பழனி கோயில் குடமுழுக்கு; தமிழில் மந்திரம்!

-அமைச்சர் சேகர்பாபு பேட்டி

புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் வரும் 27-ம் தேதி (வெள்ளிக்கிழமை) குடமுழுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று  பழனிக்கு வந்தார். மலை அடிவாரத்தில் இருந்து படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு நடந்து சென்று குடமுழுக்கு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதற்கிடையே உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணியும் மலைக்கோவிலுக்கு வந்தார்.

இருவரும் இணைந்து மலைக்கோயிலில் யாகசாலை அமைக்கப்படும் இடங்கள், தங்கக் கோபுரம், பக்தர்கள் தங்குமிடம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

இருவரும் தரிசனம் செய்த பின்னர் அமைச்சர் சேகர்பாபு, செய்தியாளர்களிடம் பேசினார்.

“குடமுழுக்கு வேள்விக்காக 90 குண்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் முருகப்பெருமானுக்கு மட்டும் 33 குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குடமுழுக்கைக் காண 6 ஆயிரம் பேருக்கு வி.ஐ.பி. பாஸ் வழங்கப்பட உள்ளது. பக்தர்களின் நலனுக்காக 4 தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன எனக் கூறினார்.

அதோடு, குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஒலிக்கும் எனவும், குடமுழுக்கைக்  காண மலை அடிவாரப் பகுதியில் 16 இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட உள்ளன எனவும் அமைச்சர் கூறினார்.

You might also like