஸ் படிக்காதே, சோஷியல் சயின்ஸ் படி” என்று கூறினார்.

அப்பா, அம்மா செலவு செய்து படிக்க வைத்தாலும், அவர்களுக்கு நாம் யார் என்பதைக் கண்டறிய முடியாது.

உண்மையான ஈடுபாடுள்ள ஆசிரியர்கள்தான் மாணவர்கள் என்னவாக ஆவார்கள் என்பதைக் கண்டுபிடித்து பயணத்திற்கு வழிகாட்டுகிறார்கள்.

கேரளப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்தேன். படித்து முடித்ததும் உடனடியாக எத்தியோப்பியாவில் பள்ளி ஆசிரியர் வேலை கிடைத்தது.

அந்நாட்டின் கலாசாரம், பழக்க வழக்கங்கள், நடைமுறைகள், நுணுக்கங்கள் எல்லாவற்றையும் எனக்கு ஆசிரியர் எபினேசர் எடுத்துச் சொன்னார்.

அதைத் தொடர்ந்து, எத்தியோப்பியாவில் பணிபுரிந்தவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்று அனுபவங்களை கேட்டறிய வைத்தார். அன்று எனக்கு அவர் கூறிய வார்த்தைகள் இன்றைக்கும் நினைவில் நிற்கிறது.

‘பி கேர்புல் டு டபிள்யூஸ்’ என்றார். ஒன்று, விமன். மற்றது, வொய்ன். இரண்டும் எத்தியோப்பியாவில் சர்வ சாதாரணம்.

எந்தத் தவறையும் செய்யக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக கட்டுப்பாடாக இருந்தேன். இரண்டையும் தொட்டால் வாழ்க்கை நாசம் என்பதை நன்றாகவே அங்கு உணர்ந்து கொண்டேன்.

மாணவர்களின் மனங்களில் ஓர் ஆசிரியர் எத்தனை பெரிய மாற்றத்தை விதைக்கிறார் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

எத்தியோப்பியாவில் பணியாற்றிய பிறகு, அமெரிக்காவில் 12 ஆண்டுகள் இருந்தேன். மினிசோட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ராபர்ட் ஜோஹன்சன், எனக்கு மிகவும் பிடித்தமான பேராசிரியராக இருந்தார்.

ஹவாய் பல்கலைக் கழகத்தில் பொலிடிக்கல் சயின்ஸில் பிஎச்.டி. ஆய்வில் ஈடுபட அவர் வழிகாட்டினார். அங்கு பேராசிரியர் ஹேரிட் ஃப்ரீட்மென் மாணவனாக சேர்ந்தேன்.

அவரைப் போய்த்தான் நான் பார்க்கவேண்டும். ஆனால் அவரே என் அலுவலகத்திற்கு வந்து, படிக்கவேண்டிய நூல்களை கூறிவிட்டுச் செல்வார். எனக்குப் பல விதங்களில் அவர் உதவியாக இருந்தார்.

நார்வே நாட்டைச் சேர்ந்த வருகைதரு பேராசிரியர் யோகான் கால்டூங். அவரிடம் வேலைக்குச் சேர்ந்தேன். சர்வதேச அமைதி பற்றிய ஆய்வுகளில் உலகப் புகழ்பெற்ற பேராசிரியர். நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார்.

டிரான்சென்ட் என்ற அமைப்பை ஏற்படுத்தி தகராறு மேலாண்மை, அகிம்சை, மனித உரிமை பற்றி உலகம் முழுவதும் பல நாடுகளுக்குச் சென்று இருவரும் பேசியிருக்கிறோம்.

நானும் அவரும் இணைந்து கல்வி பற்றி ஒரு புத்தகம்கூட எழுதியிருக்கிறோம். அமைதி ஆய்வுகளை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் பேராசிரியர் கால்டுங். அவரைப் போன்ற பலருடைய ஆளுமைகளால்தான் இன்று நான் உயர்ந்திருக்கிறேன்.

இந்த ஆசான்களின் படங்களை மட்டுமல்ல, அவர்களது வழிகாட்டுதல்களையும் நினைவுகளாக வைத்திருக்கிறேன்.

அவர்கள்தான் எனது வாழ்வின் முன்னேற்றத்துக்கு அஸ்திவாரமாக இருந்திருக்கிறார்கள். ஒரு சிலர் இறந்து விட்டார்கள். எபிநேசர், ஹேரிட் ப்ரிட்மென் மறைந்து விட்டார்கள்.

என்னுடைய பி.எச்.டி. ஆய்வுக்கான நேர்முகத் தேர்வின்போது, ஹேரிட் ஃப்ரிட்மென் உயிருடன் இல்லை. என் ஆய்வேட்டை ஐந்து பேர் ஆய்வு செய்தார்கள். அன்று ஐந்து நாற்காலிகளைப் போட்டிருந்தார்கள்.

ஒரு நாற்காலியில் மட்டும் மாலை போட்டு வைத்திருந்தோம். பி.எச்.டி. ஆய்வை அவருக்குத்தான் நான் அர்ப்பணம் செய்திருந்தேன்.

பல ஆசிரியர்கள் மறைந்தாலும், அவர்களுடைய நினைவுகள் மறைவதில்லை. அதுபோன்ற ஆசிரியர்களை நம் நாட்டில் பார்ப்பது அரிதாக இருக்கிறது. கல்வி வணிகமாகி விட்டது.

தகுதியற்ற நிறுவனங்கள் தகுதியற்ற மாணவர்களை உருவாக்குகின்றன. எனக்கு கல்வி கற்பித்த மிகச்சிறந்த ஆசிரியர்கள், என் மகன்களுக்குக் கிடைக்கவில்லை.

You might also like