தொலைதூரக் கல்வி: இப்படி ஒரு அறிவிப்பு ஏன்?

கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் நேரடியாக சென்று படித்து பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி வழங்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு கல்வியாளர் உமா, தன் மறுப்பைத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் அவர் எழுதியுள்ள பதிவில், “நான் 12ஆம் வகுப்பும் ஆசிரியர். பட்டயப் பயிற்சி (D.T.Ed) மட்டுமே நேரடியாகப் படித்தேன். B.SC, M.SC, B.Ed, M.Ed எல்லாமே தொலைதூரக் கல்விதான்.

ஆனால், ஆசிரியராவதற்கும் கற்பிக்கவும் நேரடிக் கல்வி முறை மட்டும் தான் சரி என்றால் என்னைப் போன்றவர்கள் பணிக்கே வரமுடியாதே.

இப்போது எந்த விதத்திலும் மாணவர்கள் கற்றலுக்கு எனது தொலைதூரப்படிப்பு தடையாக இல்லையே?

நீதிமன்றங்களின் திடீர் உத்தரவுகள்… தேவையற்ற குழப்பங்களை உருவாக்கும். நீதிபதிகள் இத்தனை வருடங்களாக கல்வித் துறையின் ஆசிரியர்கள் பணி குறித்து ஆய்வுக்கு உட்படுத்திய பிறகு ஒரு அறிவிப்பை வெளியிடலாம். அதை விடுத்து புதிது புதிதாக நினைத்தவற்றையெல்லாம் பேசுகின்றனரோ?

தகுதியில்லை என்றால் கடந்த மாதம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் வரை ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் இருந்த நடைமுறை என்னவாயிற்று?

தொலைதூரக் கல்விக்காக இத்தனைப் பல்கலைக் கழகங்கள் இருப்பதன் அவசியம் என்ன? UGC – 2022/02/ செப்டம்பரில் வழங்கியுள்ள அனுமதிக்கு அர்த்தம் என்ன?

தமிழ்நாட்டில் கல்வித்துறையை ஏற்கனவே பலவாறு காயப்படுத்தி வரும் சூழலில் இப்படி ஒரு அறிவிப்பு எதற்கு? அரசு தலையிட்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

பா. மகிழ்மதி

You might also like