இட ஒதுக்கீட்டை உண்மையில் நிரப்புகிறவர்கள் யார்?

வித்தியாசமாகத் தான் இருக்கிறது.

நீதிக்கட்சி ஆட்சிக்காலத்திலேயே இட ஒதுக்கீட்டுக் குரலை முதலில் எழுப்பிய தமிழ்நாட்டில் தற்போது சத்தமே இல்லாமல் இட ஒதுக்கீட்டை உண்மையிலேயே அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் யார் தெரியுமா?

சந்தேகமே இல்லாமல் வட இந்தியாவிலிருந்து இங்கு வந்து குடியேறியிருக்கிற தொழிலாளர்கள் தான்.

சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் காலை துவங்கி இரவு வரை வந்திறங்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களைப் பார்த்தால் பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கும்.

இவ்வளவு எண்ணிக்கையில் வந்திறங்குகிறவர்கள் எங்கு செல்கிறார்கள்? எங்கு பணி புரிவார்கள்? எங்கே குடியேறுவார்கள்? – என்கிற கேள்விகள் இயல்பாக எழலாம்.

இந்தியா முழுக்கப் பிழைப்பு தேடி அல்லது வேலை வாய்ப்புக்காக மாநிலம் விட்டு மாநிலம் செல்கிறவர்கள் இருந்து கொண்டு தானிருந்தார்கள். அதோடு வெளிநாடுகளுக்குப் பிழைக்கப் போனவர்களும் இருக்கிறார்கள்.

இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்குத் தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்க்கப் போனவர்கள் அந்தந்த நாடுகளின் பொருளாதாரத்திற்கு வளம் சேர்த்திருக்கிறார்கள்.

டெல்லிக்கு, மும்பைக்கு என்று பல பகுதிகளுக்குக் கடந்த ஐம்பதாண்டு காலத்தில் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். மும்பையில் தாராவி போன்ற தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் உருவாகியிருப்பதையும் சொல்ல வேண்டும்.

தமிழகத்திலும் பல்வேறு தொழில்களுக்காக வட மாநிலத்தவர் வந்திருக்கிறார்கள். மராத்தியர்கள், சௌராஷ்டிரர்கள், குஜராத்திகள் என்று பல மாநிலத்தவர்களும் இங்கு வந்திருக்கிறார்கள்.

அவர்களுக்காக சென்னையில் சௌகார்பேட்டை பகுதியே உருவாகி இருக்கிறது. பாரிமுனை போன்ற பகுதிகளில் பல்வேறு வணிகத்தைத் தீர்மானிக்கிறவர்களாக அவர்கள் தான் இருக்கிறார்கள்.

ஆனால் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வந்து குடியேறிய வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை பிரமிக்க வைக்கிறது. அதிர்ச்சி அடையவும் வைக்கிறது.

வட மாநிலங்களில் கிராமப் புறங்களில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, சாதிய இழிவுகள், போதுமான கல்வியறிவு இல்லாத தன்மை – எல்லாமே அங்குள்ள இளைஞர்களைத் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களைத் தேடி இடம் பெயர வைத்திருக்கிறது.

தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருந்த பல தொழில் நகரங்களுக்கு நிறையத் தொழிலாளர்கள் தேவைப் பட்டார்கள்.

அப்போது குறைந்த கூலி, அதிக  வேலை நேரம் என்று நம்மூர் முதலாளிகளின் எதிர்பார்ப்புக்கேற்ற படி இருந்தவர்கள் வட மாநிலத் தொழிலாளர்கள் தான்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களை விட, இவர்களைப் பல்வேறு பணிகளில் அமர்த்தியவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவன முதலாளிகள் தான்.

தங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றிய வட மாநிலத் தொழிலாளர்களை தங்களுடைய தேவைக்கேற்றபடி அவர்களால் நடத்த முடிந்தது.

பணியில் அமர்த்தப்பட்ட தொழிலாளர்களும் தங்கள் மாநிலத்தை விட, அதிகமான ஊதியத்தை இங்கு பெற முடிந்தது.

