விஜய் கேஷூவலாக வந்தது கூட சர்ச்சையா?

விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.

வழக்கமாக தனது பட நிகழ்ச்சிகளில் கோட் – சூட் அல்லது டிப்- டாப்பான உடைகளை விஜய் அணிவது வழக்கம். ஆனால், அதற்கு நேர்மாறாக வாரிசு இசை வெளியீட்டிற்கு எளிமையாக வந்திருந்தார். இந்த நிகழ்ச்சி நேற்று தனியார் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பானது.

அதனைப் பார்த்த இசையமைப்பாளரும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைதளப் பதிவில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

”வாரிசு பட விழா தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது. தற்செயலாக ஒரு கணம் எட்டிப்பார்த்தேன். விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது.

தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரமாண்ட விழாமேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்று தோன்றியது.

அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர் வாதிடலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள்.

இதைப் பொதுவாகத்தான் சொல்கிறேன். நாம் ஒரு வேலைக்கு, நேர்முகத் தேர்வுக்கு போகும்போது ஏன் அவ்வளவு பொறுப்பாக பார்த்துப் பார்த்து உடையணிந்து செல்கிறோம்?

ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற தோற்ற வரைமுறை உண்டுதானே?

ஒரு நடிகனின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே கிரகிக்கிற, பின்பற்றுகிற பாமர ரசிகர்மேல் கதாநாயகர்கள், அதுவும் விஜய் போன்ற உட்சபச்ச நாயகன் ஏற்படுத்துகிற தாக்கம் அதி தீவிரமானது;

தன் திரை நாயகனை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிற கடைநிலை இளைஞனுக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.

எந்த நிகழ்வுக்கு எப்படி உடையணிந்து செல்லவேண்டும் என்பதை அவன் எங்கே போய் கற்றுக்கொள்வான்? சினிமாவும், கிரிக்கெட்டும் உயிர்மூச்சாக ஆகிவிட்ட இந்தியாவில், இத்துறைகளில் உள்ளவர்க்கென்று சில பொறுப்புகள் உள்ளன.

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். நீங்கள் திரைப்படங்களில் எல்லாவித ஆடம்பர ஆடைகளையும் அணிந்து சலித்துப்போய் நிஜவாழ்வில் இப்படி எளிமையாக இருக்க விரும்புவதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனாலும் பொதுமேடையாயிற்றே. வெறித்தனமான இளைஞன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறானே. ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும், ஆந்திராவிலும் கூட யாருமே இந்த அம்சத்தில் அலட்சியம் காட்டுவதில்லையே.

நட்சத்திரங்கள் வசதியானவர்கள் என்பது வெட்டவெளிச்சந்தானே. யாரும் உங்களைத் தவறாக நினைக்கமாட்டார்கள். தன் நாயகன் அழகாக வந்தால் முதலில் மகிழ்பவன் உங்கள் ரசிகன்தான்!

முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள். விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள்.

இந்த நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள்.” என்று பதிவிட்டு அறிவுறுத்தி இருந்தார்.

இதை அடுத்து ஜேம்ஸ் வசந்தனின் கருத்து சரிதான் என்று சமூக வலைதளத்தில் பலர் கருத்திட்டனர்.

என்றாலும் விஜய் எப்படி வர வேண்டும் என்பது அவருடைய தனிப்படை விருப்பம், இதற்கு முன்பு மிக நேர்த்தியாக வந்தவர், இப்போது இப்படி வருவதற்கு ஏதேனும் காரணம் இருக்கலாம்.

ரஜினியும் கூட எளிமையாகத்தான் விழாக்களுக்கு வருவார் என கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

vels
You might also like