ஈஷா மையத்தால் அழிக்கப்படும் யானைகள் வழித்தடம்!

– நீதிமன்றம் சென்ற வன விலங்கு பாதுகாப்பு ஆர்வலர்  

ஈஷா யோகா மையத்தால் யானை வழித்தடங்கள் அடைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வன விலங்கு பாதுகாப்பு ஆர்வலர் மனு தாக்கல் செய்துள்ளார்.

விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது என்று விளக்கம் கேட்டு ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,  ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கில் தன்னையும் சேர்க்கக் கோரி சென்னையை சேர்ந்த வன விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர் முரளிதரன் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ஈஷா அறக்கட்டளை அமைந்துள்ள இடத்திற்கு அருகே யானைகள் தண்ணீர் தேடி வரும் இடம் உள்ளது எனவும், யானைகள் வழித்தடங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் அவை ஊருக்குள் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும்

இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் எனவும் கடந்த 10 ஆண்டுகளில் 150க்கு மேற்பட்ட யானைகள் இறந்துள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது. 

அதோடு சிவராத்திரி இரவுகளில் திரைப்படப் பாடல்களுக்கு நடனமாடுகிறார்கள் எனவும்,  அதிக டெசிபல் ஒலியால் அப்பகுதியை மாசுபடுகிறது எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

எனவே, ஈஷா அறக்கட்டளை தாக்கல் செய்துள்ள மனுவில் தன்னையும் எதிர்மனுதராக சேர்க்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணை வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை வரும் 28 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

You might also like