(கவியரசர் கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் எழுதிய ‘என்றென்றும் கண்ணதாசன்’ தொடரை தினத்தந்தியில் படித்த முக்தா ஸ்ரீனிவாசன் மகள் மாயா ஸ்ரீனிவாசன், முக்தாவின் மகன் முக்தா ரவி ஆகியோர் கவியரசருக்கும் முக்தா ஸ்ரீனிவாசனுக்கும் இடையில் நடந்த சில சுவாரசியமான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள். அதில் ஒன்று தான் இது.)
முக்தா ஸ்ரீனிவாசன், முக்தா பிலிம்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, சிறிய பட்ஜெட்டில் நகைச்சுவை படங்களை இயக்கி, தயாரித்துக் கொண்டிருந்தார்.
முதல் முறையாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து முக்தா பிலிம்சில் ஒரு படம் தயாரிக்க விருப்பப்பட்டு, சிவாஜியின் கால்ஷீட்டையும் வாங்கிவிட்டார்.
இயக்குனர் மகேந்திரனின் கதையை வாங்கி, சோவின் திரைக்கதை வசனத்தில் சிவாஜி மற்றும் வாணிஸ்ரீ நடிக்க ‘நிறைகுடம்’ படத்தை தொடங்கினார்.
சிவாஜி நடித்த ‘பார் மகளே பார்’ படத்தில் தான், சோ திரைப்பட நடிகராக அறிமுகமானார்.
அதனால் சிவாஜி அவரை உரிமையுடன் ஏக வசனத்தில் அழைப்பார். படத்தில் பெரும்பாலான காட்சிகளும் வசனங்களும் நகைச்சுவையாக அமைந்து இருந்தன.
அந்த கால கட்டத்தில் இலக்கியத்தரமான வசனம் கொண்ட காட்சியோ அல்லது ஓரங்க நாடகமோ சிவாஜி படங்களில் இடம் பெறவேண்டும் என்று திரைப்பட விநியோகஸ்தர்கள் வற்புறுத்துவார்கள்.
அதற்காகவே சிவாஜியும் வாணிஸ்ரீயும் பேசும் காதல் காட்சி ஒன்றை படத்தில் சேர்த்தார்கள்.
“டேய், நீ கேலியும் கிண்டலுமா நல்லா எழுதுவே. ஆனா இது வேற மாதிரி. பொண்ணுங்களை வர்ணிச்சு எழுதுறது உனக்கு பிடிக்காது. அதிலயும் இந்த வர்ணனை இலக்கியத் தரமாவும் இருக்கணும். அப்படி எழுதுவியா?” எனக் கேட்டார் சிவாஜி.
“ஏன் என்னால எழுத முடியாதுன்னு நினைக்கிறீங்களா?” என்றார் சோ.
“நீ நல்லா எழுதுவே, ஆனா இந்த மாதிரி எழுதினது இல்லையே. இதிலயும் காமெடி சேர்த்திடுவியே”
“நாளைக்கு எழுதி கொண்டுவந்து தரேன். பாத்துட்டு பேசுங்க”
மறுநாள் அந்தக் காட்சிக்கான வசனத்தை சோ கொண்டு வந்து தந்தார்.
வசனத்தைப் படிக்க ஆரம்பித்தார் சிவாஜி…
‘மயிலின் தோகை போல் பறந்து கிடக்கும் கூந்தல் என்று சிலர் வர்ணிப்பார்கள்.
ஆனால் எனக்கு அப்படித் தெரியவில்லை.
கணக்கிட முடியாத கேசங்கள் நிறைந்த உன் கூந்தல், அளவிடமுடியாத உன் அன்பைப்போல் இருக்கின்றன.
மஞ்சள் பூசிய நெற்றியிலே இருக்கும் செந்நிற குங்குமப் பொட்டு-
மற்றவர்களுக்கு மாங்கல்யத்தின் மங்கலத்தையும் சுகத்தையும் காட்டுவது போல் தெரியலாம்.
