ஒரு ஆணுக்கு எப்படிப்பட்ட பெண்ணைப் பிடிக்கும் அல்லது ஒரு பெண்ணுக்கு எப்படிப்பட்ட ஆணைப் பிடிக்கும்? அந்த உறவுக்குப் பெயர் காதலா அல்லது அதையும் தாண்டிய ஏதாவது ஒன்று இருக்கிறதா? இப்படி யோசிக்கத் தொடங்கினால், அதற்கு முடிவே கிடையாது.
அப்படியொரு யோசனைக்கு உள்ளாக்குகிறது ‘எங்கேயும் எப்போதும்’ தந்த இயக்குனர் சரவணனின் ‘ராங்கி’. த்ரிஷா முதன்மை பாத்திரத்தில் இடம்பெற்றிருக்கும் இப்படத்தில் அனஸ்வரா ராஜன், வகார் கான், லிஸி ஆண்டனி, கோபி கண்ணதாசன், ஜான் மகேந்திரன் உட்படப் பலரும் நடித்திருக்கின்றனர்.
வித்தியாசமான திரைக்கதை ‘ட்ரீட்மெண்ட்’!
ஒரு இன்ஸ்பெக்டரையும் சில போலீஸ்காரர்களையும் சுட்டுக்கொன்ற இரண்டு பேரை சுற்றி வளைக்கின்றனர் சிபிசிஐடி போலீசார். அப்போது, பெண் பத்திரிகையாளர் ஒருவரைக் காப்பாற்றுவதற்காகவே அவர்கள் அப்படிச் செய்தது தெரிய வருகிறது.
அந்த பத்திரிகையாளரை சிபிசிஐடி போலீசார் கைது செய்யப் போகின்றனர்; அந்த நேரத்தில், சிபிஐ அதிகாரிகள் அவரைக் கூட்டிச் செல்கின்றனர்.
அந்த பத்திரிகையாளரின் பெயர் தையல் நாயகி (த்ரிஷா). பத்திரிகைத் தொழிலில் இருந்தாலும், அதற்குரிய தர்மங்களைக் கடைப்பிடிக்க முடியாத வருத்தம் அவருக்குள் இருக்கிறது.
ஒரே வீட்டில் இருந்தாலும், தையல் நாயகியின் சகோதரர், அவரது மனைவி, மகள் சுஷ்மிதா (அனஸ்வரா ராஜன்) மூவரும் தனியாக கீழ்தளத்தில் வாழ்கின்றனர்.
ஒருநாள், சுஷ்மிதாவின் நிர்வாண வீடியோவொன்று அவரது தந்தையின் மொபைலுக்கு வருகிறது. மகளிடம் எப்படி விசாரிப்பது என்று தலையைப் பிய்த்துக் கொள்பவர், தனக்குப் பிடிக்காத தங்கையிடம் சென்று ஆலோசனை கேட்கிறார்.
அது பற்றி தையல் நாயகி விசாரிக்கத் தொடங்க, ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட் மூலமாக சுஷ்மிதா அறிமுகமானதாகச் சொல்கிறார் சம்பந்தப்பட்ட வாலிபர். ஆனால், அந்த வீடியோவில் நிர்வாணமாக வருவது சுஷ்மிதா அல்ல.
அந்த உண்மையைப் பின்தொடர்ந்து செல்லும்போது, சுஷ்மிதா பெயரில் அவருடன் படிக்கும் ஒரு மாணவி உருவாக்கிய ஃபேக் ஐடி அது என்பது தெரிய வருகிறது. அதில் சுஷ்மிதாவின் புகைப்படமே இடம்பெற்றிருக்கிறது.
அம்மாணவியோடு சாட் செய்த ஒவ்வொருவரையும் ஓரிடத்திற்கு வரவழைத்து, சுஷ்மிதாவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்ற உண்மையை விளக்குகிறார் தையல் நாயகி. ஒரேயொரு நபர் மட்டும் அதில் விடுபடுகிறார்.
அந்த நபரின் பெயர் ஆலிம் (வகார் கான்). துனிஷியா நாட்டில் தேடப்படும் பயங்கரவாத கும்பலைச் சேர்ந்தவர்.
