நித்தம் ஒரு வானம் – பார்த்தால் நம்பிக்கை துளிர்க்கும்!

அவநம்பிக்கை இறுகிப் போன மனதை நெகிழ்வாக்குவது எளிதல்ல; சில நேரங்களில் ஒரு திரைப்படத்தைப் பார்த்தவுடன் அது நிகழும். வாழ்க்கை மீதான நம்பிக்கை பலப்படும்; அது, மிகவும் அரிதான விஷயம். அப்படியொரு அற்புதத்தை நிகழ்த்தும் படைப்பாக முயற்சித்திருக்கிறது ‘நித்தம் ஒரு வானம்’.

புதுமுக இயக்குனர் ர.கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தில் அசோக் செல்வன், ரீது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா, சிவதா உட்பட பலர் நடித்துள்ளனர். கோபி சுந்தர் பாடல்களுக்கு இசை அமைக்க, தரண் குமார் பின்னணி இசை தந்திருக்கிறார்.

பரந்த வானம்!

நம் கால்களுக்கு வெளியேயுள்ள நிலமும், பார்வைக்கு அப்பாற்பட்ட வானமும் மிகப்பரந்து விரிந்தது. போலவே, நம் பிரச்சனைகளை விடப் பெரியது இவ்வுலகம் எனும் அற்புதம் என்று சொல்கிறது ‘நித்தம் ஒரு வானம்’ திரைக்கதை!

படிக்கும் புத்தகங்களில் இருக்கும் நாயக பாத்திரமாகத் தன்னை கற்பனை செய்துகொள்ளும் நபர் அர்ஜுன் (அசோக் செல்வன்). சிறு வயதில் தொடங்கும் இவ்வழக்கம் வளர்ந்தபிறகும் மாறுவதில்லை.

அதேநேரத்தில், யதார்த்த வாழ்வில் பிறரோடு கலகலப்பாகப் பழகத் தெரியாதவராகவும் இருக்கிறார் அர்ஜுன். எதிலும் சுத்தம் பார்க்கும் ‘அப்சஸிவ் கம்பள்சிவ் டிசார்டர்’ரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

படிப்பு, வேலை, சம்பாத்தியம் என்று வெற்றிகரமாக வாழும் அர்ஜுன், 26-வது வயதில் முதலாவது தோல்வியைச் சந்திக்கிறார். இவருக்கென்று நிச்சயிக்கப்பட்ட பெண், திருமணத்திற்கு முந்தைய நாள் தனது காதலனோடு சென்றுவிடுகிறார்.

அதனால் உறவினர்கள், தெரிந்தவர்கள், சுற்றத்தினர் அனுதாபங்களை அள்ளிக் கொட்ட, மன அழுத்தத்தில் சிக்கிக் கொள்கிறார் அர்ஜுன். பயணம் மனதை இலகுவாக்கும் என்று உபதேசித்தாலும், அந்த மருந்தை உட்கொள்ள அவர் தயாராக இல்லை.

இந்த சூழலில், அர்ஜுனின் குடும்ப மருத்துவர் (அபிராமி) தான் எழுதிய இரண்டு கதைகளை அவரிடம் தருகிறார். இரண்டு கதைகளும் முறையே மதி – பிரபா, வீரப்பன் – மீனாட்சி என்ற இரண்டு ஜோடிகளைச் சுற்றி விரிகிறது.

அதனைப் படிக்கையில், வழக்கம்போல அதில் வரும் ஆண் பாத்திரமாகத் தன்னை கற்பனை செய்துகொள்கிறார் அர்ஜுன். பாதி வாசிக்கும்போதே  சிக்கல் முளைக்கிறது. அந்த இரண்டு கதையிலும் முடிவுகள் இல்லை.

அதனைத் தெரிந்துகொள்ள, நடு இரவில் மருத்துவரைத் தேடிச் செல்கிறார் அர்ஜுன். அவரோ, இரண்டுமே உண்மைக் கதைகள் என்று சொல்லிச் சம்பந்தப்பட்ட நபர்களின் முகவரியைக் கொடுத்தனுப்புகிறார்.

அவர்களைத் தேடி கொல்கத்தாவிற்கும், குலுமணாலிக்கும் செல்லும் பயணத்தில், சுபத்ரா (ரீது வர்மா) எனும் பெண்ணைச் சந்திக்கிறார் அர்ஜுன். ஒருகட்டத்தில் இருவரும் சேர்ந்து அந்த நபர்களைச் சந்திப்பதாக முடிவெடுக்கின்றனர். அதன்பின், என்ன நிகழ்ந்தது என்பது மீதிக்கதை.

