இறுதி யாத்திரைக்கு ‘கம்பெனி’ கியாரண்டி!

பிறப்பு முதல் வாழ்வின் அத்தனை நிலைகளிலும் கொண்டாட்டத்தை விரும்புபவன் மனிதன். ஒவ்வொரு கொண்டாட்டமும் ஒரு வகை.

அவற்றைச் சம்பந்தப்பட்டவர்களே நடத்தியது மலையேறி, ஒவ்வொன்றுக்கும் நிறுவனங்களின் உதவியை நாடும் நிலை வந்துவிட்டது.

அந்த வரிசையில், இந்தியாவில் மரணத்திற்குப் பிறகான ஈமச் சடங்குகளில் நிறுவனமயமாக்கத்திற்கு இடமில்லை என்றே பலமாகக் கருதப்பட்டது.

மும்பையிலுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனமொன்று அப்படியொரு வாதத்திற்கு முடிவுரை எழுதியிருக்கிறது.

கொண்டாட்டமான வாழ்க்கை!

கொண்டாட்டங்களே நம்மை நாமே மகிழ்ச்சியை எதிர்கொள்ள வைப்பதற்கான வழிமுறை.

பிறந்த குழந்தைக்குப் பெயரிடுதல் தொடங்கி முதலாம் பிறந்தநாள், பூப்புனித நீராட்டு, திருமணம், கர்ப்பத்தைப் போற்றும் வளைகாப்பு, மதச்சடங்குகள் தொடர்பான விழா என்று ஒருவரது வாழ்வில் பல விழாக்கள் வந்து போகும்.

இது தவிர கல்வி, வேலைவாய்ப்பு, கேளிக்கை, லட்சிய நோக்கு, உதவும் மனப்பான்மை சார்ந்து பல விழாக்களில் பங்கெடுக்க வேண்டியிருக்கும்.

ஒவ்வொன்றுக்கும் உறவுகள், நட்புகள், அறிந்தவர் தெரிந்தவர் என்று முடிந்தவரை அனைவரையும் அழைப்போம்; வாழ்த்துகள் பகிர்வோம்; அறுசுவை உணவுகள் பகிர்வோம்; ஆடுவோம் பாடுவோம்.

விழாக்கோலம் முடிந்து இயல்பு திரும்பும் வரை வேறொரு மனநிலையே நிறைந்திருக்கும்.

இவ்விழாக்களுக்கான ஏற்பாடுகளைச் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மட்டுமே மேற்கொள்வதென்றால், எத்தனையோ நாட்கள் உழைக்க வேண்டியிருக்கும். அதற்காகவே, உதவும் கரங்கள் நீளும்.

அதன் தொடர்ச்சியாகவே, இன்றும் ‘ரெண்டு நாள் முன்னாடி வந்துடுங்க, ஒரு வாரம் முன்னாடி வந்துடுங்க’ என்று அழைப்பு விடுப்பதும், அந்த நபர்களும் வந்து பங்களிப்பை நல்வதும் தொடர்கிறது.

மாறாக, உறவுகளுக்கும் நட்புகளுக்கும் சிரமம் வேண்டாம் என்று அனைத்துக்கும் வேலையாட்களை நியமிக்கும் வேலைகள் செல்வச் செழிப்பானவர்களின் வீடுகளில் அரங்கேறியிருக்கின்றன.

அதைக் கண்டு அதையே ஒரு தொழிலாக மேற்கொண்டால் என்னவென்ற சிந்தனை பிறந்தபோது, நிகழ்வுகளை நிர்வகித்துச் செயல்படுத்தும் பணி நிறுவனமயமானது.

இன்று, ஒரு கல்யாண வீட்டில் பல நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இயங்குவதை மிகச்சாதாரணமாகப் பார்க்கலாம். அதிலும் முதன்மை ஒப்பந்ததாரர், இரண்டாம் நிலை ஒப்பந்ததாரர்கள் என்று பல அடுக்குகள் உண்டு.

எல்லா விழாக்களுக்கும் இப்படி நிறுவனங்களின் உதவியை நாட முடியுமென்றாலும், இறப்பு வீடுகளில் மட்டும் அதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது.

மவுனமே துக்கமாய்..!

இறப்பைக் கொண்டாடும் வழக்கம் வெகுசில இடங்களில் மட்டுமே இன்றும் தொடர்கிறது.

தாரை தப்பட்டை முழங்க ஆட்டமும் பாட்டமுமாய் வாழ்ந்து மறைந்தவரின் நினைவைப் போற்றுவதோடு சுடுகாடு வரை மலர் தூவி, வெடிகள் வெடித்து சென்றவரின் ஆன்மாவைச் சிறப்பாக வழியனுப்பி வைத்திடுவார்கள்.

சில இடங்களில் மரணமடைந்தவரின் முகத்தை இறுதியாகப் பார்க்க வருபவர்கள் நெருங்கிய உறவின் கைகளைப் பிடித்து துக்கத்தைப் பகிர்ந்துகொள்வது மட்டுமே நிகழும்.

அழுகையும் ஒப்பாரியுமாய் அந்த இடமே மவுனத்தால் நிரம்பியிருக்க, துக்கம் வழிந்தோடும் வரை தொடரும் சடங்குகளைக் கவனிக்கச் சிலர் ஆலாய்ப் பறந்தோடுவார்கள்.

சுடுகாடு அல்லது இடுகாட்டுக்கு கூட்டமாய் செல்வதில் தொடங்கி இரண்டாம் நாள், காரியம் அல்லது விசேஷம் என்று மரணமடைந்தவரின் நினைவுகள் தொடர்ந்து முன்னே செல்லும்.

