மழை கொட்டோ, கொட்டென்று கொட்டுகிறது. பாலாறு, காவிரி தொடங்கி தாமிரபரணி வரை ஆற்றோரக் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்குகின்றன!
இந்த நிலைமைக்கு என்ன காரணம்? இது இயற்கையின் குற்றமா? மனிதர்களின் குற்றமா? மழை நீரை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது? என்பது குறித்து விளக்குகிறார் மூத்த பொறியாளர் அ. வீரப்பன் பேட்டி.
தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்க தலைவராக உள்ள முனைவர் அ.வீரப்பன் நீர் மேலாண்மையில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றவர்.
தமிழ்நாட்டின் நீர், நில வளங்கள் குறித்த புள்ளி விபரங்களையும், கள நிலவரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் மூத்த பொறியாளர் மற்றும் ஆய்வறிஞர்! அவரது பேட்டியின் சாராம்சம் கீழே தரப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தற்போது மழை வெள்ளத்தால் பயிர்கள், குடியிருப்புகள் மூழ்கி தத்தளிக்கின்றன! வெள்ள நீரைத் தடுக்க பல்லாயிரக்கணக்கான மணல் மூட்டைகளை போடுகிறார்கள்!
ஆனால், அந்த ஆற்றோர பகுதிகளில் மணலை தாறுமாறாக அள்ளி இந்த வெள்ளத்திற்கு துணை போனதும் அதிகார மையங்கள் தாம்!
தமிழகத்தில் உள்ள ஆற்றோரப் படுகைகளில் மணல் அள்ளுவதில் கர்ண கொடூரமாக மணல் மாபியா கூட்டம் செயல்படுகிறது.
சிங்கப்பூரில் இருந்தும், மலேசியாவில் இருந்தும் குறைந்த விலைக்கு மணல் இறக்குமதி செய்ய வாய்ப்பிருந்தும் அதை தவிர்த்து ஆற்றோரப் படுகைகளை பள்ளத் தாக்குகளாக்குகின்றனர்.
மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரை சேமித்து வைத்தால் தண்ணீர் விஷயத்தில் தமிழகம் தன்னிறைவு கொண்ட மாநிலமாகத் திகழும் என நாங்கள் அரசுக்கு பல ஆலோசனைகள் வழங்கி வருகிறோம். துரதிஷ்டவசமாக அவை கவனம் பெறாமலே போய்விடுகின்றன.
தமிழகத்தில் உள்ள 85 அணைக்கட்டுகளையும், ஏரி, குளங்களையும் ஒரு மீட்டர் ஆழப்படுத்தினாலே போதும், அபாரமாக தண்ணீரை சேமிக்க முடியும். நிலத்தடி நீரும் அதிகமாகும். விவசாயக் கிணறுகள் நிறைந்து வழியும். பயிர்கள் செழிக்கும்!
தாமிரபரணியில் மழைக்காலங்களில் சராசரியாக 22 டி.எம்.சி நீர் அ நியாயமாக வீணாகிறது. அதை ராட்சஷ பம்ப் மூலம் எடுத்துச் சென்று ஏரி, குளங்களை நிரப்பலாம் என சொல்லி இருக்கிறோம்.
இது போன்ற திட்டங்களை செயல்படுத்தித் தான் கர்நாடகாவில் 11 லட்சம் ஏக்கராக இருந்த விளை நிலப்பரப்பை 22 லட்சம் ஏக்கராக மாற்றி உள்ளனர்.
காவிரி ஆற்று உபரி நீர் கடந்த சில மாதங்களாக கடலில் கலந்து கொண்டிருக்கிறது.” இப்படி வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை வறண்ட பகுதிகளுக்கு எடுத்துச் சென்று பாசனத்திற்காகவும் குடிநீருக்காகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இதற்காக 36,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தக்கூடிய பெரிய திட்டத்தை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.
வினாடிக்கு ஒரு லட்சம், இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் காவிரியில் இருந்து வீணாக கடலில் கலந்து கொண்டிருப்பதை பார்த்து நாம் அனைவரும் பதை பதைத்து நிற்கிறோம்.
கடந்த ஜூன் மாதம் முதல் தற்போது அக்டோபர் மாதம் இந்த நாள் வரை காவிரி ஆற்றில் இருந்து உபரி நீர் கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது.
வினாடிக்கு 11,400 கன அடி என்று நாம் கணக்கிட்டால் நாள் ஒன்றுக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் கடலுக்கு செல்லக்கூடிய அளவு. (ஒரு டிஎம்சி சென்னை மாநகர மக்களின் ஒரு மாத குடிநீர் தேவையே பூர்த்தி செய்யக் கூடியதாகும்).
கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நான்கு மாதங்களிலும் காவிரியில் இருந்து கடலுக்கு சென்று உள்ள தண்ணீரின் அளவு 333 டிஎம்சி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த மாதமும் தொடர்ந்து அடுத்து வருகிற இரண்டு மாதங்களும் மழைக்காலம் ஆகும். இந்த காலகட்டத்தையும் சேர்த்து கணக்கிட்டால் இந்த ஆண்டு முடிவதற்குள் 400 டிஎம்சி தண்ணீர் காவிரியில் இருந்து வெளியேறக்கூடும் என்று எதிர்பார்க்கலாம்.
உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி ஆற்றில் இருந்து கர்நாடக அரசு நமக்கு வருடத்திற்கு தர வேண்டிய தண்ணீரின் அளவு 177.25 டிஎம்சி ஆகும்.
இரண்டு ஆண்டுக்கும் அதிகமான அளவுள்ள தண்ணீர் இந்தக் குறுகிய காலத்தில் உபரிநீராக கடலுக்குச் செல்லும். கடலுக்கு செல்வது மட்டுமல்ல, சுற்றுவட்டார கிராங்களை வெள்ளத்தில் மூழ்கடிக்கிறது.
வெள்ளம் சென்று கொண்டிருக்கிற காவிரி ஆற்றின் ஓரமாக நாம் பயணிக்கும் போது, கரையில் இருந்து 10 கிலோமீட்டர் தாண்டி பல பகுதிகள் வறட்சியாக இருப்பதை பார்க்க முடியும்.
அங்குள்ள விவசாயிகள், இவ்வளவு தண்ணீர் வீணாகிறதே என்று வேதனையுடன் வேடிக்கை பார்க்கிறார்கள், இதில் கொஞ்சம் தண்ணீர் நமக்கு கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று ஏங்குகிறார்கள்.
காவிரியில் இப்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை விட அதிகமான அளவு தென்னிந்தியாவின் பெரிய நதியான கோதாவரியில் கடந்த காலங்களில் ஏற்பட்டது.
அந்த வெள்ள நீரை தங்கள் மாநிலத்தில் உள்ள வறட்சி பகுதிகளுக்கு வெற்றிகரமாக எடுத்துச் சென்று சாதித்து உள்ளார்கள், ஆந்திர மாநில மற்றும் தெலுங்கானா முதல்வர்கள். இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் முன் மாதிரியாக கொள்ளலாம் என்பதும் என் ஆலோசனையாகும்!
சந்திரபாபு நாயுடுவால் ஆந்திராவில் செயல்படுத்தப்பட்டுள்ள பட்டி சீமா திட்டமும் (Patti Seema project) தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர் ராவால் செயல்படுத்தப்பட்டுள்ள காளீஸ்வரம் திட்டமும் (kaleshwaram project) தாம் அவை.
பட்டி சீமா திட்டத்தின் மூலம் கோதாவரி ஆற்றின் வெள்ள நீர் கிருஷ்ணா டெல்டாவுக்கு கொண்டு கொண்டுவரப்பட்டு விவசாயத்திற்கு செம்மையாக பயன்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டங்களை குழாய்கள் மூலம் நீரேற்றம் செய்வதன் அடிப்படையில் (Lift irrigation) மிக விரைவாக நிறைவேற்றியுள்ளனர்.
திறந்த கால்வாய் திட்டத்திற்கு நிறைய நிலம் கையகப்படுத்த வேண்டி இருக்கும். நீர் ஆவியாகும். வழி நெடுக மோட்டார் போட்டு நீர் எடுப்பார்கள். சான்றுக்கு, கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் கிருஷ்ணா – கங்கா கால்வாய்.
அங்கு 2000 கன அடி திறந்து விட்டால் நமது எல்லைக்கு வரும் போது 800 அடியாகத்தான் இருக்கும். கடைமடை பகுதிகளுக்கு உரிய காலத்தில் உரிய நீர் வந்து சேராது. ரயில்வே பாதைகள், சிற்றாறுளைக் கடக்க வேண்டி வரும்போது குறுக்கு கட்டுமானங்கள் கட்ட வேண்டி இருக்கும்.
திட்டம் நிறைவேறுவதற்குள் நிறைய செலவும் நீண்ட காலமும் ஆகும். எனவே, திறந்த கால்வாய் சிறந்த திட்டம் அல்ல.!
