ஓடிடி தளங்களின் லாபக் கணக்கு!

வர்த்தகமென்று வந்துவிட்டால் சிறிய லாபங்களைவிட பெரிய லாபங்களுக்கே முக்கியத்துவம் தரப்படும்.

சிலநேரங்களில் சிறியவற்றுக்குத் தரப்படும் அதீத முக்கியத்துவத்தின் பின்னணியில் பெரியவற்றைக் கவர்ந்திழுக்கும் தந்திரம் இருக்கும்.

திரைப்படத் துறையைப் பொறுத்தவரை ஓடிடி தளங்கள் பெரிய நட்சத்திரங்களின், தயாரிப்பு நிறுவனங்களின், ஏற்கனவே புகழொளி படர்ந்திருக்கும் படைப்பாளிகளின் படைப்புகளுக்கே முக்கியத்துவம் தருவது அதையே உணர்த்துகிறது.

ஏனென்றால், விளம்பர வெளியில் இருத்தப்படாத பல படைப்புகளைக் கவனத்திற்குக் கொண்டு வந்த வகையிலேயே ஓடிடி தளங்கள் இந்தியாவில் தங்களது வெற்றிக்கணக்கைத் தொடங்கின.

கடந்த வாரம் 2023-ல் தாங்கள் வெளியிடும் திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டது நெட்பிளிக்ஸ்; அவற்றில் அதிகமும் பெரிய பட்ஜெட் படங்களே நிரம்பியிருந்ததே இது பற்றிப் பேசக் காரணம்.

ஓடிடிகளின் நோக்கம்!

‘ஓவர் தி டாப்’ (Over The Top) என்பதன் சுருக்கம் தான் ஓடிடி. யூடியூப் தளங்களையும் கேபிள் நெட்வொர்க்கையும் தாண்டி, அதற்கு அப்பாலிருக்கும் படைப்பு மேம்பாட்டைக் கொண்டிருப்பது என்று இதற்கு பொருள் கொள்ளலாம்.

அப்படித்தான் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் மூலமாக இந்தியாவில் ‘பிக்பிளிக்ஸ்’ (BIGFlix) அறிமுகப்படுத்தப்பட்டது.

2010இல் வெளியான நெக்ஸ்ஜிடிவி (nexGTv) முதலாவது ஓடிடி மொபைல் செயலி எனும் பெருமையைப் பெற்றது.

2013, 2014இல் இதுதான் மொபைல் வழியே ஐபிஎல் போட்டிகளைக் காணும் வாய்ப்பைத் தந்தது.

அதற்கடுத்த ஆண்டே, அந்த உரிமையை ஹாட்ஸ்டார் கைப்பற்றியது.

2013இல்தான் ஜீ குழுமம் சார்பில் டிட்டோடிவி, சோனிலிவ் இரண்டும் இந்தியாவில் தொடங்கப்பட்டன. இந்த டிட்டோடிவி பின்னர் ஜீ5 உடன் இணைக்கப்பட்டது.

அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் ஆகியன 2015க்கு பிறகு இந்தியாவில் தங்களது கணக்கைத் தொடங்கின. 2017இல் ‘சன் நெக்ஸ்ட்’டை தொடங்கியது சன் நெட்வொர்க்.

புதிதாக ஒரு நுட்பம் வந்து சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகே பெரியளவில் மக்களைச் சென்றடையும்.

ஆனால், 2018-19 வாக்கில் ஒருசில பேருக்கே தெரிந்திருந்த ஓடிடி தளங்கள் அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தின.

அதற்கு கோவிட் -19 பரவலும் அப்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்குமே முக்கியக் காரணம்.

இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ’டப்’ செய்யப்பட்டு அதிகமான திரைப்படங்கள், தொடர்களை ஓடிடி தளங்கள் வெளியிட்டன. ஆங்கிலத்தில் இருந்தும் பல படைப்புகள் இந்திய மொழிகளில் ஆக்கம் செய்யப்பட்டன.

ஆனால், முழுக்க பிராந்திய மொழிக்கென்று தொடங்கப்பட்ட ஓடிடி தளம் எனும் சிறப்பினை பெங்காலி படைப்புகளை வெளியிட்ட ‘ஹோய்சோய்’(Hoichoi) பெற்றது. முதலில் தெலுங்கில் தொடங்கப்பட்ட ஆஹா தற்போது தமிழிலும் படைப்புகளை வெளியிடுகிறது.

இன்று இந்தியாவில் மட்டும் 46 ஓடிடி தளங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவற்றின் மூலமாக கிடைக்கும் வருமானம் சில ஆயிரம் கோடி ரூபாய்கள் என்றும் கூறப்படுகிறது.

சிறியதில் இருந்து பெரியது!

இதுவரை பேசப்படாத கதைகளை, கருக்களைச் சொல்வதற்கு ஓடிடி தளங்கள் உதவுகின்றன; இந்த எண்ணம்தான், அவை மாற்று திரைப்படங்களை, காட்சிப் படைப்புகளை விரும்பும் ரசிகர்களுக்கு வரமாகத் தோன்றின.

கோவிட்-19 காலகட்டத்தில் திரையரங்குகளுக்குச் செல்ல முடியாது; தொலைக்காட்சித் தொடர்களோ, திரைப்படங்களோ படப்பிடிப்பினை நடத்த வாய்ப்பில்லை என்றானபோது சொர்க்கத்தைக் காட்டின ஓடிடி தளங்கள்.

மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தியில் வெளியாகியிருந்த எத்தனையோ நல்ல திரைப்படங்களை, வெப்சீரிஸ்களை தமிழில் காண வைத்தன. அந்த அனுபவமே இன்று பலரை ஓடிடி தளங்களின் சந்தாதாரர்கள் ஆக்கியுள்ளது.

தற்போது அதெல்லாமே பழங்கதை. ஏனென்றால், மெல்ல மெல்ல தங்களுக்கான லாபத்தை நோக்கி ஓடிடி தளங்கள் நகரத் தொடங்கிவிட்டன.

2023ஆம் ஆண்டு தாங்கள் வெளியிடவிருக்கும் புதிய தமிழ் படங்களின் பட்டியலைக் கடந்த வாரம் வெளியிட்டுள்ளது நெட்பிளிக்ஸ்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவிருக்கும் ‘அஜித்குமார் 62’ உட்பட 6 படங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் தவிர மற்றனைத்தும் தயாரிப்பில் இருப்பவை.

இப்பட்டியலில் உள்ள 17 படங்களில் ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ், மாமன்னன், தங்கலான், ஜப்பான், வாத்தி, இறைவன் அனைத்துமே முன்னணி நடிகர்களின், புகழ்பெற்ற இயக்குனர்களின் படைப்புகள். இதேபோல தெலுங்கு படங்களின் பட்டியலும் அமைந்துள்ளது.

மலையாளம், கன்னடம், இந்தியிலும் கூட இந்த நிலைமை மாறுபட வாய்ப்பில்லை.

தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் வாரிசு, துணிவு, கனெக்ட், டிரைவர் ஜமுனா போன்றவையும் கூட அடுத்தடுத்து பல்வேறு ஓடிடிகளில் வெளியாகும்.

இவையனைத்துமே சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகளால், இயக்குனர்கள் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களால், முன்னணி தயாரிப்பு நிறுவனங்களால் மட்டுமே அடையாளப்படுத்தப்படுபவை.

இந்த போக்கு சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை சாட்டிலைட் உரிமையை ஒரு திரைப்படம் பெறுவதற்குத் தொலைக்காட்சி நிறுவனங்கள் நிர்ணயித்த தகுதிகளுக்கு பவுடர் பூசி, தலை வாரி அலங்கரிக்கும் வகையறாதான்.

குறைந்த பட்ஜெட்டில் தயாரான படங்களின் மீது ரசிகர்களின் கவனக் குவிப்பை ஏற்படுத்திவிட்டு, அதன் மூலமாக கிடைக்கும் நற்பெயரைப் பயன்படுத்தி பெரிய பட்ஜெட் படங்களின் ‘ஸ்ட்ரீமிங்’ உரிமையைக் கைப்பற்றுவது.

லாபம் முக்கியமே!

ஒரு ஓடிடி தளம் கண்டிப்பாக சின்ன பட்ஜெட் படங்களை வெளியிட்டுத்தான் ஆக வேண்டுமா? நிச்சயமாக இல்லை. ஆனால், அப்படியொரு எண்ணத்தை ஆதாரமாகக் கொண்டே தங்கள் காலடியைப் பதித்தன என்பதை மறுக்க முடியாது.

மிக முக்கியமாக, கொஞ்சம் வித்தியாசமான கதை சொல்லலை முன்வைக்கிற படங்களை, சீரிஸ்களை இந்த ஓடிடி தளங்கள் தயாரித்தன அல்லது வாங்கி வெளியிட்டன.

பெரும் பட்ஜெட்டில் வெளியான படங்களை வாங்கப் பெரும்தொகை செலவழிக்கப்பட்டால், அந்த விஷயம் நடைபெறாமலே போய்விடும் அல்லது அருகிவிடும். அது நிச்சயமாகப் புதிய படைப்பாளிகளுக்கு ஏமாற்றம் தருவதாகிவிடும்.

அது மட்டுமல்லாமல், திரையரங்குகளுக்கு மாற்றாக ஓடிடி தளங்கள் விஸ்வரூபமெடுக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

பெரிய பட்ஜெட் படங்களை மட்டுமே திரையரங்கு சென்று ரசிக்க வாய்ப்பிருப்பதாகவும் கருத்துகள் பெருகி வருகின்றன.

இந்தச் சூழலில், சின்ன பட்ஜெட் தயாரிப்புகள் வெளியாவதற்கான வழிகள் அடைக்கப்பட்டால் என்னதான் செய்வது?

சின்ன பட்ஜெட் படைப்புகளுக்கு நடுவே பெரும் பிரமாண்டமான திரைப்படம் என்று அளவுகோல் வைத்துக்கொள்வதே தொடர்ச்சியாக ஒரு வர்த்தகத்தை மேற்கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும்.

லாபக் கணக்கு முக்கியமே. அதை நோக்கித்தான் எந்தவொரு மனிதனும் ஓடுவான். அதையும் மீறி, பல மனிதர்கள் நம்மோடு சேர்ந்து ஓடிவர வேண்டும் என்று நினைப்பதே தற்போதைய தேவை.

அனைத்துக்கும் மேலே, வாழ்க்கை என்பது 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் அல்ல; உடனடியாக ஓடி முடித்து மூச்சு வாங்குவதற்கு.

அதுவொரு மாராத்தான் ஓட்டம்; தொடர்ச்சியாக ஓடவும் வெற்றி பெறவும் பல்வேறுபட்ட போட்டியாளர்கள் தேவை. ஓடிடி தளங்களின் வர்த்தகத்திற்கும் மாராத்தான் களத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை.

– உதய் பாடகலிங்கம்

You might also like