சு. உமாமகேஸ்வரி
சமகாலக் கல்விச் சிந்தனைகள்:
பள்ளிக்கூடத்தில் ஒரே மாதிரி உட்காரும் கொடுமையில் இருந்தும் கட்டுப்பாட்டு பயங்கரத்திலிருந்தும் தப்பி உடனடியாக ஒளிய ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சுரங்கப்பாதை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என்று அமெரிக்காவின் கல்விச் சிந்தனையாளர் ஜான் ஹோல்ட் எழுதிச் சென்றுள்ளார்.
கடந்த நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த வரிகளுக்கு இன்னும் உயிர் இருக்கிறது என்பதை நமது இன்றைய வகுப்பறைகள் சொல்லும்.
அமெரிக்கா மட்டுமல்ல உலகெங்கிலும் பரவலாக பள்ளிகள் இந்த வரையறைக்குள்தான் அடங்குகின்றன.
தமிழகத்தின் மிக மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன், ஓர் உரையாடலின் போது என்னிடம் கூறியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
“ஒரு முறை பள்ளிகளை பார்வையிட இங்கிலாந்து சென்றிருந்தேன். அப்பள்ளி மிகவும் டிசிப்ளீனான பள்ளியும் கூட.
அங்கு ஒரே ஒரு குழந்தை மட்டும் தனியாக மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது நான் அந்த குழந்தையிடம் சென்று, ஏம்மா…. பள்ளிக்குள் பாடம் நடந்து கொண்டிருக்கிறது, நீ வகுப்பிற்குள் செல்லவில்லையா? என்று கேட்டேன்”.
அதற்கு அக்குழந்தை, “அங்கு எனக்கான பாடம் (கணக்கு) இல்லை” என்றது. “ஆம் எனக்கு கணக்கு பிடிக்காது, போர் அடிக்குது…. என்றது.
அப்போது நான், கணக்கு பாடம் ஈகுவேஷன்ஸ் எல்லாம் உனக்கு தெரிந்தால் தானே மேல் படிப்பில் கணக்கு போட முடியும் என்றேன்.
அதற்கு குழந்தை “எனக்கு Basic Math’s எல்லாம் தெரியும், பெரிய பெரிய ஃபார்முலா வெல்லாம் படிச்சு நான் இன்ஜினியரிங் கிளாஸ் படிக்கப்போறது கிடையாது”
அப்போது ஐரோப்பா வரை டிராம் இருந்தது. அதைக் காட்டி இதில் நான் ஐரோப்பா வரை டிராமில் பயணம் செய்வேன், அங்கு வருபவர்களுக்கு ஊர் சுற்றிக் காமித்து கைடாக (Guide) இருப்பேன்… ஜாலியாக இருக்கும் என்று கூறியது” என்றார்.
இது நடந்து ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கும் அதிகமாக இருக்கும். ஒரு குழந்தை தனக்குப் பிடிக்கும் வகுப்பறையில் அமர்ந்து பாடம் கற்றுக் கொள்ளவும், விருப்பமில்லாத வகுப்புகளை விட்டு வெளியேறிச் செல்லவும் அந்த நாட்டு குழந்தைக்கு சுதந்திரம் இருந்துள்ளது.
இதைத்தான் ஜான் ஹோல்ட் கூறுகிறார். ஆனால் எல்லா நாட்டுக் குழந்தைகளுக்கும் அந்த சுதந்திரம் இருக்கிறதா என்பது மிகப்பெரிய கேள்வி.
உதாரணத்திற்கு, தற்போதைய நமது தமிழ்நாட்டின் வகுப்பறைகளைப் பற்றி ஆய்வு செய்தால் நம்மால் பலகோணங்களில் எதார்த்தத்தைக் காண முடியும்.
கூடுதலான கட்டுப்பாட்டு சட்டதிட்ட எல்லைகளுக்குள்ளேயேதான் வகுப்பறைகள் இயங்குகின்றன.
காலை வழிபாட்டுக்கூட்ட நேரம் முதல் மதிய உணவு இடைவேளை, காலை, மாலை இரண்டு வேளைகளிலும் கழிப்பிடம் செல்வதற்கான இடைவேளைகள் என்று திட்டமிடப்பட்ட பள்ளிமுறைகளே குழந்தைகளைக் கட்டுப்படுத்துகின்றன.