சுமார் 7 அடி விட்டம் கொண்ட உறுதியான ராட்சத கான்கிரீட் குழாய்களை பயன்படுத்தி காவிரி ஆற்றின் உபரி நீரை ஆற்றின் இரு கரைகளில் இருந்தும் நீண்ட தொலைவுக்கு எடுத்துச் செல்லலாம்.
இந்த “பைப்” அமைப்பதற்கு 15 அடி அகலம் கொண்ட பாதையே போதுமானது. தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரமாக உள்ள இடத்தை இதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.
மிக விரைவாக இந்தத் திட்டத்தை முடிக்க முடியும். ஆந்திர மாநிலத்தில் கோதாவரியையும் கிருஷ்ணாவையும் இணைக்கும் பட்டி சீமா திட்டம் விரைந்து முடிக்கப்பட்ட முன்னுதாரணம் உள்ளது.
மேட்டூர் அணைக்கு கீழே ஏகபாளையத்தில் தொடங்கி கீழணை வரை ஆறு அணைகளில் இந்த திட்டத்தை மேற்கொள்ள முடியும்.
காவிரியில் வெள்ளக் காலங்களில் 46 டிஎம்சி அளவு உபரி நீரை இப்படி பயன்படுத்துவதற்கு ரூபாய் 36 ஆயிரத்து 500 கோடியில் திட்டம் தயாரித்து தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளோம்.
எந்தெந்த வழியாக குழாய்கள் பதிக்கப்பட வேண்டும், எந்தெந்த ஊர்கள் பயன்பெறும் உள்ளிட்ட விவரங்களையும் தெரிவித்திருக்கிறோம்.
தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தில் அனுபவம் நிறைந்த திறமை மிகுந்த மூத்த பொறியாளர்கள் ஏராளமாக உள்ளனர். கட்டணம் பெறாமல் தமிழக அரசுக்கு உதவுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
காவிரி ஆற்றில் நான்காண்டுகளுக்கு ஒரு முறை 100 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் கடலில் வீணாவதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
எனவே தமிழக அரசு காவிரி ஆற்று வெள்ள நீரை வறட்சி பகுதிகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்.
இந்தத் திட்டத்தை நபார்டு வங்கி, எல்.ஐ.சி போன்ற நம்முடைய அரசு நிறுவனங்களிடம் கடன் பெற்று நிறைவேற்ற வேண்டும்.
உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடம் கடன் வாங்கும் போது நிறைய கமிஷன் கொடுக்க வேண்டி இருக்கிறது. மக்கள் வரிப்பணம் இப்படி வீணாவதை அனுமதிக்க கூடாது.
இந்தத் திட்டத்தின் வடிவமைப்பு (Design), கட்டுமானம் (Build), இயக்குவது (Operation), டிரான்ஸ்ஃபர் (Transfer) உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் பொறுப்பை ஒரே நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த ஏற்பாட்டின் மூலம் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க முடியும். இந்த நிறுவனத்தில் தனியார் மற்றும் அரசு இரண்டும் அங்கம் வகிக்க வேண்டும்.
இத்தருணத்தில் மீண்டும் இந்த எச்சரிக்கையை அழுத்தமாக சொல்கிறோம். காவிரி உள்பட ஆற்று படுகைகளில் மணல் அள்ளுவது அடியோடு தடுக்கப்பட வேண்டும். மணலுக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய மாற்றுக் கட்டுமான பொருட்கள் வந்துவிட்டன.
மணல் அள்ளுவது தொடர்ந்தால் நீர் வளம், நிலவளம், சுற்றுச்சூழல் ஆகியவை சீர் செய்ய முடியாத சேதாரத்தை சந்திக்கும். ஆகவே, கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
”நாள்தோறும் நாடுக மன்னன், வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு” (திருக்குறள் 520)
தமிழ்நாடு பொதுப்பணி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்ட போதிலும், தமிழக நலனில் அக்கறை கொண்டு பல அருமையான திட்டங்களை முன் வைத்திருக்கும் அ.வீரப்பன் போன்ற மூத்த பொறியாளர்களின் ஆலோசனைகளை தமிழக அரசு பரிசீலித்து, செயல்படுத்த வேண்டும்.
இனி வரும் காலங்களில் காவிரி உள்ளிட்ட ஆறுகளில் ஏற்படும் வெள்ள நீர் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்பட வேண்டும்.
பேட்டி : ம.வி.ராஜதுரை
நன்றி: அறம் இணைய இதழ்