ஒரு வெளிநாட்டுப் படத்தைப் பார்த்து ஊக்கம் பெற்று, அதனை முழுமையாகவோ அல்லது குறிப்பிட்ட சில அம்சங்களையோ பயன்படுத்தும் வழக்கம் உலகெங்கும் உண்டு.
ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் அவ்வாறு நிறைய படங்களை உருவாக்கியிருக்கிறோம் என்று தமிழ் திரையுலகில் ஜாம்பவான்களாக போற்றப்படும் பல கதை வசனகர்த்தாக்கள், இயக்குனர்கள் கூறியிருக்கின்றனர்.
‘த்ருஷ்யம்’ மலையாளப் படம் வெளியானபோது, அது ‘The Devotion of Suspect X’ என்ற ஜப்பானிய நாவலின், ‘Suspect X’ என்ற படத்தின் தழுவல் என்ற தகவலைக் கேள்விப்பட நேர்ந்தது.
அந்த காலகட்டத்தில் தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி மொழிகளில் ‘த்ருஷ்யம்’ மறுஆக்கம் செய்யப்பட்டு பெருவெற்றியடைந்திருந்தது.
ஏழாண்டு இடைவெளிக்குப் பிறகு அதன் ‘த்ருஷ்யம் 2’ மலையாளத்தில் வெளிவந்தது. இரண்டாம் பாகத்தில் பவுடர் பூச்சு அதிகமாக இருந்தது. ‘த்ருஷ்யம்’ முதல் பாகத்தைப் போல யதார்த்தம் நிரம்பியிருக்கவில்லை.
’த்ருஷ்யம் 2’ முதல் பாதியில் காரணமே இல்லாமல் சில பாத்திரங்கள் வந்து போவது சோர்வுற வைத்தாலும், அதற்கெல்லாம் சேர்த்து வைத்து இரண்டாம் பாதியில் அதற்கான காரணங்களை புட்டுப் புட்டு வைத்திருந்தார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.
எந்த இடங்கள் எல்லாம் திரைக்கதையில் ‘ஸ்லோ’வாக இருப்பதாகத் தோன்றியதோ, அவையெல்லாம் திருப்புமுனைகளின் தொடக்கம் என்பது இறுதியில் தெரியவரும். ’த்ருஷ்யம் 2’வை கொண்டாட இதுவே காரணம்.
மலையாளத்தைப் போலவே தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட ‘த்ருஷ்யம் 2’வும் கூட ஓடிடி தளத்திலேயே வெளியானது. கன்னட ரீமேக் மட்டும் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் வெளியாகிப் பெருவெற்றியைப் பெற்றபோதும், ‘த்ருஷ்யம்’ இரண்டாம் பாகம் தயாரிக்கப்படுவதற்கான அறிகுறிகள் இதுவரை தெரியவரவில்லை.
இந்தச் சூழலிலேயே அஜய் தேவ்கன், ஷ்ரேயா சரண், தபு, ரஜத் கபூர், அக்ஷய் கன்னா, இஷிதா தத்தா, ம்ருணாள் ஜாதவ் நடிப்பில் ‘த்ருஷ்யம் 2’ இந்தி ரீமேக் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது.
தெலுங்கிலோ, கன்னடத்திலோ ‘த்ருஷ்யம் 2’ ஆக்கத்தைப் பார்க்காதபோதும், மலையாளத்தில் பார்த்த, ரசித்த, வியந்த அனுபவம் உண்டு. அந்த வகையில், இந்த இந்தி ரீமேக் எப்படியிருக்கிறது? இந்த கேள்விக்கு உதட்டைப் பிதுக்கத்தான் வேண்டியிருக்கிறது.
சறுக்கல் ஏன்?
நாயகன் தனது மனைவியையும் மூத்த மகளையும் கொலைப்பழியில் இருந்து காக்க மிகத்தந்திரமாக அக்குற்றத்தைத் தடயமே இல்லாமல் மறைப்பதுதான் முதல் பாகத்தின் கதை.
இரண்டாம் பாகமானது, நாயகனுக்கு மட்டுமே தெரிந்த அந்த ரகசியம் வேறொரு நபருக்கும் தெரியும் என்பதில் இருந்து தொடங்குகிறது.
அது வெளிப்படும்போது எப்படியெல்லாம் நாயகனின் குடும்பம் பாடுபடுகிறது, அதிலிருந்து எவ்வாறு மீள்கிறது என்பதே இதன் கதை.
மலையாளத்தில் ஜார்ஜ் குட்டி – ராணி தம்பதி போல, இந்தியில் விஜய் சல்கோங்கர் – நந்தினி ஜோடி.
கொலையுண்ட இளைஞனின் பெற்றோராக அதில் கீதா – பிரபாகர் ஜோடி வந்தது போல இதில் மீரா – மகேஷ் தேஷ்முக் பாத்திரங்கள் வருகின்றன.
