ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை!

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

முன்னதாக இந்த வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதை எடுத்துக் கூறினார்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட அரசியல் சாசன அமர்வு எழுத்துப்பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாகத் தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதத்தை நேற்று தாக்கல் செய்தது.

அதில், ”ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்படவில்லை. மிகவும் பாதுகாப்பான முறையில் போட்டிகள்  நடத்தப்படுகிறது. பாரம்பரிய விளையாட்டுக்குத் தடை விதித்தால் தமிழ் கலாச்சாரம் அழியும் நிலைக்குத் தள்ளப்படும் என்பதால் விவசாயத்தையும், விவசாயிகளையும் போற்றும் வகையில் காலங்காலமாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. விலங்குகள் வதை என்ற பெயரில் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கக் கூடாது” என்று தமிழக அரசு தெரிவித்தது.

இந்த நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

You might also like