சுஷ்மிதா ஃபேஸ்புக் ஐடி மூலம் ஆலிம் உடன் உரையாடத் தொடங்கும் தையல் நாயகி, ஒருகட்டத்தில் அந்த பதின்பருவத்து வாலிபனின் மனதிலுள்ள காதலுணர்வை அறிகிறார். வெறுமனே சுஷ்மிதாவின் புகைப்படத்தைக் கண்டு அவர் மனம் அமைதியடைவதை உணர்ந்து வியப்படைகிறார். தொடர்ந்து உரையாடுகிறார்.
அதன் தொடர்ச்சியாகவே சிபிஐ பிடியில் தையல் நாயகியும் சுஷ்மிதாவும் சிக்குகின்றனர். அதன்பின்னர் என்னவானது என்று சொல்கிறது ‘ராங்கி’. முழுக்கவே இது தையல் நாயகி என்ற நெஞ்சுரமும் நுட்பமான சிந்தனையும் கொண்ட பெண்ணின் டயரிக்குறிப்பாகவே வடிக்கப்பட்டிருக்கிறது.
எங்கோ தொடங்கி எங்கேயோ முடிவடைந்தாலும், வித்தியாசமான திரைக்கதை ட்ரீட்மெண்ட் ரசிக்கச் செய்கிறது. இப்படியொரு கதையில் மூன்றாம் உலக நாடுகளின் வளங்களைக் கொள்ளையடிக்கப் பெருங்கும்பல் காத்துக் கிடப்பதை உரக்கப் பேசுவது ஆச்சர்யமான விஷயம்.
இன்னொரு ‘அரிமாநம்பி’!
விக்ரம்பிரபுவின் ‘அரிமாநம்பி’ பார்த்தவர்களுக்கு, நிச்சயமாக ‘ராங்கி’ பிடிக்கும். அதாகப்பட்டது, தொழில்நுட்ப வளர்ச்சியின் கோர முகங்களை அறியாமல் அதனுள் சிக்கிக் கொள்ளும் சாதாரண மனிதர்களை இக்கதை பிரதிபலிக்கிறது.
ஃபேஸ்புக்கில் தவறான புகைப்படம் கொண்டு உருவாக்கப்பட்ட ஐடி மூலமாக முளைக்கும் பிரச்சனை தான் மையக் கதை. ஏ.ஆர்.முருகதாஸ் இதனை எழுதியிருக்கிறார். அதேநேரத்தில், 2018-ல் வெளியான ‘ப்ரொபைல்’ எனும் ஆங்கிலப் படத்தை தழுவி இக்கதை அமைந்திருப்பதாக ஒரு பேச்சு எழுந்திருக்கிறது.
அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற பதைபதைப்பை உருவாக்கும்விதமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் சரவணன். அதேபோல, ஏ.ஆர்.முருகதாஸின் ‘துப்பாக்கி’ பார்த்த உணர்வும் எழத்தான் செய்கிறது.
சத்யாவின் பின்னணி இசை, படம் முழுக்க பரபரப்பு குறைந்துவிடாமல் காத்து நிற்கிறது. கே.ஏ.சக்திவேலின் ஒளிப்பதிவு படம் முழுக்க ஒவ்வொரு பிரேமும் பளிச்சென்று இருக்கும் வகையில் பார்த்துக் கொண்டிருக்கிறது.
எஸ்.எஸ்.மூர்த்தியின் கலை இயக்கம், ஒரு கமர்ஷியல் படத்திற்குத் தேவையான சூழலைத் திரையில் காட்ட உதவியிருக்கிறது. சுபாரக்கின் படத்தொகுப்பு சீர்மையாக கதை சொல்ல உதவியிருக்கிறது. த்ரிஷா கைதான பின்னர் வரும் காட்சிகள் அவசரகதியில் நகர்வதை மட்டும் தவிர்த்திருக்கலாம்.
தையல் நாயகியாக வரும் த்ரிஷா, நெடுநாட்களுக்குப் பிறகு ரசிக்கும்படியான ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகள், பஞ்ச் வசனங்கள் பெரிதாக இல்லாத காரணத்தால், எளிதாக அவரது பாத்திரத்தோடு ஒன்ற முடிகிறது.
லிஸி ஆண்டனி, அவரது கணவராக நடித்தவர் இருவருக்கும் ஆளுக்கொரு காட்சியில் ‘பெர்பார்மன்ஸ்’ காட்ட வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. கோபி கண்ணதாசன், ஜான் மகேந்திரன் போன்றவர்கள் வெறும் பாத்திரங்களாக மட்டுமே காட்சி தருகின்றனர். இனி இது போன்ற பல வாய்ப்புகள் அவர்களைத் தேடி வரலாம்.