மலையாளப் படத்தில் இடம்பெற்ற மையப்பாத்திரங்களின் மதம், கலாசாரம், பழக்க வழக்கங்கள் வேறாகவே இதர மொழிகளில் காட்டப்பட்டன. அது பற்றிய விவாதம் இன்னொரு கிளைக்கு இட்டுச் செல்லும்.
ஆனால், ‘த்ருஷ்யம் 2’ மலையாளத்தில் இருந்த நேர்த்தி, பாத்திர வார்ப்பு, காட்சிகள் நகர்வு, ஒட்டுமொத்தமாகப் பார்வையாளர்கள் மனதில் எழும் உணர்ச்சிப் பெருக்கு இந்திப்படத்தில் கிடைக்கவே இல்லை. இரண்டையும் பார்த்தவர்களால் இதனை எளிதில் உணர முடியும்.
முதலாவது காரணம், படத்தின் நீளம் கருதி சில காட்சிகளின் உள்ளடக்கத்தை ஒன்றாக இணைத்திருப்பது.
மலையாளப் படத்தில் ஜார்ஜ் குட்டியின் வீட்டருகே குடிவரும் தம்பதியினரின் சண்டை சச்சரவும், அதன் காரணமாக அப்பெண் ராணியோடு நெருங்கிப் பழகுவதும் இயல்பாக காட்டப்பட்டிருக்கும்.
அதேபோல கல்லறைப் பணியாளோடும் மருத்துவக் கல்லூரி காவலாளியோடும் ஜார்ஜ் குட்டி நெருக்கம் பாராட்டுவது ‘வளவள’வென்று தொடரும். போரடிக்கும் அக்காட்சிகள் தான், கிளைமேக்ஸில் வரும் திருப்பங்களுக்கு காரணம் என்று தெரியவருவது நம்மையும் அறியாமல் ‘அட’ போட வைக்கும்.
இந்திப் படத்தில் இக்காட்சிகள் எல்லாமே பாதியில் தொடங்குகின்றன அல்லது முடிகின்றன.
அவர்கள் யார், என்ன மாதிரியான குணாம்சம் கொண்டவர்கள், அவர்களோடு நாயகனின் குடும்பம் பழக என்ன காரணம் என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாத வகையிலேயே காட்சிகள் நகர்கின்றன.
இரண்டாவது காரணம், நாயக பாத்திரம் செய்யும் தவறுக்குச் சாட்சியமாக விளங்கும் பாத்திரமொன்று எந்த சந்தர்ப்பத்தில் அதனை போலீஸிடம் சொல்ல முன்வந்தார் என்பது.
மனைவியின் உறவினரைக் கொன்ற பழியில் அப்பாத்திரம் சிறை சென்றதாக மலையாளப் படத்தில் வரும். குடும்பத்தோடு மீண்டும் இணைய முடியமாலும், பணத்தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமலும் அந்த நபர் அவதிப்பட்டுக்கொண்டு இருப்பார்.
இந்தி ‘த்ருஷ்யம் 2’வில் அந்த நபர் போதைமருந்து கும்பலைச் சேர்ந்தவராகவும், தன்னோடு இருந்த ஒருவருடன் ஏற்பட்ட பணப்பிரச்சனையால் அவரைக் கொல்ல நேர்வதாகவும் அப்பாத்திரப் பின்னணி அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், அப்பாத்திரத்தின் மீது இரக்கமோ, நாயக பாத்திரத்தின் இக்கட்டான நிலைமை குறித்த வருத்தமோ பார்வையாளர்களைக் கொஞ்சம் கூட தொற்றவில்லை.
எதிர்கொள்ளக்கூடாத விபரீதத்தைச் சந்தித்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி நாயகனின் மூத்த மகளை மனச்சோர்வில் தள்ளியது கதையின் தொடக்கத்திலேயே சொல்லப்பட்டிருக்கும். இந்தியில் அப்படியொரு விஷயமே திரையில் கையாளப்படவில்லை.
மலையாளப் படத்தில் கொலையுண்ட நபரின் பெற்றோர் முகத்தில் எந்நேரமும் சோகம் இழையோடுவதாக காட்டப்பட்டிருக்கும். அந்த நினைவுகள் அவர்களோடே இருப்பது ஒவ்வொரு காட்சியிலும் உணர்த்தப்பட்டிருக்கும். இந்தியில் ரஜத் கபூர் தவிர வேறு எவர் முகத்திலும் அது பிரதிபலிக்கப்படவே இல்லை.
எல்லாவற்றுக்கும் மேலே, நாயகன் தான் செய்த தவறுகளுக்கு என்னதான் நியாயம் கற்பித்தாலும் ‘குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும்’ என்ற அறமொழி திரை முழுக்க இழையோடும்.
‘த்ருஷ்யம் 2’ இந்தி ஆக்கத்தில் அஜய் தேவ்கன், ஸ்ரேயா முதல் மிரட்டல் வில்லனாக வரும் அக்ஷய் கன்னா வரை எவரிடமும் அந்த உணர்வு தென்படவே இல்லை.