தான் சந்தித்ததைவிட பெரிய பிரச்சனைகள் இந்த உலகில் இருக்கின்றன என்பதை அர்ஜுன் உணர்வதுதான், இக்கதையின் ஆதார மையம். உண்மையைச் சொன்னால், ‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்ற கண்ணதாசனின் வரிகளை அடியொற்றி இக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் ர.கார்த்திக். நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்காகவே இந்த உலகம் பரந்து விரிந்திருக்கிறது என்பதைக் காட்சிகளாக வடித்திருக்கிறார்.

மெதுவாகப் பற்றும் தீ!

சில படங்கள் மிகத்தாமதமாக ஹிட் ஆகும் என்று தியரி சொல்லப்படுவதுண்டு. அதற்காக, இப்போது இந்த படத்தைக் கொண்டாடக் கூடாது என்று அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. வெறுமனே வர்த்தக வெற்றியை மீறிச் சில படங்களே நம் மனதுக்கு நெருக்கமானதாக மாறும். ‘நித்தம் ஒரு வானம்’ நிச்சயமாக அந்த வரிசையில் சேரும். அதற்குப் பொருத்தமாக, திரைக்கதையும் ‘மெதுவாகப் பற்றும் தீ’யாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் எனும் பாத்திரம் எப்படிப்பட்டது என்பதைத் திரைக்கதையின் தொடக்கத்திலேயே தெளிவாகச் சொல்லிவிடுகிறார் இயக்குனர். அதனாலேயே அப்பாத்திரம் எதிர்கொள்ளும் திருமணச் சிக்கல், மன அழுத்தம் என்று கதை ‘ஸ்லோமோஷனில்’ நகர்வதையும் ஏற்றுக்கொள்கிறது மனம்.

வீரா, பிரபா எனும் இரண்டு ஆண் பாத்திரங்களாக நாயகன் கற்பனை செய்துகொள்வதை அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். அதற்கேற்றவாறு அப்பாத்திரங்களாக உருமாறியிருக்கிறார் அசோக் செல்வன்.

இரண்டு கதைகளிலும் அவரது ஜோடிகளாக ஷிவாத்மிகா ராஜசேகர், அபர்ணா பாலமுரளி இருவரும் வருகின்றனர். ’சூரரைப் போற்று’ படத்திலேயே அபர்ணாவின் நடிப்பை பார்த்து பிரமித்துவிட்டதால், இதில் ரசிக்க மட்டுமே தோன்றுகிறது.

இப்படம் தரும் பெரிய ஆச்சர்யம், ஷிவாத்மிகாவின் இருப்பு. ஷோபா, சரிதா, சில்க் ஸ்மிதா, அர்ச்சனா, கஜோல் தொடங்கி இயல்பான நடிப்பால் நம் மனம் கவர்ந்த கறுப்பு வண்ண அழகிகள் பலரை நம் நினைவலைகளில் எழச் செய்திருக்கிறார். இந்த படம் அவரது அறிமுகமாக அமைந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.  

ரீது வர்மா, சிவதா, காளி வெங்கட், அழகம்பெருமாள், அபிராமி உட்பட அனைவருமே கலக்கியிருக்கின்றனர். கவுரவ வேடத்தில் தோன்றியிருக்கும் ஜீவா – இஷா ரப்பா காட்சிகளைப் பார்க்கும்போது கண்ணீர் துளிர்க்கவில்லை என்றால், ஒருவர் தன்னைத்தானே ‘கல்மனதுக்காரராக’ நினைத்துக் கொள்ளலாம்.

அசோக் செல்வனின் பெற்றோராக வரும் கல்யாணி நடராஜன் – மேத்யூ வர்கீஸ் ஒரு உயர் நடுத்தர வர்க்க தம்பதியாகத் தோன்றுவது திரைக்கதை மீதான நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்துகிறது. அசோக் செல்வனுக்கு நிச்சயித்த பெண்ணாக வரும் வின்சு ரேச்சல் சாம், ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்திற்குப் பின் பெயர் சொல்லும் பாத்திரமொன்றில் தோன்றியிருக்கிறார்.

என்னதான் அசோக் செல்வன் எனும் ஒரு நாயகரைச் சுற்றி கதை நகர்ந்தாலும் இதில் ரீது வர்மா, ஷிவாத்மிகா, அபர்ணா, சிவதா, அபிராமி, கல்யாணி, வின்சு ரேச்சல், இஷா ரப்பா என்று பெண் கலைஞர்களுக்கே அதீத முக்கியத்துவம் உள்ளது; இதுவே ஒரு சாதாரண ஆணின் வாழ்வில் பெண்களுக்கான இடம் எத்தகையது என்பதைச் சொல்லாமல் சொல்லும். அதற்காகவே இயக்குனர் ர.கார்த்திக்கை தனியாகப் பாராட்டலாம்!

காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும், அந்த பிணைப்பு இழையில் பழுது இல்லை. அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு பாத்திரமும் என்ன எண்ணுகிறது என்பதைச் சொல்லும் வகையில் அவற்றின் மவுனத்திற்கு இடம் தந்திருக்கிறது திரைக்கதை. அதுவே ‘இதெல்லாம் நடைமுறைக்குச் சாத்தியமா’ என்ற கேள்வியை மீறி, இயக்குனர் காட்டும் உலகை ரசிக்க வைத்திருக்கிறது.

விது அய்யண்ணாவின் ஒளிப்பதிவு, ‘கிளாசிக்’ படங்களின் ஒளிப்பதிவு தரத்தில் அமைந்திருக்கிறது. உள்ளரங்க காட்சிகளில் இருளையும் வெளிச்சத்தையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து கட்டிய பிரேம்களை காட்டும் அவரது ஒளிப்பதிவு, வெளிப்புறங்களில் இயற்கை அழகை அள்ளி அள்ளிப் பருகத் தந்திருக்கிறது.

கதை நகர்வு எவ்வகையிலும் இடர்ப்படாத வகையில் தெளிவான நீரோட்டமாகத் திரைக்கதை மாற உதவியிருக்கிறது ஆண்டனியின் படத்தொகுப்பு.

பலமூட்டும் இசை!

அசோக் செல்வன் – ஷிவாத்மிகா காட்சிகளில் காதலை பின்னணி இசையில் குழைத்து தந்திருக்கும் தரண், அசோக் செல்வன் – அபர்ணா சம்பந்தப்பட்ட காட்சிகளில் அப்படியே நகைச்சுவை பக்கம் தாவியிருக்கிறார். அவ்விரண்டு உணர்வுகளும் அப்படியே அடியோடு மாறும் வகையில் ஜீவா – இஷா காட்சிகளுக்கு இசை தந்திருப்பது அபாரம்.

கோபி சுந்தரின் இசையில் ’காற்றில் சிக்கி’, ’உனக்கென நான் எனக்கென நீ’, ‘யாரா வே’ பாடல்கள் கொண்டாட்டம் தருகின்றன என்றால், ‘வந்தாய் என் வரம் ஆகவே’ என்றென்றைக்குமான மெலடியாகத் திகழ்கிறது. பாடலாசிரியர் கிருத்திகா நெல்சனே பாடியிருக்கும் ‘பாதி நீ பாதி நான்’ பாடலும் அந்த வரிசையில் சேர்கிறது. ஆனால், அவர் எழுதிப் பாடியிருக்கும் ‘ஒரு வேழம்’ பாடல்தான் திரையரங்கில் மட்டுமல்ல, தனித்து கேட்டபோதும் புரியாத வகையில் அமைந்திருக்கிறது.

கோபி சுந்தர் – கிருத்திகா நெல்சன் கூட்டணி புதிது என்பதோடு, ஹாரிஸ் ஜெயராஜ் – தாமரை போல கொண்டாடத்தக்க உழைப்பைத் தந்திருக்கிறது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

போலவே, தரண்குமார் இசையில் அபர்ணா பாலமுரளி பாடியிருக்கும் ‘தடபுட காத்து’ எனும் புரோமோஷன் பாடலும் கூட கேட்க ரம்மியமாக அமைந்துள்ளது.

திரையோடு ஒன்ற வைக்கும் காட்சியமைப்பு, பிரச்சனைகளும் தீர்வுகளையும் பிணைக்கும் கதையமைப்பு, நடிப்பு மற்றும் தொழில்நுட்ப உழைப்பின் அபாரமான ஒருங்கிணைப்பு ஆகியவற்றோடு சிறந்த பொழுதுபோக்கையும் தரவல்ல ஒன்றையே ‘பீல் குட்’ திரைப்படமாக கொண்டாட முடியும். ‘நித்தம் ஒரு வானம்’ அப்படியொரு நல்ல அனுபவத்தைத் தரும். அந்த வகையில், இயக்குனர் ர.கார்த்திக் மற்றும் படக்குழுவினரை பூங்கொத்து தந்து வரவேற்கலாம்!

– உதய் பாடகலிங்கம்

You might also like