கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான 239 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
நடைபெற்று வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான கேள்விக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.
அதன்படி கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்போது வரையிலான 5 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு மொத்தம் 36 அரசு முறை பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும், இவற்றில் 29 பயணங்களுக்கு மட்டும் மொத்தம் ரூ.239.04 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சமீபத்தில் ஜி20 மாநாட்டிற்காக இந்தோனேஷியா பயணம் மேற்கொண்டதற்காக ரூ.32,09,760 செலவிடப்பட்டதாகவும், ஜப்பான் பயணத்திற்கு ரூ.23 லட்சத்து 86 ஆயிரம் செலவிடப்பட்டதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொண்ட ஐரோப்பிய பயணத்திற்காக 2 கோடியே 15 லட்சத்து 61 ஆயிரத்து 304 ரூபாயும் மற்றும் செப்டம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்கப் பயணத்திற்கு ரூ.23 கோடியே 27 லட்சத்து 9 ஆயிரம் செலவிடப்பட்டதாககவும் ஒன்றிய அரசு தெரிவித்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.