இதன் காரணமாக, ‘த்ருஷ்யம் 2’வை இந்தியில் பார்த்து முடித்தபிறகு ‘ப்ரெண்ட்ஸ்’ படத்தில் வடிவேலு சொல்லும் ‘இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா’ என்ற வசனமே நினைவுக்கு வருகிறது.
வெற்றியைக் கொண்டாடலாமா?
நவம்பர் 18ஆம் தேதி வெளியான ‘த்ருஷ்யம் 2’ இந்தி பதிப்பு இதுவரை உலகெங்கும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாகத் தகவல் வந்துள்ளது.
அமீர்கான், அக்ஷய் குமார் நடித்த படங்கள் பெருந்தோல்விகளைச் சந்தித்த நிலையில், அவர்களது தலைமுறையைச் சேர்ந்த அஜய் தேவ்கனின் இப்படத்தை ’வாராது வந்த மாமணி’யாய் கொண்டாடுகிறது இந்தி திரையுலகம்.
புஷ்பா, கேஜிஎஃப் 2, காந்தாரா உட்பட தென்னிந்திய படங்கள் வடமாநிலங்களில் கொண்டாடப்படும் நிலையில் ஒரு படத்தின் உள்ளடக்கம் எப்படியிருக்க வேண்டுமென்பதில் ரொம்பவே குழம்பிப் போயிருக்கின்றனர் அங்குள்ள படைப்பாளிகள்.
அதனாலேயே தமிழ், தெலுங்கில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களில் சில அங்கு ‘ரீமேக்’ ஆகி வருகின்றன. அந்த வரிசையிலேயே ‘த்ருஷ்யம் 2’வின் வெற்றியும் நோக்கப்படுகிறது. நிச்சயமாக அதுவொரு தவறான பார்வை.
ஜப்பானியப் படமான ‘சஸ்பெக்ட் எக்ஸ்’ படத்தின் கதை முடிச்சும் ‘த்ருஷ்யம்’ படத்தின் அடிப்படைக் கதையும் ஒன்றே. முதலாவதில் ஒரு தாயும் மகளும் செய்த குற்றத்தை நாயகன் தானே செய்ததாக ஏற்றுக்கொள்வார்.
அவர்கள் இருவரோடும் விவரிக்க இயலாத நேசத்தைக் கொண்டிருப்பார் அந்த நாயகன்.
அவரது தந்திரங்கள் சட்டத்தின் முன் எடுபடும்விதமாக, அப்பாத்திரம் எப்படிப்பட்ட புத்திசாலித்தனம் கொண்டது என்பது காட்சிகளாகச் சொல்லப்பட்டிருக்கும்.
தனது குடும்பத்தைக் காப்பாற்றும் பொருட்டு, நடந்த குற்றத்தைத் தடயமின்றி மறைப்பதாக ‘த்ருஷ்யம்’ கதையை உருவாக்கியிருந்தார் ஜீத்து ஜோசப்.
இவ்விரண்டுக்குமான வித்தியாசத்தை உணர்ந்தவர்களுக்கு, ஜீத்து ஜோசப் தான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தை எவ்வாறு தனது மண்ணின் இயல்புக்கேற்ப வேறொரு கதையாக உருமாற்றினார் என்பது புரியவரும்.
இந்த அடிப்படை அம்சங்கள் எதையும் பின்பற்றாமல், வெறுமனே சில பாத்திரங்கள், திரைக்கதை திருப்பங்கள் என்று மேலோட்டமாக ஒரு மூலப்படத்தை ரீமேக் செய்வதென்பது உயிருள்ள மனிதனுக்குப் பதிலாக எலும்புகளினாலான ஒரு கூட்டை ஆக்குவதற்குச் சமம்.
இதுவே வெற்றியை ஈட்டியிருக்கிறது என்பது நிச்சயம் பெருமைப்படக்கூடிய விஷயமல்ல.
இன்னும் சரியாக வார்த்திருந்தால் இதற்கு மேலும் கொண்டாடப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் என்றே இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மறைந்த இயக்குனர் நிஷிகாந்த் காமத் இயக்கிய ‘த்ருஷ்யம்’ முதல் பாகத்தை இதுவரை பார்க்கவில்லை.
அதனால் இந்தி ‘த்ருஷ்யம் 2’வைப் பொறுத்தவரை நிச்சயமாக இப்படத்தின் இயக்குனர் அபிஷேக் பதக் மட்டுமே இதற்குப் பொறுப்பு.
இது போன்ற நேரங்களில்தான், ஒரு படத்தை அச்சுப் பிசகாமல் ’பிரேம் பை பிரேம்’ அப்படியே வார்க்கும் முயற்சிகளைக் கொண்டாட வேண்டியிருக்கிறது.
அதேநேரத்தில், ஒரு திரைக்கதையின் ஆன்மாவைத் தவறவிட்டு வெறும் மேலோட்டமான பிம்பத்தைப் பிரதியெடுக்க முனையும் பாலிவுட்டை பார்த்து வருத்தப்பட வேண்டியிருக்கிறது.
– உதய் பாடகலிங்கம்