கிராமங்களிலும், நகரங்களில் கொஞ்சம் வசதி படைத்த அல்லது அக்கம்பக்கத்தில் பிரபலமானவர்களின் வீடுகளிலும் இக்காட்சியைப் பார்க்கலாம்.

மாறாக, இறுதி ஊர்வலத்தில் விரல்விட்டு எண்ணக்கூட இயலாத நிலையில் இரண்டொரு மனிதர்கள் பங்குபெறுவதையும் பார்க்க நேரிடுகிறது, பங்குகொள்ள நேர்கிறது.

அதிக உறவுகளோ அல்லது நட்புகளோ இல்லாமல் இருப்பவர்களும், துக்கத்தை பகிர இயலாமல் முடங்கியவர்களும், இப்படியொரு சூழ்நிலையைக் கடந்து வருவது மிகக்கடினம்.

தாங்கள் பின்பற்றும் சடங்குகள் முதல் இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகள் வரை அனைத்தையும் எப்படிச் செய்வது என்று திணறுவதும் சாதாரணம்.

துக்கம் மட்டுமே குடிகொண்டிருக்கும் அந்நேரத்தில், உதவும் மனங்கள் இல்லாத குறையைப் போக்கவும் இனிவரும் நாட்களில் நிறுவனங்கள் உதவும்.

அதற்கொரு உதாரணம்தான் மும்பையில் இயங்கிவரும் சுகந்த் ப்யூனரல் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட்.

இனிதாக இறுதிப்பயணம்!

‘வீடு வரை உறவு’ என்று தொடங்கும் பாடலில் ‘கடைசி வரை யாரோ’ என்று எழுதியிருப்பார் கண்ணதாசன். ஒரு மனிதனின் வாழ்வில் அறம் ஒட்டிக்கொள்வதற்கு அந்த வார்த்தைகளே துணையாக நிற்கும்.

ஏனென்றால், வாழ்வு முழுக்க சிறப்பாகக் கழித்து இறுதி யாத்திரைக்கு வழியில்லாமல் போனவர்கள் இந்த உலகில் ஏராளம்.

வெறுமனே பணம் மட்டுமே அதற்குத் தடை என்று எண்ணக் கூடாது. அதையும் தாண்டி உயிரற்ற உடலைத் தாங்கச் சில கரங்கள் வேண்டும்.

இன்று, அதற்கும் ஒரு வழி உண்டு என்கிறது மும்பையைச் சேர்ந்த சுகந்த் நிறுவனம். சமீபத்தில் டெல்லியில் நடந்த இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் கலந்து கொண்டது.

அப்போது, அங்கு வைத்திருந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பாடையைக் கண்டு பார்வையாளர்கள் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஒரேநேரத்தில் அடைந்தனர். ‘இறுதி யாத்திரைக்கும் நிறுவனமா’ என்ற திகைப்பே அதில் அடங்கியிருந்தது.

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இச்சேவையை நிறுவனங்கள் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றன.

பாரம்பரியத்திற்கும் மரபுவழிச் சடங்குகளுக்கும் முக்கியத்துவம் தருபவர்கள் என்ற முறையில் இந்தியாவில் அதற்கு வாய்ப்பில்லை என்றே நம்பப்பட்டு வந்தது.

சாதி, மதம் தாண்டி துக்கத்தில் தோள் கொடுக்கும் மனப்பாங்கு இங்கு நிரம்பி வழிவதே அதற்குக் காரணம்.

ஆனால், முகம் தெரியாத ஊர்களில் யாருமில்லாமல் துக்கத்தை அனுபவிப்பவர்களுக்கு அந்தக் கணம் அசாதாரணமாக இருக்குமென்பதை எவராலும் மறுக்க முடியாது. அதனைச் சரி செய்ய இது போன்ற நிறுவனங்கள் உதவும்.

இனி, கல்யாண வீடுகளில் ‘காண்ட்ராக்ட்’ யாரு என்று கேட்பது போல துக்க வீடுகளிலும் கூட கேட்கும் நிலை உண்டாகும். ‘எல்லாம் கரெக்டா நடக்க நாங்க கியாரண்டி’ என்று கூட அவற்றின் ஊழியர்கள் சொல்லலாம்.

சுகந்த் நிறுவனம் குறித்த தகவல் வெளியானதும், சமூக வலைதளங்களில் அதைக் கிண்டலடித்து ‘மீம்ஸ்’கள் பரவின.

அதனை முன்வைத்தே, நடைமுறையில் இந்நிறுவனத்திற்கான இடம் என்னவென்று ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம்.

இதன் தொடர்ச்சியாக, வரும் நாட்களில் ஒவ்வொரு ஊரிலும் புதிதுபுதிதாக சில நிறுவனங்கள் இதேபோலத் தொடங்கப்படலாம்.

இந்த விஷயத்தை நீங்கள் ஆதரிப்பவராக இருந்தால், இன்றைய யுகத்தில் துக்கத்தில் தோள் கொடுக்கும் நம்பிக்கை மனிதர்கள் குறைந்து வருவதைப் புரிந்து கொண்டதாக அர்த்தம். கிண்டலடிப்பவராக இருந்தால், மயான அமைதியை அனுபவித்து தேர்ந்தவர் என்று அர்த்தம்.

நாம் எந்த வகை என்றறிய பெரிதாகச் சிரமப்பட வேண்டியதில்லை. இரண்டுக்கும் தலையாட்டுபவராக இருந்தால், இறுதிப்பயணம் பற்றிய எந்தவொரு புரிதலும் இல்லையென்றே அர்த்தம்.

– உதய் பாடகலிங்கம்

You might also like