பாசம், நேசம், அன்பு, பண்பு என்று நெஞ்சையுருக்கும் ‘சென்டிமெண்ட்’ கதைகள் எத்தனையோ திரைப்படங்களாகியிருக்கின்றன. அக்கதைகளில் யாரோ ஒருவர் மோசமானவராக வாழ்ந்து பின் மனம் திருந்துவதாக அக்கதைகளின் முடிவு இடம்பெற்றிருக்கும்.
அவற்றில் இருந்து விலகி, மோசமான குணங்களை இயல்பாகக் கொண்ட ஒரு மனிதன் படுக்கையில் விழுந்து இறுதிவரை மனம் திருந்தாமல் மரணிப்பதைப் பேசுகிறது ‘அப்பன்’.
சன்னி வெய்ன், அலென்சியர் லே லோபஸ், பாலி வல்சன், அனன்யா, கிரேஸ் ஆண்டனி, ராதிகா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தை இயக்கியிருப்பவர் மாஜு.
ஆர்.ஜெயக்குமாருடன் இணைந்து அவரே திரைக்கதை, வசனம் நல்கியிருக்கிறார். சோனி லிவ் தளத்தில் இப்படம் காணக் கிடைக்கிறது.
அமில வார்த்தைகள்!
கட்டிலை விட்டு நகர முடியாமல், உத்தரத்தில் இருந்து தொங்கும் கயிற்றைப் பிடித்து எழுந்து படுக்கையில் இருந்தவாறே ஜன்னல் வழியே வெளியுலகத்தைத் தரிசிக்கும் நிலையில் இருக்கிறார் இட்டி (அலென்சியர்).
மகன் நூனு (சன்னி வெய்ன்), மனைவி குட்டியம்மா (பாலி வல்சன்), மருமகள் ரோஸி (அனன்யா), பேரன் ஆபெல் உடன் வசித்து வருகிறார்.
மனைவி, மகன் என்றில்லை, தான் சார்ந்த எவரிடமும் அன்பொழுகப் பேசும் வழக்கமில்லாதவர் இட்டி. ஒரு ஆண் தனது சுகங்களுக்காகத் தன்னைச் சுற்றியிருக்கும் அனைவரையும் எப்படி வேண்டுமானாலும் ஆட்டுவிக்கலாம் என்ற எண்ணமுள்ளவர்.
எந்நேரமும் அமிலத்தில் தோய்த்தெடுத்த வார்த்தைகளே அவரது வாயிலிருந்து வெளிப்படும். அவரால் காயப்படாத கணங்களே இல்லை எனும் அளவுக்கு குட்டியம்மாவும் நூனுவும் வாழ்ந்து வருகின்றனர்.
இட்டியால் வேதனைக்கு உள்ளான ஊராரில் பலர், வீடு புகுந்து அவரைக் கொல்லவும் தயாராக இருக்கின்றனர். ஆனால், நூனுவின் இருப்புதான் அவரது உயிரைக் காக்கிறது.
அதேநேரத்தில், உடல் நலிவுற்றிருக்கும் இட்டி விரைவிலேயே இறக்க வேண்டுமெனவும் அவரது குடும்பத்தினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இட்டியின் குயுக்தியினால் தனது சொந்தங்களை இழந்து, அவரது உடல் இச்சைகளைத் தீர்ப்பவராக வாழ்ந்து வருகிறார் ஷீலா (ராதிகா ராதாகிருஷ்ணன்).
ஒருநாள், தந்திரமாக ஷீலாவைத் தன் வீட்டுக்குள் நுழைய வைக்கிறார் இட்டி. அது குட்டியம்மாவையும் நூனுவையும் காயப்படுத்துகிறது.
அதனால், ஷீலாவை இட்டியோடு இருக்க வைத்துவிட்டு அவர்கள் வேறு வீட்டுக்குச் செல்வதென்று முடிவாகிறது.
