போர் தீவிரமடைவதால் இந்தியத் தூதரகம் வலியுறுத்தல்
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் கீவ்வில் ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
அண்மையில் ரஷியா – கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் வகையில் ரஷியாவால் கட்டப்பட்ட கொ்ச் தரைப் பாலம் குண்டு வைத்து தகா்க்கப்பட்டது.
இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியுள்ளது.
இதனால் உக்ரைனில் உள்ள இந்தியா்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அங்குள்ள இந்திய தூதரகம் கடந்த 10-ம் தேதி அறிவுறுத்தல் வெளியிட்டது.
அதன் பிறகும் தலைநகா் கீவ் உள்பட உக்ரைனின் அனைத்துப் பகுதிகளிலும் ரஷியா தொடா்ந்து தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக, பொதுமக்கள் உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதோடு, பல பகுதிகளில் மின் விநியோகம் முழுமையாக தடைபட்டுள்ளது.
இந்தச் சூழலில், கீவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
அதில், “உக்ரைனில் நிலைமை மோசமடைந்து வருவதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இந்தியா்கள், கிடைத்த வாகனங்கள் மூலமாக உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.