மலையாளத்தில் ஒரு டஜன் படங்களில் ஹீரோயினாக நடித்துவிட்ட அனஸ்வரா ராஜன், இதில் த்ரிஷாவின் சகோதரர் மகளாக வருகிறார். இதனை ’ராங்கி’ வெளிவருவதில் அதிக கால தாமதம் என்று எடுத்துக்கொள்வதா அல்லது அனஸ்வரா வெகுவேகமாக மலையாளத் திரையுலகில் வளர்ந்து வருகிறார் என்று சொல்வதா? தெரியவில்லை.
ஆலிம் என்ற பாத்திரத்தில் நடித்துள்ள வகார் கான், த்ரிஷாவுக்கு அடுத்தபடியாக திரையில் தோன்றியிருக்கிறார். வெறுமனே காதல் என்றில்லாமல், தன்னை உயிர்ப்பிக்கும் உறவாக ஒரு பெண்ணை அவர் கருதுமிடங்கள் அனைத்தும் ‘வாவ்’ சொல்ல வைக்கின்றன. ஒரு நல்ல நடிகர் கிடைத்திருப்பதை உணரச் செய்கின்றன.
ஒரு பயங்கரவாதியாக ஆலிம் பாத்திரத்தைக் காட்டியிருந்தாலும், அதன் நோக்கில் இருந்து இவ்வுலகைப் பார்ப்பதை வெளிக்காட்டியிருப்பதுதான் ‘ராங்கி’யின் சிறப்பம்சம். அதனை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்க முடியும் என்பது வருத்தம் தரும் விஷயம்.
இது போதுமா?
ஏற்கனவே த்ரிஷா நாயகியாக நடித்த ‘கர்ஜனை’, ‘மோகினி’ வரிசையிலேயே ‘ராங்கி’ என்ற பெயரும் கவனிக்கப்பட்டது. அதுவே இப்படம் பற்றிய நல்லபிப்ராயத்தை உருவாக்கவில்லை. த்ரிஷா போலவே இப்படத்தில் நடித்த மற்ற கலைஞர்களையும் முன்னோட்ட நிகழ்ச்சிகளில் பயன்படுத்தியிருந்தால் அதனை மாற்றியிருக்க முடியும்.
ஆலிம் என்ற நபர் சுஷ்மிதாவின் முகத்தைப் பார்த்து காதல்வயப்பட்டாலும், சுஷ்மிதா என்ற பெயரில் அவருடன் உரையாடுவது தையல் நாயகிதான். அதாவது, த்ரிஷாவின் பாத்திரம் தான்.
சொல்லப்போனால், ‘ராங்கி’யில் இரு வேறு காதல்கள் இருக்கின்றன. அது வழக்கமான காதலாக இல்லாமல், வார்த்தைக்குள் அடங்காத நேசமாக உள்ளது. அதனைத் தெளிவுறச் சொல்லியிருக்கலாம்.
சிபிஐ பிடியில் தையல் நாயகி சிக்கிய இரு வார காலத்தை திரைக்கதை காண்பிப்பதில்லை. அது ‘போர்’ என்று நினைத்திருக்கலாம். அதேபோல, இக்கதைக்குள் சர்வதேச போலீசார் நுழைந்த விதமும் ஒரு ‘சர்ப்ரைஸ்’ விஷயமாகவே காட்டப்படுகிறது.
நல்ல ஆக்ஷன் த்ரில்லர் என்றபோதும், மேற்சொன்ன எல்லாம் ஒன்று சேர்ந்து தயாரிப்பு தரப்புக்கே குழப்பத்தை அதிகப்படுத்தியிருக்க வேண்டும். அதனால்தான், இப்படத்தை வெளியிடத் தயக்கம் காட்டியிருப்பதாக எண்ண வேண்டியிருக்கிறது.
வாரிசு, துணிவு வருவதற்கு இன்னும் ஒருவார காலம் இருப்பதால், அந்த இடைவெளியை நிரப்ப ‘ராங்கி’க்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது. அதற்கான தகுதியும் இருக்கிறது. அதனைத் தவறவிட்டால், இன்னும் ஒரு மாதம் கழித்து ஓடிடியில் த்ரிஷாவைப் பார்த்துதான் ரசிகர்கள் திருஷ்டி சுற்றிப் போட முடியும்!
- உதய்.பா