ஆனால் எனக்கு..
களங்கமில்லாத ஒரு பெண், மனம் உவந்து ஏற்றுக்கொண்ட மணவாழ்க்கையிலே மறைந்திருக்கும் அபாயத்தைத் தான் அந்த செந்நிறம் காட்டுகிறது.
செம்பவழ வாய் திறந்து என்று புலவர்கள் கூறலாம். ஆனால் உன் இதழ்கள் பிரிந்து சேரும்போதெல்லாம், அந்தத் துடிப்பிலே, உன் இதயம் எனக்காக துடிக்கும் துடிப்பைத்தான் நான் காண்கிறேன்.
பளிங்கு நீரைப் போன்ற உன் வெள்ளை விழிகளிலே துள்ளி விளையாடும் கருவிழிகளைப் பார்த்துத் தானோ என்னவோ கவிஞர்கள் மீன் விழியாள் என்று வர்ணிக்கிறார்கள்.
ஆனால் என் முகத்தின் பிரதிபலிப்பை உன் கருவிழிகளிலே காணும்போதெல்லாம்- ஒரு வெள்ளை உள்ளத்திலே புகுந்துவிட்ட களங்கம் போல் தான் தெரிகிறது.
கைகளைப் பற்றி கற்றோர்கள் என்ன சொல்வார்களோ எனக்குத் தெரியாது.
ஆனால் ஐந்து விரல்களைக் கொண்ட உன் கைகள், அன்பு, பாசம், பரிவு, காதல் என்ற நான்கையும் அள்ளித்தரும் கருணையின் வடிவமாகவே எனக்கு காட்சியளிக்கின்றன.
ஐந்தாவது விரல் ஏன்? என்று கேட்கலாம். இவை அனைத்தும் உனக்கே உனக்கே என்று என்னை சுட்டிக்காட்டவே அந்த விரல்.
பொன்மலர்ப் பாதங்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..
உன் பாதங்களை நம்பி நீ நிற்கிறாய்
உன்னை நம்பி நான் நிற்கிறேன்.’
இப்படிப்போய் முடியும் அந்த வசனம்.
வசனங்களைப் படித்து முடித்த சிவாஜிக்கு ஒரே ஆச்சரியம். “டேய் குரங்கா! (சந்தோஷம் வரும் போதெல்லாம் சோவை அப்படி உரிமையுடன் அழைப்பார் சிவாஜி) நெஜமாவே நீ தான் எழுதினியா? பொம்பளைங்களை வர்ணிச்சு எழுத உனக்கு பிடிக்காதே.”
“எனக்கு பிடிக்காது தான், ஆனா உங்களுக்காக நான் ரொம்ப கஷ்டப்பட்டு யோசிச்சி எழுதிக்கிட்டு வந்திருக்கேன். எப்படி இருக்கு?”
“ரொம்ப நல்லா எழுதி இருக்கடா” என்ற சிவாஜி அந்த காட்சியில் நடித்தார்.
மதியம் செட் வாசலில் உட்கார்ந்து, அடுத்த காட்சிக்கான வசனத்தை உதவி இயக்குனரை படிக்கச் சொல்லி கேட்டுக்கொண்டிருந்தார், சிவாஜி.
அப்போது அப்பா (கண்ணதாசன்) அந்தப் பக்கமாக வந்தார்.
அவர் சிவாஜியைப் பார்த்ததும் “என்னய்யா, சோ கேட்டார்னு ஒரு காட்சிக்கு வசனம் எழுதித் தந்தேன். என் வசனத்தை படிச்சியா? நல்லா இருந்துச்சா?” என்று கேட்க, சிவாஜிக்கு சட்டென்று புரிந்துவிட்டது.
“நீ எழுதித் தந்தியா?, அதான பார்த்தேன். டேய் எங்கடா அந்த திருட்டுக் குரங்கன்?” என்று சிவாஜி கேட்க, சோ எஸ்கேப்.
– நன்றி: முகநூல் பதிவு