நடிகர் ஆர்.எஸ். கார்த்திக் நாயகனாக நடித்திருக்கும் ‘போர்குடி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வீச்சருவா வீசி வந்தோம்’ எனத் தொடங்கும் பாடலுக்கான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு அர்ப்பணிக்கும் வகையில் இந்த பாடல் உருவாக்கப்பட்டிருப்பதாக படக் குழுவினர் தெரிவித்தனர்.
‘போர்குடி’ படத்தில் ஆர்.எஸ். கார்த்திக்கு ஜோடியாக ஆராத்யா நடித்திருக்கிறார்.
இவர்களுடன் சங்கர் தாஸ், அருண்மொழித்தேவன், மனோஜ் கண்ணன், செந்தில்குமரன், விஜயகுமார், ஜானகி அம்மாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற ‘வீச்சருவா வீசி வந்தோம்…’ எனத் தொடங்கும் பாடலின் வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டனர்.
பாடலாசிரியர் ஆர். தியாகு எழுதியிருக்கும் பாடலை, வி. எம். மகாலிங்கம் மற்றும் லட்சுமி ஜே.கே. ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.
பாடலைப் பற்றி நாயகன் கார்த்திக் பேசுகையில், “முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களிலிருந்து பாடல்கள் வெளியாகும் போது, அவை லிரிக்கல் வீடியோவாக இணையத்தில் வெளியாகும்.
ஆனால் எங்கள் படக் குழு முதன்முறையாக ‘வீச்சருவா வீசி வந்தோம்..’ எனத் தொடங்கும் பாடலின் வீடியோவை வெளியிடுகிறோம்.
இந்தப் பாடலை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை போற்றிடும் வகையில் உருவாக்கி இருக்கிறோம்.
அவரை போற்றும் வகையில் தமிழில் பாடல்கள் வெளியானதில்லை. இதன் காரணமாக ‘வீச்சருவா வீசி வந்தோம்..’ என்ற பாடலை அவருக்கு அர்ப்பணித்திருக்கிறோம்” என்றார்.