அந்தச் சூழலில், இட்டியால் பாதிக்கப்பட்ட குரியகோஸ் சிறையிலிருந்து விடுதலையாகியிருப்பதாகத் தகவல் கிடைக்கிறது.
மீண்டும் பழையபடி நடமாடத் துடிக்கும் இட்டி, குரியகோஸிடம் இருந்து உயிர் பிழைக்க என்னென்ன உபாயங்களை மனதில் கொண்டிருந்தார் என்று நீள்கிறது கதை.
‘என்னதான் இருந்தாலும் அவர் என் அப்பா’ என்று குரு சோமசுந்தரம் குறித்து அவரது மகன் சொல்வதாக ‘ஆரண்யகாண்டம்’ படத்தில் ஒரு காட்சி உண்டு.
அதில் அந்த தந்தை பாத்திரம் வெகுளித்தனத்தின் உச்சமாக படைக்கப்பட்டிருந்ததைப் போல இதில் இட்டி எனும் பாத்திரம் குரூரங்களே வடிவான ஒரு ஆணைக் காட்டுகிறது.
உணர்வுகளுக்கு முக்கியத்துவம்!
ஒருபக்கம் தன் குரூரங்களால் இட்டி வதைக்க, இன்னொரு பக்கம் அவற்றைத் தாங்கிக் கொண்டு அல்லல்படுகின்றனர் அவரது குடும்பத்தினர்.
சாராயம் காய்ச்சி தான் மட்டுமே குடிப்பதுடன், அதனை எப்படித் தயாரிப்பது என்று சொல்லாத ஒரு நபராக வாழ்ந்தவர் இட்டி.
அவருடன் சேர்ந்து திரிந்த, அவரது குற்றங்களுக்குச் சாட்சியாக இருந்த வர்கீஸ் (அனில் சிவராம்) சொல்லும் வார்த்தைகளே இட்டியின் இயல்பு என்னவென்று முழுதாக வெளிக்காட்டிவிடும்.
முழுக்க முழுக்க சுயநலத்துடன் வாழ்ந்த ஒரு ஆணை, இறுதிக்காலத்தில் அவரது குடும்பம் எப்படி எதிர்கொள்ளும்? அதுவரையிலான அடக்குமுறையை எதிர்த்து ‘பழிக்குப் பழி’ வாங்கலாம்.
மாறாக, இக்கதையில் அதே கோரத்தோடு இட்டியின் பாத்திரம் வாழ்வதாகவும், அவரது மனைவியும் மகனும் அறம் தவறாமல் அவரைக் கண்ணும் கருத்துமாக கவனிப்பதுமாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது.
அதிகாரப்பூர்வமற்ற வகையில் இட்டியின் மகனாக வாழும் ஜான்சன் பாத்திரம் தொடங்கி வில்லனாக சித்தரிக்கப்படும் குரியகோஸ் வரை பலரும் இட்டியின் காமுறும் வேட்கையால் பாதிக்கப்பட்டவர்களாக காட்டப்பட்டிருக்கின்றனர்.
காட்சிகளாக அல்லாமல் வசனங்களாகவே தகவல்கள் இடம்பெற்றிருப்பதால் முகக்குறிப்புகளுக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார் இயக்குனர்.
அதேநேரத்தில், கதை நிகழுமிடம் ஒரு மலைப்பாங்கான கிராமம் என்பதற்கேற்ப சுற்றுப்புறத்தைக் காட்டுவதிலும் கவனம் காட்டியிருக்கிறார்.
இயக்குனரின் மனதிலிருந்த காட்சிகளுக்கு உருவம் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாப்பு.
ஒரேயொரு வீட்டைச் சுற்றியே காட்சிகள் நகர்ந்தபோதும், மிரட்சியையும் குரூரத்தையும் வெகுளித்தனத்தையும் இயலாமையையும் ரவுத்திரத்தையும் காட்டுவதில் நடிப்புக் கலைஞர்களின் உடல்மொழியோடு ஒருங்கிணைந்து செயல்பட்டிருக்கிறது ஒளிப்பதிவு.
