2023-நம்பிக்கையைப் புதுப்பிப்போம்!

தாய்-இணையதள வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்…!

2022-ம் ஆண்டு உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி அமைந்திருக்கும்.
சென்ற ஆண்டின் ஆரம்பத்தில் புத்தாண்டு பலன்களைச் சொன்ன ஜோதிட வல்லுநர்கள் சொன்னபடி, ஓராண்டு அமைந்திருக்கிறதா என்று பின்னோக்கிப் பார்த்தால் – தெரியும் அனுபவ விசித்திரம்.

நம்மை ராசிகளாக, நட்சத்திரங்களாகப் பார்த்தவர்களை விட, நம்மைக் குடிமகன்களாகப் பார்க்கிறவர்கள் நமக்கு என்ன செய்திருக்கிறார்கள், என்பதைப் பரிசீலித்துப் பார்த்தால் எப்படியிருக்கிறது?

பொருளாதாரம் பலருடைய வாழ்நிலையைப் புரட்டிப் போட்டிருக்கிறது.
பணமதிப்பிழப்பும், ஜி.எஸ்.டி.யும் அமலான பிறகு பலரூடைய வாழ்வாதாரம் சரிய ஆரம்பித்து விட்டது. அதன் சுமையிலிந்தும், வேலையிழப்புகளில் இருந்தும் பலர் இன்னும் விடுபட வில்லை.

பெரும் பணக்காரர்கள் மேலும் பணக்காரப் பட்டியலில் சேர்ந்து ஆனந்தமாகசப் புகைப்படங்களில் சிரிக்கிறார்கள்.

நடுத்தர வர்க்கத்தினரும், அடித்தட்டு மக்களும் பொருளாதார அழுத்தம் தாங்க முடியாமல் நசுங்கிய படி, வாங்கும் சக்தியற்றுக் கிடக்கிறார்கள்.

இதற்கிடையில் மெத்தப் படித்த பொருளாதார வல்லுநர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் புள்ளிவிபரங்களை அடுக்குகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் விவாதிக்கிறார்கள். சட்டமன்றத்தில் விவாதிக்கிறார்கள். சாலைகளில் போராடுகிறார்கள்.

விலைவாசி ஒருபுறம் உயர்ந்து கொண்டிருக்கிறது. பட்ஜெட்கள் நாட்டின் நெருக்கடியைச் சொல்லாமல் சொல்கின்றன.

மேலே சுண்டிவிடப் பட்ட நாணயத்தைப் போலிருக்கிறது பலருடைய வாழ்க்கை.
புதிதாகச் செல்போன்களையும், கழுத்தில் அணிந்திருக்கும் செயின்களையும், வாகனங்களையும் திருடுகிறவர்கள் பெரும்பாலும் புதிய முகங்களாக இருப்பதாகச் சொல்கிறார்கள் காவல்துறையினர். தற்கொலைகளும் அதிகரித்திருக்கின்றன.

கொரோனா இரண்டு முறை உலகை வலம் வந்து உயிரிழப்புகளைக் கூட்டி, ஊரடங்குகளால் வீடுகளுக்குள் அடைய வைத்து, மூன்றாவதாகத் தலைக் காட்டிப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

முகமூடிகளுடனும், சமூக இடைவெளி பற்றிய எச்சரிக்கைகளுடன் வாழ்க்கை நம்மைக் கடந்து கொண்டிருக்கிறது.

அண்மையில் வந்த ஒரு தகவல் இது. “இந்தியாவில் ஏழு பேரில் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார்”.

எப்படி இந்த உளவியல் கணக்கை எடுத்தார்கள் என்பது தெரியவில்லை.
ஆனாலும் உளவியல் ரீதியாக அச்சுறுத்தக்கூடிய கல்லை பலருடைய மனங்களில் விட்டெறிகிறது இந்தச் செய்தி.

இந்த நிலை மாற வேண்டும் என்கிற உள்ளார்ந்த கவலையும், எதிர்ப்பார்ப்பும் அனைவருக்குமே இருக்கின்றன.

அந்த நம்பிக்கையை 2023-ம் ஆண்டு உருவாக்க வேண்டும். அதற்கேற்ற சூழலை அரசும் கொடுக்க வேண்டும்.

நம்பிக்கையைப் புதுப்பிப்பது தானே வாழ்க்கை…!
நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.

You might also like