சாதீயம் சார்ந்த எந்தப் பாகுபாடுகளும் அவர்கள் மீது காட்டப்படவில்லை. பொருளாதார நிலையில் அவர்களால் மேம்பட முடிந்தது.

இதைத் தங்கள் மாநிலங்களில் உள்ள சொந்தங்களுக்குத் தெரியப்படுத்தினார்கள். விளைவு – ஏராளமான தொழிலாளர்கள் தமிழ்நாட்டை நோக்கி வரத் தொடங்கினார்கள். அவர்கள் மொத்தமாக அழைத்து வர இடைத் தரகர்கள் உருவானார்கள்.

சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, நெல்லை, நாகர்கோவில் வரை வட மாநிலத் தொழிலாளர்கள் குவிய ஆரம்பித்தார்கள்.

ஹோட்டல்கள் முதல் சலூன்கள், கட்டுமானத் தொழில் என்று எங்கும் அவர்கள் மயம்.

அவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் படிப்படியாகக் கூடிக் கொண்டே போனது. ஒன்றே கால் கோடிக்கு மேல் வட மாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

கொரோனா அலை முதல்முறையாகப் பரவ ஆரம்பித்ததும் பீதியில் தமிழ்நாட்டுக்கு வந்த பல லட்சம் வட மாநிலத் தொழிலாளர்கள் அவசரமாகக் கிளம்பிப் போனார்கள்.

இதனால் அவர்களின் உழைப்பைச் சார்ந்திருந்த நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. வட மாநிலங்களுடன் இருந்த இணைப்புச் சங்கிலி அறுபட்டது. இரண்டாவது முறை கொரோனா அலை பரவிய போதும் இதே நிலை.

கொரோனாப் பரவல் நின்ற பிறகு மறுபடியும் பல தொழில்நிறுவனங்கள் இயல்பான நிலைக்குத் திரும்பச் சில காலம் பிடித்தது. மறுபடியும் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்தார்கள் வட மாநிலத் தொழிலாளர்கள்.

இன்று வரை தினமும் பல்லாயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் திரளான வருகையை, அவர்கள் தமிழ்நாட்டில் நிரப்பிக் கொண்டிருக்கும் உழைப்பின் வெற்றிடத்தை மாநில அரசும், இங்குள்ள அரசியல் இயக்கங்களும் சரிவர உணர்ந்திருக்கின்றனவா?

குறிப்பிட்ட சில இயக்கங்கள் மட்டுமே இப்படிப்பபட்ட சூழல் பற்றிய ஆதங்கத்தையோ, எதிர்ப்பையோ வெளிக்காட்டி இருக்கின்றன.

உடல்சார் உழைப்பில் மட்டுமல்ல, மத்திய அரசின் வேலைகளிலும், ரயில்வே பணிகளிலும், வங்கிப்பணிகளிலும் வட மாநிலத்தவர்க்கே முன்னுரிமை கிடைக்கிறது.

தமிழ்மொழியைக் கூடக் கற்றதாகப் போலிச் சான்றிதழ் பெற்று வேலைகளில் சேர்கிறவர்களும் இருக்கிறார்கள். இது தொடர்பான ஆதாரங்கள் அவ்வப்போது ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்திமொழியை வலிந்து இங்கு திணிக்கிற போது, அதற்கு எதிராகப் போராட்டம் நடத்தத் தெரிந்த நமக்கு, தமிழ்நாடு எங்கும் வட மாநிலத்தவரின் குடியேற்றங்கள் அதிகப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் தேவைப்படும் ஒன்றிய அரசின் வேலைகளில் சேர தமிழ்மொழி அவசியம் தெரிந்திருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் சொல்லப்பட்டாலும், இங்கு நடந்து கொண்டிருப்பது என்ன?

மத்திய அரசுப்பணிகளில் சேர தமிழ்நாட்டு இளைஞர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று சொல்கிறார் தமிழக இளைஞர்நலத்துறை அமைச்சர்.