கிரண் தாஸின் படத்தொகுப்பு ஒரே சீராக கதை சொல்வதில் வெற்றியைத் தந்திருக்கிறது.
கதாபாத்திரங்களின் மனம் பலவீனப்பட்டு தோற்றமளிக்கும் இடங்களில் மட்டுமே டான் வின்செண்டின் பின்னணி இசை சத்தங்களை மீறி ஒலிக்கிறது.
மெலிந்த தேகம்!
மிகச்சுலபமாகப் படமாக்கிவிடலாம் என்ற தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், இத்திரைக்கதையில் சில காட்சிகளைப் படமாக்க அதீத கவனம் தேவை. நுட்பமான சித்தரிப்புகள் தேவை.
உதாரணமாக, படுத்த படுக்கையாக கிடக்கும் இட்டியை அவரது தோற்றமே காட்டிக்கொடுக்க வேண்டும்.
அதற்கேற்ப, இப்படத்தில் மெலிந்த தேகத்துடன் தோன்றியிருக்கிறார் அலென்சியர். அவரது நடிப்புதான் இத்திரைக்கதையின் முதுகெலும்பு.
அலென்சியருக்கு அடுத்தபடியாக சன்னி வெய்ன், ராதிகா ராதாகிருஷ்ணன், அனன்யா, பாலி வல்சன் என்று ஒவ்வொருவரும் அருமையாக நடித்திருக்கின்றனர்.
இரண்டொரு காட்சிகளில் தலைகாட்டியவர்களும் கூட மிகநுணுக்கமான நடிப்பைத் தந்திருக்கின்றனர்.
‘ஜான்சன் இட்டிக்குப் பிறந்தவன்’ என்று நூனுவின் வீட்டில் பேச்செழுந்தால், அடுத்த காட்சியே அது உண்மை என்பது போல ஜான்சன் பாத்திரத்தின் உடல்மொழி வெளிப்படுகிறது.
தன் கணவனைத் தேடி வரும் பிற பெண்களை எதிர்கொள்ள முடியாமல் குட்டியம்மா தவிக்க, ஒரேநொடியில் கையிலும் வாயிலும் வெட்டுக்கத்திகளை ஏந்தி நிற்கிறார் ஷீலா.
இட்டியைப் போன்றவர்களைத் தவிக்கவிட்டுச் செல்வதே அவரைச் சார்ந்தவர்களுக்கு நிம்மதி பயக்கும் என்பதையும் ஷீலாவைக் கொண்டே வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். அது, முடிவு வரை தொடர்கிறது.
ஆண்மைத்தனம் என்ற பெயரில் குரூரங்களையும் குயுக்திகளையும் சுமந்துகொண்டு வாழும் எத்தனையோ பேர் இவ்வுலகில் உண்டு.
அவர்கள் அத்தனை பேரின் பிற்போக்கான மனநிலையையும் மற்றவர்களின் அன்பை சுமக்க முடியாத தகுதியின்மையையும் காண நேரும்போது மனம் வருந்தலாம்.
அல்லது இதே போன்றதொரு உணர்வைச் சிலர் கடந்த காலத்தில் கூட அனுபவித்திருக்கலாம்.
அவர்களனைவரும் இட்டியை ஏதோ ஒரு விதத்தில் தம்மோடு தொடர்புபடுத்திக் கொள்வர்.
வாழும் காலம் மட்டுமல்லாமல் மறைந்தபிறகும் வலிகளையும் வேதனைகளையும் விட்டுச் செல்லும் கல்மனம் கொண்டவர்கள் அத்தகைய நபர்கள். அவர்களது ஒருதுளியாக நம் நினைவில் நிறையச் செய்திருக்கிறது ‘அப்பன்’.
-உதய் பாடகலிங்கம்