எம்.ஜி.ஆருக்கு அதிகம் செல்வாக்குள்ள மதுரையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்குக் காவி துண்டு அணிவித்திருக்கிறார்கள் சில ‘மர்ம’ நபர்கள்.
அந்தக் காவித்துண்டு அகற்றப்பட்டாலும், அந்தச் செய்தி ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பானதாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் தற்போது காவி மயமாக்குவது ஒன்றும் புதிதல்ல. பெரியாருக்கும், அம்பேத்கருக்கும், ஏன் இதற்கு முன்னால் எம்.ஜி.ஆர் சிலைக்கும் காவி மயமாக்கும் முயற்சிகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நடந்திருக்கின்றன.
காவி நிறத்தில் துண்டு போடுவதாலோ, காவி பெயிண்ட் அடிப்பதாலோ எந்தவொரு தலைவரையும் காவியைக் கொண்டாடுகிற இயக்கத்தைச் சேர்ந்தவராகக் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.
ஒரிரு நாட்கள் செய்திகளில் அடிபடுவதைத் தவிர, அவற்றிற்கு எந்த விளைவும் இருக்கப் போவதில்லை.
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆருக்குத் தனிப்பட்ட முறையில் கடவுள் நம்பிக்கை இருந்தாலும், தன்னுடைய நம்பிக்கையை தன்னைச் சுற்றி இருந்தவர்களிடமும், தன்னுடைய இயக்கத்தில் இருப்பவர்களிடம் அவர் ஒருபோதும் திணித்ததில்லை.
“ஒன்றே குலம் என்று பாடுவோம்” என்கிற பாடல் வரி தான் அவருடைய வாழ்வியல் நெறியாகவும் இருந்தது.
பெரியாரைப் பல விதங்களில் போற்றிய அவர், மதவாதத்தை எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏற்றுக் கொண்டவர் அல்ல.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு போடுவதை அவருடைய தொண்டர்கள் ஏற்க மாட்டார். அதுமட்டுமல்லாமல் எந்த நிறம் அணிந்தாலும் அது ஒரு நிறம் தானே தவிர வேறில்லை. எந்த சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளைக் கடந்த ஒரு மனிதராக வாழ்ந்தவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் என்பதை அவருடைய தொண்டர்கள் அறிவார்கள்.
வேண்டாம் இந்த நிறச் சீண்டல்!
– யூகி