உண்மையில் சேர முயற்சிக்கிறவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? ராணுவத்தில் சேர்வதற்கு எத்தனை இளைஞர்கள் கூட்டமாய் முண்டியடிக்கிறார்கள்? எத்தனை தேர்வுகளை எழுதுகிறார்கள்?

தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் தற்கொலை செய்து கொண்டவர்களைப் பற்றி ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழ்நாடும் இடம் பெற்றிருக்கிறது.

இன்னும் கொரோனா காலத்திற்குப் பிந்தியப் பொருளாதாரத் தேக்க காலகட்டத்தில் தனியார் நிறுவனங்களில் வேலைகளை இழந்தவர்கள், சிறு, குறு தொழில்களைக் கைவிட்டவர்கள் என்று எவ்வளவு பேர் வாழ்வின் விளிம்புக்குச் சென்றிருக்கிறார்கள்?

விவசாயத்திலும் வருமானம் வராமல், பெரு நகர்ப்புறங்களுக்கு வேலை தேடி வருகிற தமிழர்கள் ஏற்கனவே வடபுலத்திலிருந்து வந்திறங்குகிற பல மொழிக்காரர்களுடன் போட்டி போட வேண்டியிருக்கிறது.

தங்களது சொந்த மாநிலத்திலேயே அகதிகளைப் போல அலைய நேரிடுகிறது. வெளி மாநிலத்தவர்கள் வந்து அடர்ந்து கொண்டே போகும் மாநிலத்தில் சொந்த மாநிலத்தவர்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கும் கதி என்ன?

ரேஷன் கடைகள் மூலம் கிடைக்கும் இலவசங்களும், அம்மா உணவகங்களும் கூட வட மாநிலத் தொழிலாளர்களை ஈர்க்கும் அம்சங்களாகி விட்டன.

ஏறத்தாழ ஒன்றே கால் கோடிப் பேருக்கு அதிகமானவர்கள் தமிழ்நாட்டில் குறுகிய காலத்தில் வந்து சேர்ந்துவிட்ட நிலையில், அவர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்குவதற்கான முயற்சியிலும் இருக்கிறது ஒன்றிய அரசு.

இதையடுத்து தமிழ்நாடு அரசு தமிழர்களைத் தனித்து இனம்காண மக்கள் ஐ.டி. என்கிற அடையாள அட்டையைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறது.

இப்படியே வட மாநிலத் தொழிலாளர்களின் வருகை நீடித்துக் கொண்டே போனால்- தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களின் எதிர்காலம் என்னவாகும்?

வந்தாரை வாழ வைத்த தமிழர்கள் தங்களை வாழ வைக்க எங்கே போவார்கள்? டாஸ்மாக்கிலும், இலவசங்களிலும் தங்களுடைய உழைக்கும் திறனை இழந்து கொண்டிருக்கிறார்களா நம் தமிழர்கள்?

எவ்வளவு நுட்பமான உழைப்பு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்குச் சாத்தியப்பட்டிருந்தது என்பதற்கான வரலாற்று அடையாளங்களாக கீழடி துவங்கி தஞ்சைக் கோபுரம், கல்லணை வரை எத்தனையோ இன்னும் இருக்கின்றன.

வளமான கடந்த காலத்தைக் கொண்டிருந்த தமிழர்கள் நிகழ்காலத்தில் தங்களிடம் இயல்பாக இருந்த உழைப்பை நழுவ விட்டுக் கொண்டிருக்கிறார்களா?

‘மியூசிகல் சேர்’ என்று ஒரு போட்டி நடக்குமே? பார்த்திருக்கிறீர்களா? நாற்காலிகளுக்காக ஓடிக் கொண்டே இருப்பார்கள்.

ஒவ்வொரு நாற்காலியும் யாராலோ நிரப்பப் பட்டுக் கொண்டிருக்கும்.

நாற்காலியில் உட்கார இடம் கிடைக்காமல் மூச்சிரைக்க ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறார்களா எம் தமிழர்கள்?

மனம் கனக்கிறது.

– மணா

You might also like