பெரிய வகுப்பு எனில் காலை மாலை சிறப்பு வகுப்புகள், தேர்வு முறைகள், தேர்ச்சி சதவீதம் அதைத் தொடர்ந்து உயர்கல்வி, வேலைவாய்ப்பு என அழுத்தமான வாழ்க்கை முறையையே குழந்தைகள் சந்திக்கின்றனர்.
இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்கும் பொருந்தும்.
எந்த வகுப்பறையும் குழந்தைகள் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளைத் தேர்வு செய்ய அனுமதிப்பதில்லை என்பதுதான் சுடுகின்ற உண்மை.
கருத்துச் சுதந்திரமே இல்லாத நிலையில் விருப்ப வகுப்புகளைக் குழந்தைகள் எவ்வாறு தேர்வு செய்ய இயலும்?
அரசு கொண்டுவரும் திட்டங்களிலிருந்து கல்வித் துறை தரும் தொடர் சுற்றறிக்கைகள், ஆசிரியர்கள் போடும் டைம் டேபிள் வரை மற்றவர் விருப்பத்தையே பின்பற்ற நிர்ப்பந்திக்கப்படும் குழந்தைகள் சலிப்படைகின்றனர்.
ஒரு குழந்தை தனக்கு அறிவியல் வகுப்பையோ ஆங்கில வகுப்பையோ கவனிக்கப் பிடிக்கவில்லை அல்லது கணக்குப் பாடத்தில் ஆர்வம் இல்லை என்றால், தைரியமாக வகுப்பின் பாட ஆசிரியர்களிடமோ பள்ளி நிர்வாகத்திடமோ சொல்லிவிட இயலுமா?
பிடித்த நேரத்தில் விளையாடவோ சாப்பிடவோ தூங்கவோ அவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா?
பள்ளிகளின் ஒழுக்க வரையறைக்குள் இவ்வாறு பேசுவதற்கே தண்டனைகள் உண்டு.
ஒரு குழந்தையின் கற்றல் திறன் இங்கு பரிசோதனை முறையில் கணக்கிடப்படும்போது தான் இந்த வகுப்பறை சுதந்திரம் சாத்தியப்படும்.
ஆனால், புள்ளி விவரக் கணக்குகளின் அடிப்படையில் கற்றல் திறன் கணக்கிடப்படுவதால் குழந்தைகளுக்கான சுதந்திரம் பூஜ்ஜியமே .
இவற்றில் மாற்றங்கள் வரவேண்டும். அதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் கல்வி குறித்து சிந்திப்பவர்களும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.
இங்கு குழந்தைகளை மூன்று வயதுக்கு முன்னரே முன்மழலையர் வகுப்பில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்து விடும் பெற்றோர்கள், தங்கள் முன் முடிவு திட்டத்தில் குழந்தைகளின் மீது தங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் மொத்தமாக வைத்து, அதை நோக்கியே குழந்தைகளை நகர்த்தும் வாழ்க்கையை மேற்கொள்கின்றனர்.
அதிகபட்ச நோக்கம் தங்கள் குழந்தைகள் நல்ல வருமானம் ஈட்டும் ஒரு வேலையைப் பெற்று விட வைப்பது தான்.
அதை மையமாக வைத்துதான் கல்வி கொடுக்கும் பள்ளிகளும் கல்லூரிகளும் தங்களை வடிவமைைத்துக் கொள்கின்றன.
இந்தப் பயணத்தில் எந்த சூழ்நிலையிலும் குழந்தைகளுக்கான உரிமைகளோ சுதந்திரமோ மகிழ்ச்சியான கற்றல் சூழலோ உறுதிசெய்யப்படுகிறதா என்பதை நாம் அனைவரும் நம்மையேக், கேட்டுக் கொள்ள வேண்டியவை.
இவற்றை எல்லாம் நமக்காக உருவாக்கும் மாநிலக் கல்விக் கொள்கையிலாவது விவாதிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கான சுதந்திரமான கற்றல் சூழலைத் தரும் வகுப்பறைகளுக்கு இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலாவது விதை போட்டால் குழந்தைகள் உலகம் அழகாகும்.