சீனாவில் அதிவேகமாக பரவத் தொடங்கிய கொரோனா!

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது கண்டு பிடிக்கப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் வியாபித்து பரவியது.

சர்வதேச அளவில் இதுவரை 64.5 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 62.38 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 66.33 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளது. ஆனால் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 

அந்த நாட்டில் தினசரி 30,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

வைரஸ் பரவலை தடுக்க தலைநகர் பெய்ஜிங் உட்பட முக்கிய நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சீனாவின் குவாங்ஜியோ மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாகாணத்தின் 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் சீனாவில் அமல்படுத்தப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளால் அந்த நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடுகின்றனர்.

சீனாவின் ஐபோன் நகரம் என்றழைக்கப்படும் செங்சோவ் நகரில் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதேபோல சீனாவின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து சாலை, தெருக்களில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் சீன அரசு திணறி வருகிறது.

சீனாவில் உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இவை பழைய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் ஆகும்.

அந்த தடுப்பூசிகளின் வீரியம் மிகவும் குறைவாக உள்ளது. சீன மக்கள் தொகையில் 93 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் மருந்தின் வீரியம் குறைவாக இருப்பதால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like